

சென்னை: இயற்கை பேரிடர்களால் இந்தியாவில் நடப்பாண்டில் தற்போது வரை 1098 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தொடர்ந்து இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்றன. எதிர்பாராத நேரத்தில் அதிக மழை, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐபிசிசி என்றழைக்கப்படும் காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி இனி ஒவ்வொரு ஆண்டும் பேரிடர்கள் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், அடுத்த பத்தாண்டுகளில் உலகின் சராசரி வெப்ப நிலையானது 1.5° செல்சியை எட்டிவிடும். உலகம் மேலும் வெப்பமடைவதால் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் திறனை நிலம் மற்றும் கடல் சூழலியல் அமைப்பு இழந்து வருகிறது. உலக நாடுகள் இந்த வெப்பமயமாதலைத் தடுக்க தங்களது பசுமை இல்ல வாயுக்களின் நிகர உமிழ்வை பூஜ்ய நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், இயற்கை பேரிடர்கள் காரணமாக இந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி வரை நாடு முழுவதும் 1098 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் அதிகமாக அசாம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 196 பேர் மரணம் அடைந்துள்ளனர். அடுத்தபடியாக மத்தியப் பிதேசத்தில் 120 பேர், குஜராத்தில் 114 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தக் காலத்தில் 59,598 கால்நடைகள் இயற்கை பேரிடர் காரணமாக மரணம் அடைந்துள்ளன. 3,35,310 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 3,41,671 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.