

இந்தியாவில் புதிதாக 15 சதுப்புநிலங்களுக்கு உலக முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம், 64 ராம்சர் சதுப்புநிலங்களைக் கொண்ட ஒரே தெற்காசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சரி, இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடக்கூடிய அளவுக்கு சதுப்புநிலங்கள் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன?
சுற்றுச்சூழல் பலன்கள்: சதுப்புநிலங்கள் என்பது கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர்களுக்கு குறைவான ஆழம் கொண்ட பல்வேறு வகைப்பட்ட சூழல் தன்மைகளைக் கொண்ட நீர் நிலைகளாகும்.
நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, உயரும் கடல் நீரை உள்வாங்க, மாசு மற்றும் திடக் கழிவுகளைக் கட்டுப்படுத்த, கரியமில வாயு மற்றும் மீத்தேனை உறிஞ்ச, நீர் மகரந்தச் சேர்க்கை நடைபெற, மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்த, மண் அரிப்பைத் தடுக்க, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்தைத் திடப்படுத்தி வளப்படுத்த, புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்த, வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க சதுப்புநிலங்களின் இருப்பு மிக முக்கியமானது.
இத்தகைய சுற்றுச்சூழல் சார்ந்த பலன்களால் பொருளாதாரம் உயர்ந்து மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. அந்தவகையில் சதுப்பு நிலங்களை நாட்டின் ‘மூலதனம்’ என்று சொல்லலாம்.
பொருளாதார பலன்கள்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் நிதியுதவியின் கீழ் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட 80 சதுப்புநிலங்களின் தற்போதைய பொருளாதார மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.4,386 கோடியாக கணக்கிடப்பட்டது. ஆனால், இவற்றை சீரமைப்பு செய்து முறையாகப் பராமரிக்கும்பட்சத்தில் அவற்றின் பொருளாதார மதிப்பு ரூ.17,468 கோடியாக உயரக்கூடும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அறியாமையின் விளைவு: பிரச்சினை என்னவெனில், மேற்கூறப்பட்ட சுற்றுச்சூழல் பலன்களின் பொருளாதார மதிப்பு சமூகத்திற்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் சரிவர தெரியாதததால் பெருவாரியான சதுப்புநிலங்கள் அளவுக்கு அதிகமாகவும், அவற்றின் தன்மைக்கு மாறாகவும் பயன்படுத்தப்பட்டு, இன்று அவை பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பெருநகரத்தில் உள்ள ஒரே சதுப்புநிலம் என்ற பெருமையைக் கொண்ட சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், 1960-களில் சுமார் 6000 ஹெக்டர் பரப்பளவில் இருந்தது.
தற்போது அது 700 ஹெக்டருக்கும் குறைவான நிலப்பரப்பையே கொண்டுள்ளது. இதிலும்கூட, குப்பையைக் கொட்டுவது, திரவக் கழிவுகளை கலப்பது போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. இவற்றின்மூலம், எவ்வளவு மதிப்புள்ள சுற்றுச்சூழல் பலன்களையும் பொருளாதார பலன்களையும் சமூகம் இழந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்!
> இது, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் லி.வெங்கடாசலம் எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்