

காலநிலை மாற்றத்தின் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் மட்டும் கடும் வெப்பத்திற்கு 1000-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 19, 2022) அன்று 104 ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இது அந்த நாட்டில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச வெப்பமாகும். தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப நிலையினால், பொருளாதார நெருக்கடிகளும், பாதிப்புகளும் ஏற்படும் என்கிறார் அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியரான டெரெக் லெமோயின்.
இது தொடர்பாக டெரெக் செய்த ஆராய்ச்சியில், கடுமையான வெப்பத்தினால் நான்கு வழிகளில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிறார். அதைதான் இப்பகுதியில் காண இருக்கிறோம்,
வெப்பத்தினால் வளர்ச்சி பாதிப்பு: உண்மையில் அதீத வெப்ப நிலைகள் பொருளாதாரத்தை நேரடியாக தாக்குகின்றன. 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அமெரிக்க மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒப்பீட்டளவில் கோடை காலத்தில் மெதுவான வேகத்தில் வளரும் என்று கண்டறியப்பட்டது. 1 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் (0.56 செல்சியஸ்) ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 0.15 முதல் 0.25 சதவீத புள்ளிகள் குறைகிறது என்று தரவுகள் காட்டுகிறது.
கட்டுமானம் போன்ற தொழில்களில் வேலை செய்பவர்கள் வெப்பம் அதிகமாக இருக்கும் போது குறைந்த மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். வெயில் அதிகமாக இருக்கும் போது உற்பத்தி குறைவாக இருக்கும். அதீத வெப்பத்தால் சில்லறை வருத்தம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி குறைகிறது.
விவசாய பொருட்கள் பாதிப்பு: அதிக வெப்பம் பயிர்களின் உற்பத்தியை பாதிக்கிறது. 85 - 90 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் பயிர்கள் நன்கு வளர்கின்றன. அதுவே வெப்பநிலை 90 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும்போது பயிர்கள் கருகுகின்றன. பருத்தி, சோயா பீன்ஸ், சோளம் போன்ற பயிர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். வெப்பநிலை அதிகரிப்பு சில நேரங்களில் விளை நிலத்தையே பாதித்து விடுகின்றது.
2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நிலவிய அதீத வெப்பம் காரணமாக கோதுமை உற்பத்தி பாதித்தது. இதனால் உலகம் முழுவதும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆற்றல் பயன்பாடு அதிகரிப்பு: கோடை வெப்பம் அதிகமாகும் காலங்களில் மின்சார தேவை உட்பட ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கிறது. ஒரு நாள் 90 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் உண்டாகிறது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இது வருடாந்திர மின்சார பயன்பாட்டை 0.4% அதிகரிக்கிறது என 2011-ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகமான வீடுகளில் ஏசி உள்ளிட்ட சாதனங்கள் இருப்பதால், வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஆற்றல் பயன்பாடு அதிகமாகிறது.
மேலும் ஏசி போன்ற சாதனங்களை அதிகமாக பயன்படுத்தும் போது அவை ஆற்றலை எடுத்துக் கொண்டு பசுமை இல்லா வாயுவின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. ஏசியை அதிக அளவு பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் உலகின் வெப்ப நிலை அதிகமாகத்தான் வழிவகுக்கும்.
குழந்தைகளின் கல்வி பாதிப்பு: அதீத வெப்பம் குழந்தைகளின் கற்கும் திறனை பாதிக்கிறது. இதன் காரணமாக மாணவர்களிடையே சுணக்கம் ஏற்பட்டு மதிப்பெண்கள் குறைகின்றன.
தீவிர வெப்பத்தின் தாக்கம், உண்மையில் நமது ஆற்றலையும், வருமானத்தையும் குறைத்து பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் தொடர்ந்து கடும் தீவிர இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. எனவே, இவற்றை உணர்ந்து பூமி வெப்பமாதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை உலக நாடுகளின் தலைவர்கள் உடனடியாக எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலக நாடுகளின் தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்திருப்போம்.
உறுதுணை கட்டுரை: The Conversation