

சென்னை: கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்’ திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.77.35 கோடி நிதி ஒதுக்கி, தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு சமீபத்தில் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்கம் தொடங்க ரூ.3.80 கோடி ஒதுக்கி அவர் தற்போது அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்கங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைவராக இருப்பார். மாவட்ட காலநிலைஅதிகாரியாக மாவட்ட வன அலுவலர் இருப்பார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திட்டப் பணியிலும், காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என மாவட்ட இயக்கம் ஆராய வேண்டும். காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம், மின்வாகனம் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் காலநிலை மாற்ற தணிப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.