

இந்தியாவில் டெலிவரி நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தாதவர்கள் மிக குறைவு என்றுதான் கூறவேண்டும். பெருநகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை இன்று அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
2030-ல் இந்தியாவில் இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு 350 பில்லியன் அமெரிக்கா டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நாம் ஆடர் செய்த பொருட்களை வீடுகளின் வாயிலில் வந்து டெலிவரி செய்கின்றன. இதற்கு இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது மேட்டார் வாகனங்கள்தான். நாம் சாலையில் செல்லும்போது நமது கண்ணில் ஏதாவது ஒரு டெலிவரி நிறுவனத்தின் வாகனம் கண்ணில் பட்டுவிடும்.
இப்படி சாலையில் பறக்கும் இந்த வாகனங்களால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக ‘ஸ்டாண்ட் எர்த்’ (Stand earth) நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளுக்கு ‘க்ளீன் மொபைலிட்டி கலெக்டிவ்’ (Clean Mobility Collective) அமைப்பு சான்றளித்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், பெடிக்ஸ், டிஎச்எல் உள்ளிட்ட முன்னணி 6 நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்த 6 நிறுவனங்களுக்காக இயக்கப்படும் வாகனங்களின் மட்டும் 4.5 மெகா டன் கார்பன் உமிழ்வதாக தெரியவந்துள்ளது. இது 10 லட்சம் பெட்ரோல் வாகனங்கள் ஓராண்டுக்கு வெளியிடும் கார்பன் உமிழ்வுக்கு இணையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலிவரி வாகனங்களின் மொத்த கார்பன் உமிழ்வில் 6 பெரு நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 66 சதவீதம் என்று தெரியவந்துள்ளது.
இதில் இந்தியாவில் இயங்கும் அமேசான், பிளிப்கார்ட், டிடிடிசி, புளு டார்ட், இ காம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் இயங்கும் விநியோக வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் அளவானது பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஒரு பொருளை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க இயக்கப்படும் விநியோக வாகனம் சராசரியாக 285 கிராம் கார்பன் வாயுவை வெளியேற்றுகிறது. இது சர்வதேச நாடுகளின் சராசரியான 204 கிராம் என்ற அளவில் இருந்து 40 சதவீதம் அதிகம் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து க்ளீன் மொபைலிட்டி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "இந்தியாவில் வளர்ச்சியடைந்த நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட் 2030-ல் தன்னுடைய டெலிவரி வாகனங்களை முழுமையாக, மின்சார வாகனங்களாக மாற்றுவது என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் டெலிவரியால் ஏற்படும் கார்பன் உமிழ்வை முற்றிலும் குறைப்பதற்கான கொள்கைகளையும் வகுக்க தொடங்கியுள்ளன.
மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்காக தினசரி இயக்கப்படும் லட்சக்கணக்கான வாகனங்கள் காற்று மாசை அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க, விநியோக நிறுவனங்களால் ஏற்படும் காற்று மாசை குறைக்க உரிய திட்டமிடுவது மிகவும் அவசியம்" என்றார்.
நமது வாழ்க்கை முறை எளிமையான மாற்ற இதுபோன்று பல தொழில்நுட்பங்கள் உதவி புரிந்தாலும், அதனால் இப்போது நன்மை கிடைத்தாலும் எதிர்காலத்தில் தீமைகள்தான் அதிகம் உள்ளது என்பது தொடர்ந்து உண்மையாகி வருகிறது.