

சிகாகோ பல்கலைக்கழகம் இந்தியாவில் காற்று மாசுபாடு தொடர்பாக நடத்திய ஆய்வை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வின்படி டெல்லியில் வசிப்பவர்களின் ஆயுள் காலம் 10 வருடமும் நாட்டின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களின் ஆயுள் காலம் 5 வருடமும் குறையலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, காற்று மாசை குறைக்க அனைத்து நகரங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்தியாவில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் (National clean air programme) மூலம் பெரு நகரங்களில் காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், காற்றில் உள்ள மாசுவை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி காற்றின் தரத்தை கண்காணிக்கவும், சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதை உறுதி செய்யும் பல்வேறு நகரங்களில் நிகல்நேர காற்று மாசு கண்காணிப்பு மானி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, பாட்னா, ஆக்ரா உள்ளிட்ட 10 நகரங்கள் காற்றின் தரம் பாதுகாப்பாக இல்லாத முதல் 10 நகரங்களாக கண்டறியப்பட்டு, இந்த நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கருவிகள் மூலம் கோடை காலத்தில் 10 நகரங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த நகரங்களில் காற்று எந்த நிலையில் உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.
இதில் சென்னையில் மட்டுமே காற்றின் தரம் பாதுகாப்பான நிலையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில், கொடுங்கையூர், அரும்பாக்கம், மணலி, வேளச்சேரி, ஆலந்தூர், ராயபுரம் மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் காற்று மாசு நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்படுகிறது.
இதில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் காற்றில் நுண்துகள் PM2.5 பாதுகாப்பான நிலையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதைப்போன்று PM10 துகள்களின் அளவு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் பாதுகாப்பான அளவிலும், மார்ச் மற்றும் மே மாதத்தில் பாதுகாப்பற்ற அளவிலும் இருந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 10 நகரங்களில் சென்னையில் மட்டும் தான் காற்றின் தரம் பாதுகாப்பு என்ற நிலையில் இருந்துள்ளது.
குறிப்பாக, கோடை காலத்தில் நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக இருக்கும். கடும் வெளியில் உள்ளிட்ட பல காரணங்களுக்காக காற்று மாசு அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில் காற்று மாசு குறைவாக இருக்கும். ஆனால் இந்தாண்டு சென்னையில் கோடை காலத்திலும் காற்றின் தரம் பாதுகாப்பான நிலையிலும், காற்று மாசு குறைவாகவும் இருந்தது தெரியவந்துள்ளது.