

காலநிலை மாற்றத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை விண்வெளி சுற்றுலா ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் புவி வெப்பமடைதலில் இதன் பங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலமாக விண்வெளி சுற்றுலா குறித்த பேச்சு உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. பயணங்கள் மூலம் புதுப்புது இடங்களுக்கு விசிட் அடித்து விட்டு வீடு திரும்பும் பயண பிரியர்களுக்கு ‘இங்கு செல்ல வேண்டும், அங்கு செல்ல வேண்டும்’ என மிகப்பெரிய லிஸ்ட் இருக்கும். அது அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப உள் நாடு, உலக நாடு என அமைந்திருக்கும். இந்நிலையில், பயண பிரியர்களுக்கு புதிய ஆப்ஷனாக அமைந்துள்ளது விண்வெளி சுற்றுலா. அதவாது விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்று வருவது தான் இந்த சுற்றுலாவின் அடிப்படை.
பெரும்பாலும் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வர முடியும் என்ற நிலையை மாற்றி அமைத்துள்ளன சில தனியார் நிறுவனங்கள். இந்த நிறுவனங்களை விண்வெளிக்கு உலா சென்று வர உதவும் டூர் ஆப்பிரேட்டர்கள் என்றும் சொல்லலாம். விர்ஜின் காலக்டிக், ப்ளூ ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வர உதவி வருகிறது.
இதில் சிறிய திருத்தம் என்னவென்றால் இப்போதைக்கு பணம் படைத்த செல்வந்தர்கள் மட்டுமே சென்று வரும் சுற்றுலாவாக உள்ளது விண்வெளி சுற்றுலா. வரும் நாட்களில் அதற்கான கட்டணங்கள் மேலும் குறையலாம். அதனால் சாமானியரும் மைக்ரோ கிராவிட்டியில் விண்வெளியில் மிதக்கலாம்.
இத்தகைய சூழலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் கல்விக் கூட ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதாவது ராக்கெட்டுகள் வெளியிடும் கார்பன் துகள்கள் காலநிலை மாற்றத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 வாக்கில் ஏவப்பட்ட 103 ராக்கெட்டுகளால் ஏற்பட்ட தாக்கத்தின் அடிப்படையில் இந்த ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் விண்வெளி சுற்றுலா தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருங்கால திட்டங்களால் மேலும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு ராக்கெட் ஏவுதல் மூலம் ஓசோன் படலத்தில் ஒரு சிறிய அளவு தான் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும். ஆனால் வரும் நாட்களில் விண்வெளி சுற்றுலா அதிகரிக்கும் போது ஓசோன் படலத்திற்கு நிச்சயம் பாதிப்புகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த உடனடியாக அதற்கான நடைமுறைகளை விண்வெளி சார்ந்த தொழில் துறை முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.