

காற்று மாசு மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. உலகத்தில் உள்ள 99 சதவீத மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பதிவாகும் 6-இல் ஒரு மரணத்திற்கு மாசு காரணமாக உள்ளதாக புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று மாசு காரணமாக அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. இந்நிலையில், காற்றின் தரத்தினால் மனித வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மாசு அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
இந்திய நிலவரம்: இந்த ஆய்வின் படி காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்களின் ஆயுள் 10.1 ஆண்டுகளும், உத்தரப் பிரதேச மக்களின் ஆயுள் 8.9 ஆண்டுகளும், பிஹார் மக்களின் ஆயுள் 7.9 ஆண்டுகளும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிலவரம்: குறிப்பாக தமிழகத்தில் வாழும் மக்களின் ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 2.53 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 0.5 ஆண்டுகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை குறையும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த மாவட்டங்களில் வாழும் மக்களின் ஆயுட்காலம் காற்று மாசு காரணமாக குறையும் என்று தெரியவந்துள்ளது. இதனைத் தவிர்த்து 18 மாவட்டங்களில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 1 முதல் 2 ஆண்டுகள் வரை குறையும்.
அதன்படி கோவை 1.69, கடலூர் 1.83, திண்டுக்கல் 1.86, கன்னியாகுமரி 1.39, மதுரை 1.85, நாகை 1.74, பெரம்பலூர் 1.81, புதுக்கோட்டை 1.78, ராமநாதபுரம் 1.77, சிவகங்கை 1.82, தஞ்சாவூர் 1.92, தேனி 1.50, திருவாரூர் 1.86, தூத்துக்குடி 1.81, நெல்லை 1.66, வேலூர் 1.94, விழுப்புரம் 1.89, விருதுநகர் 1.54 ஆண்டுகள் ஆயுள் காலம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 0.54 ஆண்டுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன? மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனங்கள்தான் காற்று மாசுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நம் ஆயுள் காலம் குறைய நாம் ஓட்டிச் செல்லும் வாகனங்கள்தான் காரணம் என்பதை உணர்ந்தால் மட்டுமே இந்த மாசினை குறைக்க முடியும்.