

மனிதன் உருவாக்கும் குப்பை மனிதர்களின் உடல் நலத்துக்கு பெரிய அளவு தீங்கை விளைவித்து வருகிறது. குப்பைகளை ஒரே இடத்தில் பல ஆண்டுகள் கொட்டி வைப்பதால் அதனை சுற்றியுள்ள மக்களின் உடல் நலன் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதற்கு சென்னையில் உள்ள குப்பை கிடங்குகள்தான் சிறந்த உதாரணம்.
எனவே, குப்பைகளை அறிவியல் ரீதியாக மறுசுழற்சி செய்வது மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக பல நாடுகள் திடக்கழிவு மேலாண்மை என்று அழைக்கப்படும் குப்பை மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
குப்பைகளை பல்வேறு முறைகளில் மறுசுழற்சி செய்து அதை மீண்டும் பயன்படுத்துவது தொடர்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக சுழற்சி பொருளாதார முறையில் குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் ஏதாவது ஒரு முறையில் மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முறைகளில் அதிக அளவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் ரூ.70 கோடி வருவாய்: அந்த வகையில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து இதுவரை ரூ.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது சென்னை நகரம். இவ்வளவு பெரிய தொகையை ஈட்டியது என்பதை பார்க்கலாம்.
நகர்புறங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவு கழிவு நீரை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்களே அதை சுத்திகரிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதன்படி சென்னையில் பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் மூலம் ரூ.70.77 கோடி வருவாய் குடிநீர் வாரியத்திற்கு கிடைத்துள்ளது. சென்னை மாநகரில் இருந்து தினமும் 950 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீர் வீடுகளில் இருந்து பாதாள சாக்கடை வழியாக கழிவு நீரேற்று நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும்.
இந்தியாவிலேயே முதல் முறையாக கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட தொடங்கியது. தற்போது கொடுங்கையூர், கோயம்பேடு, பெருங்குடி, நெசப்பாக்கம் ஆகிய 4 இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகிறது. கழிவு நீர் நீரேற்று நிலையத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி முதல் நிலை, இரண்டாம் நிலை சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சுத்திகரிப்பு பணிகளின் போது கழிவுகளில் இருந்து பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த பயோ கேஸ் மின்சாரமாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தபடுகிறது. சென்னையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தினசரி 498 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இந்த கழிவு நீரில் இருந்து 7022 கிலோ வாட் பயோ கேஸ் கிடைத்துள்ளது. இந்த பயோ கேஸ் மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதன்படி 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 14,88,24,010 கிலோ வாட் மின்சாரம் இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சாரம் குடிநீர் வாரியத்தின் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியதன் மூலம் 70.77 கோடி மின்சார கட்டணத்தை வாரியம் சேமித்துள்ளது.