

புதுடெல்லி: சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளையும் திட்டங்களையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மண் வளம் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையி்ல ‘மண் காப்போம் இயக்கம்’ என்ற இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கிய சத்குரு, மோட்டார் சைக்கிளில் 27 நாடுகளில் 100 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று அவரது பயணத்தின் 75-வதுநாள் ஆகும். இந்நிலையில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம் இயக்கம்’ சார்பில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா பல்வேறு தீவிர முயற்சிகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் போன்ற பல திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது.
முன்பு நமது விவசாயிகளுக்கு மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் கங்கை கரையில் இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு சாதகமான எரிபொருள் பயன்பாட்டில் இந்தியாஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்புக்கான இலக்கை 5 மாதத்துக்கு முன்பே இந்தியா எட்டிவிட்டது. இதன்மூலம் 27 லட்சம் டன் கார்பன் வெளியேற்றம் குறைந்துள்ளது. ரூ.41 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி கையிருப்பு சேமிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு என்பது மிகவும் குறைவு என்றாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் திட்டங்கள் பல்லுயிர் அதிகரிப்பு மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் வனப்பகுதி பரப்பு 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது. காடுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.