ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தின சிறப்புக் கட்டுரை | இருப்பது ஒரே ஒரு பூமிதான்!

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தின சிறப்புக் கட்டுரை | இருப்பது ஒரே ஒரு பூமிதான்!
Updated on
5 min read

பருவநிலை மாற்றம், இயற்கைச் சீரழிவு, மாசு – போன்ற மனித செயல்பாடுகள் நாம் வாழும் இந்த பூமியை நாளுக்கு நாள் அபாய நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கின்றன. அதே வேலையில், பல கோடி மக்கள், உணவு, உறைவிடம், உடல்நலன், வேலைவாய்ப்பு, கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் தவிக்கின்றனர். அண்மையில் கோவிட் பெருந்தொற்று நமது நிலையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

இந்த நிலையை மாற்ற ஒரே வழி அனைவருக்கும் நியாயமான, சமத்துவமான எந்த ஒரு ஏற்றத்தாழ்வும், பாகுபாடும் இல்லாத இயற்கையோடு இயைந்த சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த பூமியை மென்மேலும் சீரழிப்பதை விட்டுவிட்டு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய ஆவன செய்யவேண்டும். இருப்பதை பாதுகாத்து நாம் அழித்ததை மீளமைத்து நாம் அனைவரும் வாழ வழிவகை செய்யும் வளங்குன்றாத எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

அரசின் கடமைகள்

தற்போது உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகள்: பருவநிலை மாற்றம், இயற்கைச் சீரழிவும் பல்லுயிர் பன்மைய இழப்பும், மாசுபாடும் குப்பைகளும். அரசாங்கத்தினால் மட்டுமே தமது கொள்கை முடிவுகளால் ஒரு நாட்டின் பல்வேறு படிநிலைகளில் இந்த மூன்று தலையாய பிரச்சனைகளை போக்க நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

பசுங்குடில் வாயு வெளியீட்டை உடனடியாக குறைத்தல்: பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களை தவிர்க்க பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டை தற்போதுள்ள அளவிலிருந்து 2030க்குள் 45 விழுக்காடு குறைக்க வேண்டும். இந்த அளவு 2050ல் நிகர இன்மைநிலை (Net Zero) அடையவேண்டும். உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையைப் பின்பற்றி போர்க்கால அடிப்படையில் செயலாற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இயற்கை பாதுகாப்பும், மீளமைப்பும்: உலக நாடுகள் அனைத்தும் இயற்கையான வாழிடங்களை பாதுகாத்து, அவற்றை மென்மேலும் சீரழிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, நிலத்திலும், கடலிலும் உள்ள சீரழிந்த சூழலமைப்புகளில் அறிவியல் பூர்வமான மீளமைப்புப் (restoration) பணிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். எதிர்கால மீளமைப்புத் பணிகள் சிறந்த செயல்திட்டங்களையும், தேவையான பொருளாதார உதவிகளையும் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

காற்றையும், நீரையும் தூய்மைப்படுத்துதல்: காற்று மாசு பருவநிலை மாற்றத்திற்கு வித்திடுவதொடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மக்களை சிறுவயதிலேயே மரிக்கச் செய்கிறது. உலகின் பல பகுதிகளில் நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. அதேவேளையில் பிளாஸ்டிக், இரசாயன கழிவுகள், குப்பைக் கழிவுகள் யாவும் இன்னும் ஆற்றிலும், கடலிலும் கலந்து அப்பகுதிகளை மாசு படுத்தி அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களை கொல்லுகின்றது. இது மட்டுமல்ல பல லட்ச டன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நீர்ச் சூழலில் கலந்துள்ளதால் மனிதர்களின் உடல் நலத்திற்கும் மோசமான தீங்கினை விளைவிக்கின்றது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றுலுமாக தடை செய்தல், முறையான கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல், காற்று மாசுபாட்டை குறைக்க WHOவின் காற்றின் தரத்திற்கான வழிகாட்டுதலை பின்பற்றுதல், தூய்மையான அதேவேளையில் கட்டுப்படியாகும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பெருக்க வழிசெய்தல் போன்ற செயல்பாடுகளை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

நகரங்களில் வாழ்பவர்களின் கடமைகள்

உலகில் சுமார் 800 கோடி மனிதர்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களே பெரும்பாலும் மேற்சொன்ன மூன்று தலையாய பிரச்சனைகளின் மோசமான விளைவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு இயைந்த, நீடித்து நிலைக்கும் வகையில் அமைந்திடும் மக்களின் வாழ்விடங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்குவது நகர்புறத்தில் உள்ள அதிகாரிகளின் கடமை. அதே வேளையில் இப்பகுதிகள் பருவநிலை மாற்ற பாதிப்புகளையும் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும். மாசு ஏற்படுத்தும், எல்லா வகையான ஊர்திகளையும் தவிர்த்து கூடிய வரையில் மிதிவண்டி, பொது போக்குவரத்து போன்ற பசுமையான பயணத்திற்கு அனைவரையும் ஊக்குவிக்கவும், அதற்கான சுற்றுச்சூழலுக்கு இயைந்த கட்டமைப்புகளை உருவாக்கவும், நகர்ப்புறங்களில் உள்ள இயற்கையான வாழிடங்களையும், நீர்நிலைகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்து, மென்மேலும் அவை சீரழியாமல் தடுக்க ஆவன செய்யவேண்டும். முறையான கழிவு மேலாண்மை வசதிகளை அவசியம் கொண்டிருக்க வேண்டும். நகரில் வாழ்வோரிடம் குப்பை போடுவதை குறைப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். இதையெல்லாம் செய்வோருக்கு தகுந்த சன்மானங்களையும் வழங்க வேண்டும்.

சுற்றுச்சூழல் சார்ந்த நிதி நிர்வாகமும், முதலீடும்

வளங்குன்றா வளர்ச்சியை அடைய, அதைத் தக்க வைக்க சரியான முறையில் நிதியினை நிர்வாகித்தலும், முதலீடும் அவசியம். மாசுபாடும், பசுங்குடில் வாயுக்களும் இல்லாமல் செய்யும் அல்லது குறைக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த முறைகளுக்கு மாறுவதற்கு தொழிலகங்களை ஊக்கப் படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத, இயற்கையை போற்றும் செயல்பாடுகளில் முதலீடுகளை செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (Environment, Social and Governance - ESG) போன்ற வலுவான, களங்கமற்ற அணுகுமுறையைப் தொழிலகங்கள் பின்பற்ற வேண்டும். வளர்ச்சி நிதி நிறுவனங்கள், முதலீட்டு நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வங்கிகள், பல தரப்பட்ட முதலீட்டாளர்கள், பூமியின் எதிர்காலத்தைப் பற்றிய கரிசனத்தோடு பூமிக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை போக்குவதற்குத் தேவையான நிதியை அளிக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை (குறிப்பாக வளரும் நாடுகளில்) தாங்கக்கூடிய, தகவமைத்துக் கொள்ளக்கூடிய விவசாய முறைகளையும், கட்டமைப்புகளையும் ஊக்குவித்தல், பருவநிலை பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகளுக்கும், கண்காணிப்பகங்களுக்கும் நிதியுதவி அளித்தல் மிகவும் அவசியம். சுற்றுச்சூழலுக்கு உகந்த, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக, பல்லுயிர் பன்மைய பாதுகாப்பு சார்ந்த, மாசுபாட்டை குறைக்கும், வளங்குன்றாத வாழ்வாதாரத்தை குறிக்கோளாகக் கொண்ட திட்டங்களை ஊக்கப்படுத்தி நிதியளிக்க வேண்டும்.

வர்த்தகமும், தொழிலகமும்

வர்த்தகமும், தொழிலகங்களும் நமக்கு வேண்டியவற்றை நீண்ட காலத்திற்கு அளிக்கும்படியான பொருளாதாரத்தை உருவாக்கும் வல்லமை படைத்தது. வளங்குன்றா வளர்ச்சியை மதிக்கும், குறைந்த மூலதன வளத்தைக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்லும் முறையான சுழற்சிப் பொருளாதாரமே (Circular economy) இன்றைய தேவை. நுகர்வோரால் அல்ல பெயரிய தொழிலதிபர்களால் தான் எதிர்பாத்த அளவிற்கு பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவர முடியும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வர்த்தக உத்திகளை உருவாக்கவும், பின்பற்றவும் வேண்டும். மக்கள் உடல்நலனை, இயற்கையை, சுற்றுச்சூழலை பாதிக்காத வளங்குன்றா வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

வர்த்தகத்தினால் ஏற்படும் (செயல்முறை, உற்பத்தி, சேவை) கார்பன் தடத்தை (Carbon Footprint) குறைக்கவும், பசுமை ஆற்றலை பயன்படுத்துதலையும், தொடர்ந்து செய்யவும், மேம்படுத்தவும் வேண்டும். வர்த்தகத்தினால் ஏற்படும் பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றத்தைக் குறைக்க இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இவற்றையெல்லாம் வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கவும் வேண்டும்.

மாசுபாட்டிற்கும், பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்திற்கும் காரணமான புதைபடிவ ஆற்றலை (Fossil energy) பயன்படுத்தும் போக்குவரத்தை கூடியவரை தவிர்த்து நடைமுறைக்கு உகந்த மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை சீரழிவுக்கும், பருவநிலை மாற்றத்திற்கும் வித்திடும் வகையில் இல்லாமல் உணவு உற்பத்தி, பதனிடுதல், விநியோகம் போன்ற செயல்பாடுகள் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் விளைவிக்கப்பட்ட, காலத்திற்கு ஏற்ற, குறைவான அல்லது வேதிப் பொருட்கள் முற்றிலும் இல்லாத, கூடிய வரையில் அடைக்கப்படாத (non packaged), உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தல் அவசியம்.

அரசு சாராத, சமூக அக்கறை கொண்ட அமைப்புகளின் கடமைகள்: அரசாங்கத்தின், பெரும் தொழிலதிபர்களின், கொள்கை வகுப்பவர்களின் கவனத்திற்கு பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை அவ்வப்போது எடுத்துச் சொல்வதும், குரல் கொடுப்பதும் அரசு சாராத, சமூக அக்கறை கொண்ட அமைப்புகளின், இயக்கங்களின் கடமை. அந்தந்த இடத்திற்குத் தகுந்த சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதும், பாதுகாப்பு திட்டங்களை வகுப்பதும், அரசுடனும், கொள்கை வகுப்பவர்களோடும், பொதுமக்களோடும் ஒன்று சேர்ந்து அவற்றை செயல்படுத்துவதும் அவசியம். சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களும் அவர்களின் செயல்பாட்டில் எந்த விதத்திலும் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் வகையில் இல்லாமல் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்வதற்கு பாடுபடவேண்டும்.

சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் குறித்த அறிவியலும் அது சார்ந்த கல்வியும்: பருவிநிலை மாற்றத்தின், சுற்றுச்சூழல் சீரழிவின், மாசுபாட்டின் பாதிப்புகளை எதிர்கொள்ளப் போவது வருங்கால சந்ததியினர்தான். ஆகவே சமூக பொருளாதார மாற்றங்களை கொண்டுவருவதற்கான அறிவையும், முறைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இங்குதான் அறிவியலும், கல்வியும், விழிப்புணர்வும் துணைபுரியும்.

அண்மைக் காலங்களில் இயற்கை உலகினைப் பற்றிய புரிதலும், தொழில்நுட்ப திறனும் வெகுவாக முன்னேற்றமடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி பல்கலைக்கழகங்களும், அரசும், அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனங்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வகை ஆற்றல் உற்பத்தி, கட்டமைப்புகள், குறைந்த அளவு கார்பன் தடம் கொண்ட தொழிற்சாலைகளுக்கான மறுசுழற்சி, மறுபயன்பாடு செய்யக்கூடிய மூலப்பொருட்கள் உற்பத்தி முதலிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். அதற்கான நிதியுதவிகளும் வழங்கப்பட வேண்டும். சீரழிந்த இயற்கை வளங்களை (காடுகள், புல்வெளிகள், பவளப்பாறைகள்) அந்தந்த இடத்திற்கு உகந்த, அறிவியல் முறையிலான நீண்டகால மீளமைப்புத் திட்டங்களை தொடங்க வேண்டும்.

இயற்கையின் அங்கங்களான மரங்கள், பறவைகள், பூச்சிகள் மூலம் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களை அறியும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும், மாசுபாட்டைக் கண்டறியும் பணிகளில் பொதுமக்களையும் ஈடுபடவைக்கும் மக்கள் அறிவியல் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும்.

வர்த்தகப் பள்ளிகளுடன் (Business Schools) சேர்ந்து தொழில்முனைவோர்களுக்கான சுற்றுச்சூழல் சார்ந்த, பசுமை வர்த்தக மாதிரிகள் (Green Business Models) குறித்த பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

பொதுமக்கள் இயற்கையோடு இயைந்த, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலான வாழ்க்கை முறையை பின்பற்றவும், அவற்றின் அவசியத்தைப் பற்றிய புரிதலை உண்டாக்கவும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் கருத்துக்களைப் பரப்ப வேண்டும். இது போன்ற விழிப்புணர்வுத் திட்டங்களில் கல்வியாளர்கள், ஊடகங்கள், கலைஞர்கள், அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை எல்லா வயதினருக்குமான கல்வித் திட்டங்களிலும் சேர்க்க வேண்டும். இதனாலேயே அந்தந்த தலைமுறையினரும், அவர்களுக்கும், எதிர்காலத்திலும் எவ்விதமான பாதிப்புகளை எதிர்கொள்வோம் எனும் அறிவும், அவற்றை சரிசெய்ய எந்த வகையான மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்பதையும் உணர்வார்கள்.

இளம்தலைமுறைகளுக்கு புறவுலகை போற்றும், மதிக்கும் வகையில், அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் உள்ள தாவரங்கள், உயிரினங்களை அறிமுகப்படுத்தும் கானுலா, இயற்கை நடை போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தனிமனிதரின் கடமைகள்: இயற்கை சீரழிவு, சுற்றுச்சூழல் மாசு இவற்றிற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். பருவநிலை அவரசநிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் கொள்கைகளை வகுத்து செயல்படும் அரசியல் தலைவர்களை ஆதரித்தல் வேண்டும்.

இயற்கைக்கு இயைந்த நகர்புற வளர்ச்சித் திட்டங்கள், முறையான கழிவு மேலாண்மை, தடையில்லாத பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பெற பாடுபடவேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் இயற்கைக்கு எதிரான (நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், மாசுபடுத்துதல், காடழிப்பு போன்ற) செயல்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமல் அல்லாமல் களத்திலும் போராடவேண்டும். அவற்றிற்கு அறிவியல் பூர்வமாக தீர்வுகளைக் காண முற்படவேண்டும்.

நமது வீடுகளையும், குடியிருப்புப் பகுதிகளையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அமைக்கவும் வேண்டும். வாகனங்களைத் தவிர்த்து நடந்து அல்லது மிதிவண்டியில் செல்லுதல், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணித்தல், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருத்தல், நீரை அளவோடு செலவழித்தல், மின்சாரத்தை மிச்சப்படுத்துதல், பதப்படுத்தப்பட்ட, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்த்தல், நாம் வசிக்கும் பகுதிகளில் அருகிலேயே விளையும் தானியங்களையும், உணவுப்பொருட்களையும் வாங்குதல், உணவினை வீணாக்காதிருத்தல், வசதிக்கு ஏற்ப இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை வாங்குதல், இயற்கையை அழித்து, சுற்றுச்சூழலை நாசம் செய்து தயாரிக்கப்பட்ட பொருட்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களையும் வாங்காத ஒரு பொறுப்பான நுகர்வோராக இருத்தல், இளைய சமுதாயத்திற்கு புறவுலகை நேசிக்க கற்றுக் கொடுக்க இயற்கையான வாழிடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று இயற்கையின் விந்தைகளை நேரில் காணும் அனுபவத்தை அளித்தல் என நமது அன்றாட நடவடிக்கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த வரையில் மாற்றத்தை கொண்டு வந்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இவை அனைத்தையும் ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் தான், இயற்கையைப் போற்றும், சுற்றுச்சூழலை காக்கும் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாறுவதற்கு வித்திடும். இந்த பிரபஞ்சத்தில் பல கோடி விண்மீன் மண்டலங்கள் உள்ளன, அவற்றில் பல கோடி கோள்கள் உள்ளன. ஆனால் இருப்பது ஒரே ஒரு பூமி தான்! அதுவும் நாம் வாழும் பூமி. அதைப் பாதுகாப்பது நம் கடமை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in