இயற்கை பேரிடர் விளைவு | நாட்டிற்குள் இடம்பெயர்ந்த 49 லட்சம் பேர்; உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா!

இயற்கை பேரிடர் விளைவு | நாட்டிற்குள் இடம்பெயர்ந்த 49 லட்சம் பேர்; உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா!
Updated on
2 min read

காலநிலை மாற்றம் மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். காற்று, நீர் என்று மனிதனின் அன்றாட தேவைகள் அனைத்திலும் காலநிலை மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படும் என்று பல ஆய்வு முடிகள் தெரிவிக்கிறது.

அதனால், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் அவசியமானது. குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர்களால் நாட்டுக்குள் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. 2021-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 59.1 மில்லியன் மக்கள் நாட்டுக்குள் தங்களின் சொந்த இடங்களை விட்டு விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துளள்ளதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது 2020-ஆம் ஆண்டை விட 4 மில்லியன் அதிகம் ஆகும்.

உள்நாட்டு இடப் பெயர்வு தொடர்பாக உலக அளவிலான அறிக்கையை ஐநா சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி கடந்த 15 ஆண்டுகளில் வன்முறை காரணமாக இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கையைவிட இயற்கை பேரிடர்கள் காரணமாக இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

2021-ஆம் ஆண்டில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் காரணமாக 23.7 பேர் நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர். இதில் அதிக அளவு இடம் பெயர்வு ஆசிய - பசிபிக் பகுதியில்தான் நடந்துள்ளது. வன்முறை காரணமாக 14.4 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம்.

கடந்த ஆண்டு இடம் பெயர்ந்தவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆகும். எனவே இடப்பெயர்வு குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்துவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிக உள்நாட்டு இடப்பெயர்வு நடைபெற்ற நாடுகளின் பட்டியல் இரண்டு ஆசிய நாடுகள் உள்ளது. முதல் இடத்தில் உள்ள சீனாவில் கடந்த ஆண்டு 60 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த இடப் பெயர்வு முழுவதும் இயற்கை பேரிடர்களால் மட்டுமே நடந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் 1.40 லட்சம் பேர் வன்முறை காரணமாகவும், 56 லட்சம் பேர் இயற்கை பேரிடர் காரணமாகவும் இடம் பெயர்ந்துள்ளனர்.

3வது இடத்தில் உள்ள எத்தியோபியாவில் 51 லட்சம் பேர் வன்முறை காரணமாகவும், 2.40 லட்சம் பேர் பேரிடர் காரணமாகவும் இடம் பெயர்ந்துள்ளனர். 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் 49 லட்சம் பேர் பேரிடர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். 13 ஆயிரம் பேர் மட்டுமே வன்முறை காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்த வரையில் பேரிடர் காரணமாக இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. 2020-ஆம் ஆண்டில் பேரிடர் காரணமாக இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 39 லட்சமாக இருந்து. கடந்த ஆண்டு இது 10 லட்சம் அதிகரித்து 49 லட்சமாக உயர்ந்துள்ளது. 2008 முதல் 2021 வரை இந்தியாவில் 241 பேரிடர் நிகழ்வுகளால் 53.4 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

2021-ஆம் ஆண்டில் மட்டும் 80 பேரிடர்களால் 49 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் 2.5 மில்லியன் பேர் புயல் காரணாமகவும், 2.4 மில்லியன் பேர் வெள்ளம் காரணமாகவும் இடம் பெயர்ந்துள்ளனர். ஆந்திரா, மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல், மேற்கு வங்காளம், புதுச்சேரி, தமிழ்நாடு, நாகலாந்து, பஞ்சாப், கர்நாடகம், பீகார், ஓடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த இடப் பெயர்வு நடந்துள்ளது. தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு 3 பேரிடர்களால் உள் நாட்டு இடப் பெயர்வுகள் நடந்துள்ளது இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in