

மதுரை: மதுரையில் காற்று மாசுப்படுவதைத் தடுக்க ரூ.475.35 கோடியில் காற்று மாசு தடுப்புத் திட்டத்தை மாநகராட்சி தயார் செய்து தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறது.
நகர்புறங்களில் மோசமான சாலை பராமரிப்பு, வாகனங்களில் வெளியேறும் மிக அதிகமான புகை மற்றும் பெருகிவரும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக் கழிவுகளால் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசடைகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள காற்று மாசு நகரங்கள் பட்டியலில் காற்று மாசுபாடு அதிகமுள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் கூறியதாவது: "சுற்றுச்சூழல் அமைச்சகம் 2018-இல் தேசிய தூய்மையான காற்று திட்டத்தை வெளியிட்டு நாட்டிலுள்ள காற்றின் தர அளவை எட்ட முடியாத 124 நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் அதிகம் காற்று மாசு அடையும் நகரங்கள் பட்டியலில் மதுரை இடம்பெற்றிருக்கிறது. மதுரையில் சாலை மாசுகள், கட்டுமானத்தால் ஏற்படும் மாசுகள், வாகனப் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மாசுகளால் காற்று மாசு ஏற்படுகிறது.
இந்த காற்று மாசுப்படுதலை குறைக்க 2022-2023 முதல் 2025-2026 முடிய காலத்திற்கான நகர செயல்திட்டம் தயார் செய்து அதற்கு தேவையான நிதியினை கணக்கிட்டு தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதின் அடிப்படையில் மதுரை மாநகராட்சி ரூ.475.35 கோடிக்கான திட்ட அறிக்கை தயார் செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஐந்தாண்டுகளில் நிறைவு பெறும்போது மதுரை மாநகரின் காற்று மாசு தேசிய காற்று மாசு அளவான 60ug/m3 மற்றம் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள காற்றுமாசு அளவான 20ug/m3-ஐ எட்ட இயலும்.
இதற்காக ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மதுரையில் காற்று மாசு பழுதடைந்த சாலைகளில் குவியும் மணல், மழைநீர் கால்வாயால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க புதிய சாலைகள், மழைநீர் கால்வாய் இந்த திட்டத்தில் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சுற்றுப்புற காற்று தரம் கண்காணிக்க கண்காணிப்பு அலுவலகம் ஒன்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் அமைக்கப்படுகிறது'' என்றார்.