

பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனா தொற்று முழுமையாக அகலவில்லை என்றாலும், அதன் தாக்கம் குறைந்துள்ளதால் உலகின் பெரும்பாலான நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில்தான் அச்சமூட்டும் தகவலை விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைகழக பேராசிரியர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வு குறித்து அவர்கள் கூறும்போது, ”காலநிலை மாற்றமே உலகளவில் அடுத்த தொற்றுநோயைத் தோற்றுவிக்கும் மிகப் பெரிய ஆபத்துக் காரணியாக மாறும் வாய்ப்புள்ளது. இயற்கைக்கு மாறான சேர்க்கைகளில் ஆரோக்கியமற்ற விலங்குகளை ஒன்றாகக் கொண்டு வருவதால், சார்ஸ் (SARS) எப்படி வெளவால்களிலிருந்து சிவெட்டுகளுக்குத் தாவியது, பின்னர் சிவெட்டுகளிலிருந்து மனிதர்களுக்கு பரவியது. இதுபோன்ற சூழல் காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்திலும் ஏற்படலாம்.
இதில், காலநிலை மாற்றம் எவ்வாறு பாலூட்டிகளின் வைரோம் (வைரஸ் தொகுப்பு) மறுசீரமைக்கும் என்பது பற்றிய முதல் விரிவான ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். இதன் முடிவில் விலங்குகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு புதிய பகுதிகளுக்கு தங்கள் பயணத்தை மேற்கொள்ளும் என்று கணித்துள்ளோம் .மேலும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை நடவடிக்கை காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. மறுபக்கம், வாழ்விடங்களை மாற்ற வேண்டிய தேவையில் வனவிலங்குகள் உள்ளன. இம்மாதிரியான சூழல்கள் எபோலா, கரோனா போன்ற வைரஸ்களுக்கு சாதகமாக அமையும். அவை புதிய நிலப்பரப்பில் பரவுவதற்கு வாய்ப்பாக அமையும். மனிதர்களுக்கு பரவுவதும் எளிமையாக மாறும். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை நாம் பசுமையில்லா வாயுகளை குறைப்பதன் மூலம் தடுத்துவிட முடியாது. பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பது வெளவ்வால்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளவால்கள் மூலமே மனிதனுக்கு பெரும்பாலான வைரஸ்கள் கடத்தப்படும் சூழலில் நிச்சயம் இது அச்சத்தை தரக் கூடியது. எனினும், முன்னெப்போதையும் விடவும் அடுத்த தொற்றுநோயை அறிவதற்கும், அதனை தடுப்பதற்குமான முயற்சியில் நாங்கள் நெருங்கி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை கடக்கும் சூழல் ஏற்பட்டால் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாகிவிடும் என்று ஐபிபிசி சில மாதங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது. காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தன.
இந்த நிலையில்தான் காலநிலை மாற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்று உலக நாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒரு கருவியாக சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.
கால நிலைமாற்றமும், தலைவர்களும்: காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் உலகத் தலைவர்கள் கவனம்கொள்ள வேண்டும். உலகளாவிய மீத்தேன் உமிழ்வை 2030-க்குள் குறைந்தது 30% ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள ஒப்பந்தத்தில் பிற நாடுகள் சேருவதை வலியுறுத்துகிறோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
வளர்ந்த நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் வலியுறுத்தியுள்ளார்.
கால நிலைமாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்கள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர் கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டும் பூமி வெப்பமடைந்தலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கும் என்று நம்புவோம்.