

வெயில் சுட்டெரிக்கிறது. தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் படபடப்பாய் வருகிறது. நமக்கே இந்த நிலை என்றால், வாயில்லா ஜீவன்களான பறவைகள் என்ன பாடுபடும்.
சென்னை வண்டலூர் அருகே தண்ணீர் தேடி அலைந்த பறவைகளின் கண்ணில்பட்டது அந்த குழாய். கல்லுக்குள் இருப்பதுபோல, அந்த குழாயிலும் கொஞ்சமாய் ஈரம். சிறு பறவைகள் தாகம் தீர்க்க, கொட்ட வேண்டுமா என்ன, சொட்டினால் போதுமே..
படபடவென சிறகடித்து குழாயில் நுழைந்து, போராடி, கிடைத்த சொட்டு நீரையும் பருகி, தாகம் தீர்ந்த மகிழ்ச்சியில் சுகமாய் வெளியே வருகிறது அந்த பறவை. தண்ணீர் தேடி இப்படி எத்தனையோ பறவைகள் வாட்டத்தோடு பறந்து திரிகின்றன. வீட்டு வாசல், மொட்டை மாடி என வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் தண்ணீர் வைத்து, அதன் தாகம் தீர்ப்போம்!