

உங்களுக்கு நினைவிருக்கிறதா... "பூச்சிகளே நம் உலகத்தைப் பாதுகாக்கின்றன" என்று நம் அறிவியல் ஆசிரியர்கள் அடிக்கடி கூறுவார்கள்... ஆம், பூச்சிகளே இந்த உலகின் சமநிலையைத் தீர்மானிக்கின்றன.
ஆனால், இந்த சமநிலைதான் தற்போது ஆபத்தில் உள்ளது. அதற்கான முதல் படியைத்தான் நாம் எடுத்து வைத்திருக்கிறோம். இதுதான் இன்று நீங்கள் அறிந்துகொள்ளும் முக்கியச் செய்தி. காலநிலை மாற்றத்தால் உலக அளவில் பூச்சி இனங்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளன. ஆம், UCL ( Centre for Biodiversity and Environment Research) -இன் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் உலகெங்கிலும் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கை சரிந்து வருவது குறித்து மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது - இந்த ஆய்வுக்காக மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இந்த ஆய்வின் அடிப்படையில், வெப்பமண்டல நாடுகளில் காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக பூச்சிகளின் எண்ணிக்கை சரிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. பூச்சி இனங்களை பொறுத்தவரை, அவை வெப்பமண்டலங்களில் மிகுதியாக உள்ளன (அமேசான் மழைக்காடுகள், பிரேசில் மற்றும் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதி உட்பட பூமத்திய ரேகையின் இருபுறமும் உள்ள பகுதிகள்). இங்குதான் உலகின் 5.5 மில்லியன் பூச்சி இனங்கள் வாழ்கின்றன. மனிதர்களை விட பல கோடி எண்ணிக்கையில் இருக்கும் பூச்சியினங்கள் இப்போது காலநிலை மாற்றத்தால் மெல்ல அழிந்து வருகின்றன.
பூமியின் எதிர்காலத்திற்கு பூச்சிகள் முக்கியமானவை. அவைதான் பூமியில் இருக்கும் கோடிக்கணக்கான பூச்சி வகைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன. மண்ணில் ஊட்டச்சத்துக்களை உருவாக்கி இறந்த பொருட்களை சிதைக்கவும் பூச்சிகள் உதவுகின்றன. பழங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் கோகோ உள்ளிட்ட பல முக்கிய உணவுப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைகளும் பறக்கும் பூச்சிகள்தான் உதவுகின்றனர். தற்போது இதில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
| உலகின் 80% பூச்சிகள் கண்டுபிடிக்கப்படவில்லை பட்டாம்பூச்சிகள், அந்துப் பூச்சிகள், வண்டுகள், தேனீக்கள், குளவிகள், எறும்புகள் மற்றும் ஈக்கள். இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் உலகில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இனங்களை கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையை ஆய்வில் கண்காணிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. உலகளவில் இதுவரை சுமார் 80% பூச்சிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை பெருமளவில் வெப்பமண்டலங்களில்தான் உள்ளன. |
உதாரணத்துக்கு கிரேட் பிரிட்டனில் மகரந்தச் சேர்க்கை நிகழ்வுகள், பூச்சிகள் அழிவினால் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஐரோப்பா முழுவதும் பட்டாம்பூச்சிகள் 30 முதல் 50% வரை எண்ணிக்கையில் சரிவைச் சந்தித்துள்ளன. மேலும், ஜெர்மனியில் பறக்கும் பூச்சிகள் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
காலநிலை மாற்றமும் பூச்சியினங்களும்:
காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக பூச்சிகள் முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படாத இயற்கை வாழ்விடங்களுடன், வெப்பமயமாதல் ஏற்பட்டுள்ள விவசாய நிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், உலகெங்கிலும் காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் சராசரியாக 63% பூச்சிகளை இழந்துவிட்டன என்பது வந்துள்ளது.
பூச்சியினங்கள் பாதிப்பால் பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகள்தான் கடுமையான பாதிப்பை சந்திக்கவுள்ளன. ஏனெனில், இந்த நாடுகளில் உள்ள தாவரங்கள் பெரும்பாலும் பூச்சிகளாலே மகரந்தச் சேர்க்கையை நடத்துக்கின்றன. அவ்வாறான சூழலில் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படுகின்றன.
பிரேசிலில் காடுகளில் உள்ள ஆர்க்கிட் தேனீக்கள் ஏராளமாக 50% குறைந்துவிட்டதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆர்க்கிட் தேனீக்கள், அமெரிக்காவில் மட்டுமே காணப்படும், ஆர்க்கிட் பூக்களின் முக்கிய மகரந்தச் சேர்க்கையாளர்களாக உள்ளன. சில தாவரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு இந்தப் பூச்சியையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றன. காலநிலை மாற்றம் மட்டுமல்லாது காடழிப்பு காரணமாக பூச்சியினங்கள் ஒருபக்கம் அழிந்து வருகின்றனர்.
பூச்சிகளின் அழிவை எப்படி தவிர்க்கலாம்?
குறைவான ரசாயனங்களைப் பயன்படுத்துதல், பயிர்களின் அதிக பன்முகத்தன்மை, இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றின் மூலம் காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்து, பூச்சி இனங்களை அதன் அழிவிலிருந்து பாதுக்காக்க முடியும்.
உலகில் பூச்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தால் தாவரங்கள் பாதிக்கப்பட்டும், இது உணவுச் சங்கிலி பாதிப்புக்கு வழிவகுத்து, மனிதனின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்துலை ஏற்படுத்தும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு வரும் காலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தவுள்ள காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான ஆயுதத்தை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும். அப்போது பெரும் இழப்பு தவிர்க்கப்படும்.
பூச்சிகள் சூழ் உலகை காப்போம்..!
தகவல் உறுதுணை: The conversation