

ஐபிபிசி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் ஆர்எம்எஸ்ஐ (RMSI) நிறுவனம் நடத்திய ஆய்வில், காலநிலை மாற்ற விளைவு காரணமாக இந்தியாவின் முக்கியக் கடற்கரைப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஐபிபிசி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'வரும் காலங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் நிகழும். இந்தப் பேரிடர்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஏற்படப் போகும் பாதிப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியாது. எனினும், இப்புவியின் உயிர்ப்பன்மையம் மற்றும் சூழல் அமைப்புகளை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமானால், ஏற்கெனவே சீர்கெட்ட இப்பூமியின் 30 முதல் 50 விழுக்காடு நிலம், நன்னீர் மற்றும் கடற்பகுதியை மறுசீரமைப்பு செய்வது அவசியம்' என்று அறிவித்தது.
ஐபிபிசி-யின் ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து, நொய்டாவைச் சேர்ந்த ஆர்எம்எஸ்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், "பூமி வெப்பமடைந்தலால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் முக்கிய நகரங்களின் கடற்கரைப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, காலநிலை மாற்ற விளைவினால் மும்பை, கொச்சின், சென்னை, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகள் 2050-ஆம் ஆண்டுக்குள் மூழ்கும் அபாயம் இருக்கிறது.
சென்னையில் 5 கி.மீ. வரை சாலைகளும், 55 கட்டிடங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கொச்சியை எடுத்துக்கொண்டால் சுமார் 464 கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. திருவனந்தபுரத்தில் 349 கட்டிடங்களும், விசாகப்பட்டிணத்தில் 206 கட்டிடங்களும் பாதிக்கப்படக் கூடும்.
கடல் மட்ட உயர்வு காரணமாக, மும்பையில் 24 கி.மீ. நீளமுள்ள சாலைகளும், சுமார் 998 கட்டிடங்களும் பாதிக்கப்படக் கூடும். திருவனந்தபுரத்தில் கடல் மட்ட உயர்வு காரணமாக 349 முதல் 387 வரையிலான கட்டிடங்கள் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. கடல் அரிப்புக்கு எதிராக கட்டிடங்களை வலுப்படுத்துவது, சாலைகளின் உயரத்தை அதிகரிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் பாதிப்பை குறைக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| யார் இந்த ஐபிசிசி? - Intergovernmental Panel on Climate Change என்றழைக்கப்படும் இந்த அமைப்பு 1988-ம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தால் தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் கொள்கைகளை உருவாக்க அரசாங்கங்களுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களை வழங்குவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். |
இந்த ஆய்வுகளின் முடிவுகளை அறியும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது. காலநிலை மாற்றம் உண்மையில் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. நாம் அதை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான அபாய அறிகுறிகள்தான் உலகம் முழுவதும் தொடர் சங்கிலிகளாக நடந்துக் கொண்டிருக்கிறது.
நமது முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும், நமது தலைமுறையும் காலநிலை மாற்றத்தின் தீவிரத் தன்மையையும், அதனால் உலக அளவில் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்வதற்கான உரிய நடவடிக்கையில் மனித இனம் தீவிரமாக இறங்க வேண்டும் என்று பல காலமாகக் கூறி வருகின்றனர்.
ஆனால், அந்த எச்சரிக்கைகளையும், நம்மை நோக்கி வரும் ஆபத்துகளையும் நாம் உள்வாங்கிக் கொண்டுள்ளமா என்பது காலநிலை மாற்றத்துக்கு எதிரான நமது செயல்பாடுகளில் தெரிவதில்லை என்று பெரும் ஏமாற்றம்.
இந்தப் பதற்றத்துக்கு மத்தியில் நமது எதிர்கால தலைமுறையினரை கைவிடப் போகிறோமோ? மாறாக, காலநிலை மாற்ற விளைவு குறித்து அமர்ந்து பேசுவதுடன் மட்டும் இல்லாமல், ஆக்கபூர்வமான செயலில்களிலும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும். அதற்கான எச்சரிக்கை மணி இயற்கையால் அடிக்கப்பட்டுள்ளது.