Last Updated : 25 Jan, 2021 08:45 PM

 

Published : 25 Jan 2021 08:45 PM
Last Updated : 25 Jan 2021 08:45 PM

பழவேற்காட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

”கடல் வளத்தைக் கொன்று எங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்காதீர்கள். இங்குள்ள பல்லுயிர்த் தன்மையைக் கொன்று விடாதீர்கள்” என்ற எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில், அதானி குழுமத்துக்குச் சொந்தமான துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகம் 53 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக 320 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் அளவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அத்திட்டத்திற்கான ஒப்புதலை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட மத்தியக் குழு, நிபந்தனைகளுடன் அதானி குழுமத்துக்கு அனுமதியை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகளை அதானி நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி 330 ஏக்கரில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் சுமார் 6,110 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த விரிவாக்கம் நிகழ்ந்தால் அப்பகுதியில் உள்ள 82 கிராமங்கள், 10 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்ப்புக் குரல்கள் பரவலாக எழுந்தன.

இதன் விளைவாக ஜனவரி 22ஆம் தேதி நடக்க இருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதானியின் விரிவாக்கத் திட்டம் முழுமையாகக் கைவிடப்படவேண்டும் என்று மீனவ அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பிரதான அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நாங்கள் எந்த சுற்றுச்சூழல் விதிகளையும் மீறவில்லை என்றும், காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தினால் 1,500 பேர் நேரடியாகவும், 4,500 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற இருக்கிறார்கள் என்றும் அதானி குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காட்டின் பல்லுயிர்த் தன்மைக்குக் கேடு விளைவிக்க உள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டே ஆக வேண்டும் என்று பழவேற்காடு பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

துறைமுகம் இல்லாத இடத்தில் துறைமுகத்தை ஏற்படுத்துங்கள் - திருவள்ளூர் பாரம்பரிய ஐக்கிய மீனவ சங்கப் பொதுச் செயலாளர் துரை மகேந்திரன்

''வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரை ஒரு துறைமுகமோ அல்லது இரண்டு துறைமுகங்கள்தான் இருக்கும். ஆனால், நாம் நாட்டைப் பாருங்கள் சென்னையில் மட்டும் மூன்று துறைமுகங்கள் அருகருகே அமைந்துள்ளன. இங்குள்ள துறைமுகங்களே லாபம் ஈட்ட முடியாத சூழலில் தனியார் துறைமுகமான காட்டுப்பள்ளி துறைமுகத்தால் யாருக்கு லாபம்? நிச்சயம் இதில் பொதுமக்களுக்கு லாபம் இல்லை.

அடுத்தது இத்திட்டத்தால் வரும் சூழல் கேடுக்கு வருவோம். உதாரணத்துக்கு சென்னை துறைமுகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சென்னை துறைமுக உருவாக்கத்தின்போது பழவேற்காடுவரை கடல் அரிப்பு ஏற்பட்டது. கடல் அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் நமது அரசுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அவர்கள் எண்ணூர் துறைமுகத்தைக் கொண்டு வந்தார்கள். அதனை விரிவாக்கம் செய்ததன் காரணமாக இன்றுவரை பழவேற்காட்டில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து வந்தால் மக்கள் வாழ்வதற்குத் தகுதி இல்லாத இடமாகவே பழவேற்காடு பகுதி மாறக்கூடும்.

எண்ணூர் மாதிரி காட்டுப்பள்ளி துறைமுகத்தைத் தற்போது விரிவாக்க இருக்கிறார்கள். தொடர்ந்து துறைமுகத்தைக் கொண்டு வந்து மீனவர்களை அழிக்கிறார்கள். இத்திட்டங்களால் யாருக்கு லாபம்? பெரும் பணக்காரர்களுக்குத்தான் லாபம் ஏற்படும்.

அதானி குழுமம் மேற்கொள்ளும் இந்த விரிவாக்கத்தால் பழவேற்காட்டில் நிலச்சூழல் பாதிக்கப்படும். ஏற்கெனவே காட்டுப்பள்ளி துறைமுகத்தால் அரை கிலோ மீட்டருக்கு கடல் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மேற்கொள்ளும் விரிவாக்கத்திற்கும் சுமார் 8 கிலோ மீட்டர் கடல் நிலப்பரப்பை மாற்றத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அவ்வாறு மாற்றினால் பழவேற்காட்டில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும். அங்குள்ள கிராமங்களைக் கடலும், ஏரியும் சூழ்ந்துள்ளன. அவ்வாறு இருக்கையில் இந்த விரிவாக்கம் நிகழ்ந்தால் கடலும், ஆறும் ஒன்றாகச் சேர்ந்துவிடும்.

அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், அவர்கள் விரிவாக்கம் செய்யப்படும் பகுதிகளில் 10 கிலோ மீட்டருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில், அவர்கள் விரிவாக்கம் செய்யும் பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டரிலிருந்து வனத்துறை ஆரம்பம் ஆகிறது. இரண்டாவது இந்த விரிவாக்கம் காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் உயரும் என்கிறார்கள். ஏற்கெனவே மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலைகளில் தற்போதுவரை வெறும் ரூ.10,000தான் சம்பளம் பெறுகிறார்கள்.

இந்த நிலையில் இவர்கள் மேற்கொள்ளும் விரிவாக்கத்தால் 1,500 பேருக்கு வேலை கிடைக்கும் என்கிறார்கள். 1,500 பேருக்கு என்ன வேலை தரப் போகிறார்கள்? அதானி குழுமம் இந்த விரிவாக்கத்திற்கு 55 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்துவிட்டு வெறும் 1,500 பேருக்குத்தான் வேலை தரப் போகிறதா? வெறும் ஆயிரம் பேருக்கு வேலை தருவதற்காக, சுதந்திரமாக மீன் பிடிக்கும் ஒரு லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கிறார்கள்.

பழவேற்காட்டில் தமிழ்நாட்டிலேயே கிடைக்காத கிளிஞ்சல் கிடைக்கிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. கடற்கரையில் உள்ள தொழிலை நம்பி லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். எனவே, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு நகரையோ, ஏரியையோ அழிப்பது முற்றிலும் தவறு.

எங்களின் நோக்கம் கடலும், ஏரியும் பாதிக்கக் கூடாது. அரசாங்கமே தற்போதைய சூழலில் துறைமுகங்களை இயக்கச் சிரமப்படுகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் இங்கு என்ன செய்யப்போகிறது?

காட்டுப்பள்ளி துறைமுகம் அவர்கள் கூறுவதுபடி விரிவாக்கம் அடைந்தால் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களைப் போல நான்கு மடங்காக இருக்கும். அவ்வாறு இருந்தால் சூழலில் ஏற்படும் பாதிப்புகளையும், விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மீனவர்கள் மட்டுமல்ல விவசாயிகளும் இத்திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஏரியை அடைத்துவிட்டால் ஊர்களில்தான் வெள்ளம் பாயும்.

நாங்கள் கேட்பது ஒன்றுதான். ஒரு துறைமுகம் இருந்தால் இன்னொரு துறைமுகம் வரக் கூடாது. இங்கு இருக்கும் பல்லுயிர்த் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். வெறும் 1,500 பேருக்கு வேலை தருவதற்காக ஒரு நகரே அழிவுக்குத் தள்ளப்பட வேண்டுமா? எங்களைப் பொறுத்தவரை அதானியின் இந்த விரிவாக்கத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும். துறைமுகம் இல்லாத இடத்தில் துறைமுகத்தை ஏற்படுத்துங்கள். இத்திட்டத்தை மீனவ மக்கள் மட்டும் எதிர்க்கவில்லை. இப்பகுதியை நம்பி வாழும் அனைத்து உழைக்கும் மக்களும் எதிர்க்கிறார்கள்.

கடல் என்பது தொட்டி அல்ல; கடலில் நாம் கை வைந்தால் அது பல மடங்கு நம்மைத் திருப்பி அடிக்கும்: சுந்தர்ராஜன் - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

"ஏன் முதலில் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டும்? தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் இத்திட்டத்தை எதிர்த்துள்ளன. இந்த நிலையில் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் பழவேற்காடு பகுதிக்கு மட்டுமல்லாமல் சென்னைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஏன் சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நாம் சென்னை குறித்து பெருமைப்படும் போதெல்லாம் மெரினாவைக் குறித்து பெருமை கொள்வோம். ஆனால், உண்மையில் மெரினா கடற்கரை என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட கடற்கரை. இது சிலருக்குப் புதிதாகக் கூட இருக்கலாம். 1850 வரை மெரினா என்ற கடற்கரையே கிடையாது. 1850வரை அங்கு மதராஸ் என்ற குப்பம் இருந்தது. உண்மையில் மெரினா கடற்கரை என்பது ஒரு காயல். கடலுக்கும் நிலத்துக்கும் இடையே இருந்ததுதான் மெரினா கடற்கரை . சென்னை துறைமுக உருவாக்கத்தின் பிறகுதான் நமக்கு மெரினா கடற்கரை கிடைத்தது.

நீங்கள் மெரினா கடற்கரை கிடைத்தது என்று மகிழ்ச்சி கொண்டால் அதற்கு எதிர்வினையாக துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்கு கடல் உள்ளுக்கு வந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். கடலுக்குள் சென்று இயற்கைக்கு எதிராக நாம் ஆற்றும் வினைக்கு எதிர்வினைதான் இது. முதலில் கடல் என்பது தொட்டி அல்ல என்பதை நாம் உணர வேண்டும். கடலில் நாம் கை வைத்தால் அது பல மடங்கு நம்மைத் திருப்பி அடிக்கும்.

சென்னைக்கு மட்டும் ஏற்கெனவே மூன்று துறைமுகங்கள் உள்ளன. இதற்கிடையில் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் விரிவாக்கம் செய்ய இருக்கிறது. அதுவும் 20 மடங்கு விரிவாக்கம் செய்ய இருக்கிறது. அதாவது 6,200 ஏக்கராக விரிவாக்கம் செய்ய இருக்கிறது. அதில் 3,000க்கும் அதிகமான ஏக்கர்கள் நீர்நிலைகள் சம்பந்தப்பட்டவை. மேலும் 2,000 ஏக்கர் நிலப்பரப்பு அதாவது 6 கிலோ மீட்டருக்கு கடற்கரையில் பாறைகளையும், மணலையும் கொட்டிக் கடலிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்போகிறார்கள்.

முதலில் எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் பழவேற்காடு ஏரியே இல்லாமல் போகும் என்று புவி அறிவியல் துறை அமைச்சகம் அப்போதே எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதை மீறித்தான் காட்டுப்பள்ளி துறைமுகம் வந்தது.

தற்போது காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய இருக்கிறார்கள். ஏன் இந்த விரிவாக்கத்தைத் தடுக்கிறோம்? தற்போது இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அருகே கயலாஞ்சி என்ற ஊர் இருக்கிறது. இங்கு வருடத்திற்கு 60 அடி கடல் உள் வாங்குகிறது. இன்னும் ஐந்து வருடம் கடந்தால் காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றி இருக்கும் பதினாறு மீனவ கிராமங்களும் இல்லாமல் சென்றுவிடும். அதுமட்டுமல்லாமல் கடலும், பழவேற்காடு ஏரியும் ஒன்றாகிவிடும்.

நீங்கள் நினைக்கலாம், மெரினா கிடைத்த மாதிரி நமக்கு இன்னொரு கடற்கரை கிடைத்துவிட்டது என்று. பழவேற்காடு ஏரியின் முக்கியத்துவம் தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி பழவேற்காடு ஏரி ஆகும். பழவேற்காடு ஏரியில் மட்டும் 165 வகை மீன்கள் உள்ளன. பல்லுயிர்த் தன்மை கொண்ட பழவேற்காடு ஏரியை நம்பி 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர். இந்த விரிவாக்கம் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாம் நினைக்கலாம், சென்னைக்கு இதனால் பாதிப்பு இல்லை என்று. இந்த விரிவாக்கம் நிகழ்ந்தால் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு ஒரு நாளைக்கு தரும் 100 மில்லியன் லீட்டர் நன்னீர் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். அடுத்து வெள்ள அபாயம்.

இவை எல்லாவற்றைவிட முக்கியமானது அங்குள்ள சூழல் தன்மை மிக நுட்பமானது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக இங்கு இயங்கும் மூன்று துறைமுகங்களும் 45% சதவீத சரக்கைத்தான் கையாள்கின்றன. அவ்வாறு இருக்கையில் அதானி நிறுவனம் கூறும்படி 320 மில்லியன் சரக்கை அவர்கள் எவ்வாறு வருடத்திற்குக் கையாள முடியும். அவர்கள் நினைக்கும் எண்ணிக்கையைப் பெற வேண்டும் என்றால் எண்ணூர், சென்னை, தூத்துக்குடி, துறைமுகச் சரக்குகளை அவர்கள் திசை திருப்பும் வாய்ப்புதான் அதிகம். அவ்வாறு நேர்ந்தால் மற்ற மூன்று துறைமுகங்களும் மூடப்படும். எனவே, எண்ணூர் - பழவேற்காடு பகுதியை நீரியல் சரணாலயமாக அறிவிக்கப்பட வேண்டும். அந்த நிலப்பரப்புச் சூழல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

இது விரிவாக்கமே கிடையாது

”பொதுமக்கள் கருத்துக் கேட்பு என்பது தேவையான ஒன்று. அதனைத் தொடர்ந்துதான் அதானி குழு சுற்றுச்சுழல் முன் அனுமதி வாங்க முடியும். இந்தக் கருத்துக் கணிப்புக் கூட்டத்தில்தான் மக்கள் இத்திட்டத்திற்கான எதிர்ப்பை நேரடியாக முன்வைக்க இருந்தார்கள். இந்த நிலையில் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு நிச்சயம் சுற்றுச்சூழல் நோக்கிலும், பொருளாதார நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரம் நோக்கிலும் இதனைப் பார்க்க வேண்டும்.

மேலும், அதானி வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையிலும் உண்மைக்குப் புறம்பான பல பொய்கள் இடம் பெற்றுள்ளன. முதலில் அதானி குழுமம் மேற்கொள்ளும் இந்தத் திட்டத்தை எப்படி விரிவாக்கப் பணி என்று ஏற்றுக்கொள்ள முடியும். இது விரிவாக்கம் கிடையாது. அவர்கள் மீண்டும் பெரிய பரப்பளவில் மீண்டும் ஒரு துறைமுகத்தை அமைக்கிறார்கள்” என்று இத்திட்டற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் வழக்கறிஞர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

உலகமயமாக்கல் யுகத்தில் வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான். எனினும் நாட்டின் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு பல்வேறு திட்டங்கள் முதலாளித்துவ நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருவதைக் கடந்தகால வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன.

எனவே முதலாளித்துவத்தை மட்டுமே முன் நகர்த்தாமல் சூழல் விளைவுகளையும், அந்தச் சூழலை சார்ந்து இருக்கும் பூர்வீக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு திட்டப் பணிகளுக்கு அரசு அனுமதிக்க வேண்டும். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கமும் அதற்கான எதிர்ப்புக் குரல்களும் அதைத்தான் நமக்கு மீண்டும் நினைவுபடுத்துக்கின்றன.

தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x