Published : 27 Sep 2019 11:51 AM
Last Updated : 27 Sep 2019 11:51 AM

காலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா? 

காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமி சந்திக்கப் போகும் விளைவுகள் குறித்து நாளும் புதிய செய்திகள் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து மூழ்கக்கூடும் என்றும் மேலும் எதிர்காலத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறக் கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காலநிலைப் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை ஸ்வீடனின் கிரெட்டா துன்பெர்க் போன்ற இளம் குரல்கள் கையில் எடுத்துள்ளது அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. தொடர் பிரச்சாரம் காரணமாக காலநிலை மாற்றம் தொடர்பாக ஆக்கபூர்வமான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு உலகக் தலைவர்களிடம் அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த சரியான புரிதல் நம்மிடையே இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டுக்கும் இடையே வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளாமல் காலநிலை மாற்றப் பாதிப்புகளைப் பற்றி நாம் புரிந்துகொள்ள முயல்கிறோமா?

உண்மையில் பருவநிலை மாற்றமும், காலநிலை மாற்றமும் ஒன்றா? இல்லை இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறதா..?

இதுகுறித்து சுருக்கமான விளக்கத்தை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனிடம் கேட்டோம்.

அவர் கூறுகையில், “காலநிலை மாற்றம் என்பது நீண்ட கால மாற்றமாகும். அதாவது சுமார் 15 வருடங்களில் பூமியின் காலநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, கடல் மட்டம் எவ்வளவு உயர்ந்துள்ளது, பனிமலைகள் எவ்வளவு உருகின, உலகின் வெப்பநிலை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதைக் குறிப்பதுதான் காலநிலை மாற்றம்.

பருவநிலை மாற்றம் என்பது குறுகிய காலப் பருவமாற்றமாகும் அதாவது வழக்கமான பருவநிலை மாறுதலைக் குறிக்கும் ( உதாரணத்திற்கு குற்றாலம் சீசனைக் கூறலாம்). பருவநிலை மாற்றம் என்பது பூமியில் ஏற்படும் வழக்கமான மாற்றமாகும். தற்போது நிகழும் மாற்றங்களை நாம் காலநிலை மாற்றம் என்றே அழைக்க வேண்டும் ” என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்காகவே காலநிலை நெருக்கடி, காலநிலை அவசர நிலை போன்ற வாசகங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x