Published : 25 Sep 2019 05:32 PM
Last Updated : 25 Sep 2019 05:32 PM

காலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்?

காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பேச்சுகளைப் பார்த்துப் பழகியவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த கிரெட்டா துன்பெர்கின் உணர்வுபூர்வ உரை சற்று புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

'உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்?' ( HOW DARE YOU ) என்று உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி எழுப்பும் கிரெட்டாவின் அந்தக் குரல் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட, இனி எதிர்காலத்தில் பாதிக்கப்படக் கூடிய மனித இனத்தின் ஒட்டுமொத்த குரலாகவே அமைந்துள்ளது.

இதற்கிடையில் கிரெட்டாவின் பேச்சு சற்று செயற்கைத்தனமாக உள்ளது. அவர் போலிக் கண்ணீர் விடுகிறார், அவர் சிறுமி எப்படி காலநிலை மாற்றம் குறித்துப் பேச முடியும், அவரது பேச்சில் பக்குவம் இல்லை, அவருக்குப் பின்னால் ஏதோ ஒரு குழு இயக்குகிறது என்று கிரெட்டாவை நோக்கி விமர்சன அம்புகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதை எல்லாம் ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு கிரெட்டா துன்பெர்க் நமக்கு என்ன கூற வருகிறார் என்பதை ஆழமாக உணர வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

கிரெட்டா துன்பெர்க் நமக்குப் புதிய செய்தியை எதையும் கூறவில்லை. நமது முந்தையை தலைமுறையைச் சேர்ந்தவர்களும், தற்போது நமது தலைமுறையில் உள்ளவர்களும் காலநிலை மாற்றத்தின் தீவிரத் தன்மையும், அதனால் உலக அளவில் ஏற்படும் பாதிப்புகளையும் மனித இனம் கண்டு இதனைச் சரி செய்வதற்கான உரிய நடவடிக்கையில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று பல காலமாகக் கூறி வருகின்றனர்.

ஆனால், அந்த எச்சரிக்கையையும், நம்மைநோக்கி வரும் ஆபத்தையும் நாம் உள்வாங்கிக் கொண்டோமா? என்பதுதான் நம் முன் நிற்கும் பெரும் கேள்வி. அந்தக் கேள்வியைத்தான் எதிர்காலத் தலைமுறைக்கான பதற்றத்துடன் உலக நாடுகளையும், அதன் பெரும் தலைவர்களை நோக்கி அழுத்தமான குரலில், ''நீங்கள் எனது கனவுகளை எனது குழந்தைப் பருவத்தை உங்கள் வெற்று வார்த்தைகளால் திருடிவீட்டீர்கள்'' என்று ஐக்கிய நாடுகள் சபையில் கேட்டுள்ளார் கிரெட்டா.

யார் இந்த கிரெட்டா?

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயதான கிரெட்டா தன்பெர்க், ஆட்டிசத்தின் ஒருவகையான அஸ்பெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இதன் காரணமாக கிரெட்டாவால் சமூகத்துடன் ஒன்றுபடாமலும், தான் நினைத்தவற்றை முழுமையாக வெளிப்படுத்த முடியாமலும் இருந்து வந்தார்.

இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் ஆபத்தமான விளைவுகள், விலங்குகள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு எப்படி செய்திகளாக ஒவ்வொரு நாளும் வருகிறதோ அவ்வாறு கிரெட்டாவுக்கு அவரது பள்ளி வகுப்பில் அவரது ஆசிரியர்கள் மூலம் வந்தடைந்தது. ஆனால் நம்மைப்போல் அதை வெறும் செய்தியாக கிரெட்டா கடந்துவிடவில்லை. பூமியின் வெப்பநிலை உயர்வால் பலியான பனிக்கரடி புகைப்படங்களும், பிளாஸ்டிக்கில் குப்பைகளால் நிரம்பிய கடலின் புகைப்படங்களும் கிரெட்டாவை மிகவும் பாதித்தன.

கிரெட்டாவால் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை. கால நிலை மாற்றத்துக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்ப கிரெட்டா முடிவெடுத்தார். இதற்கு அவரது குடும்பமும் முழு ஆதரவு அளித்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம்தேதி ‘காலநிலையைக் காக்க பள்ளி வேலைநிறுத்தம்’ என்று பதாகையுடன் தனி மனிதியாக ஸ்வீடன் நாடாளுமன்றம் முன் அமர்ந்தார் கிரெட்டா. ’Fridays For Future’ என்று பெயரிடப்பட்டு கிரெட்டா தொடங்கிய இப்போராட்டம் இன்று அவரது தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து காலநிலையைக் காக்க வேலைநிறுத்தப் பேரணியில் ஈடுபட வைத்துள்ளது.

மேலும், காலநிலை மாற்றம் பற்றியும் அதனால ஏற்படும் தீமைகளை இளம் தலைமுறையினரிடையே ஆக்கபூர்வமான உரையாடல் ஏற்படக் காரணமாகியுள்ளது.

இதன் மூலம் நூற்றாண்டின் காலநிலை மாற்றம் குறித்த குறியீடாக மாறி இருக்கிறார் கிரெட்டா துன்பெர்க் என்கிறார் காலநிலை மாற்றப் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்.

காலநிலை காக்க கிரெட்டா மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு குறித்து சுந்தர்ராஜன் கூறியதாவது:

''சுமார் ஒருவருடத்துக்கு முன்பு ஸ்வீடனின் பள்ளிக்கூடங்கள் முன்னும், நாடாளுமன்றத்திற்கு முன்னும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளுடன்...''நீங்கள் வயது முதிர்வு காரணமாக இறக்கப் போகிறீர்கள்... ஆனால் நாங்கள் காலநிலை மாற்றப் பாதிப்பால் இறக்கப் போகிறோம்'' என்று கூறிக்கொண்டு கிரெட்டா என்ற சிறுமி நிற்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கு விடுப்பு எடுத்து பள்ளிக்கு வெளியே நிற்க ஆரம்பித்தார்.

ஸ்வீடனில் தொடங்கிய கிரெட்டாவின் அப்பிரச்சாரம் பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. அன்று ஒற்றை நபராய் நின்ற கிரெட்டாவின் பின்னால் இன்று கோடிக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள்.

இவ்வாறு உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துச் செல்வதற்கான குறியீடாய் மாறி இருக்கிறாள் கிரெட்டா. கண்ணீருடன் அவர் பேசிய பேச்சு உலகத் தலைவர்களின் மனதைப் பாதித்தால் அவர்கள் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

இதில் கிரெட்டா பேசியதில் முதிர்ச்சித் தன்மை இல்லை. அவர் பேசியது நாடகத் தன்மையுடன் இருக்கிறது என்று ஒரு கூட்டம் விமர்சித்துக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் நான் கூறுவது ஒன்றுதான்.

16 வயது பிஞ்சுக் குழந்தையிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? கிரெட்டா அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். நமக்கு அவர் கூறுபவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டும்தான். ஆனால், அவரிடம் தன் எதிர்காலத்தைப் பற்றிய அச்ச உணர்வே மேலோங்கியிருக்கிறது. புள்ளிவிவரங்கள் இல்லை.

பூவுலகு நண்பர்கள் சுந்தர்ராஜன்

இந்திய மக்களிடம் விழிப்புணர்வு தேவை

கிரெட்டா மேற்கொண்ட காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் இந்தியாவில் வலிமையாகச் சென்றடையவில்லை. இது தொடர்பான நாம் கூறும் மொழி மக்களுக்குப் புரியவில்லை என்று கருதுகிறேன்.

இன்று மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணம் கால நிலை மாற்றம் என்ற தகவல் அவர்களுக்குச் சென்று சேரவில்லை. இங்குள்ள மக்கள் இன்றும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெறும் கஜா புயலாகவும், ஒக்கி புயலாகவும் பார்க்கிறார்களே தவிர , கடந்த சில ஆண்டுகளில் புயல்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்து வருகின்றது போன்ற கருத்துகள் மக்களிடம் சென்றடையவில்லை. எனவே இதை மக்கள் உணரும் வகையில் நாம் தீவிரப் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும்

கிரெட்டாவின் இந்த விழிப்புணர்வுப் பயணம் மூலம் இளம் தலைமுறையினர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர்ந்து பிரச்சாரத்துக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் வெளியே வந்தால்தான் இதற்கான தீர்வு கிடைக்கும்".

இவ்வாறு சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

உலக உயிரினங்களில் 60 சதவீதம் கடந்த 40 ஆண்டுகளில் அழிந்துவிட்டதாக உலக இயற்கை நிதியம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இன்னும் பல உயிரினங்களும் அழியும் தருவாயில் இருப்பதாக நமக்கு தினமும் எச்சரிக்கைகள் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த உயிரின இழப்புகளுக்கும் காலநிலை மாறுபாடும் ஒரு முக்கியக் காரணமாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மனித இனம் செய்யும் சூழல் சீர்கேடுகளுக்கு மற்றொரு இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற குற்ற உணர்ச்சி நமக்கு வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பாக நமது அஜாக்கிரதை இவ்வாறே தொடர்ந்தால் விலங்கினங்களுக்கு ஏற்படும் இதே அழிவு முழு வீச்சுடன் நம்மை நோக்கித் திரும்பும் நாட்கள் வெகுவிரைவில் இல்லை. கிரெட்டா அதற்கான எச்சரிக்கையைத்தான் விடுத்துள்ளார் என்பதை உலகத் தலைவர்கள் புரிந்து கொள்வார்களா...?

தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x