

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்காக விநாயகர் சிலைகள் மும்முரமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் ரசாயனங்கள் கலந்த, பூச்சுகள் நிறைந்த விநாயகர் சிலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிலைகளை உருவாக்கி, நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 'கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு' இதற்கான தொடக்கத்தை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நம்மிடம் பேசும்போது, ''பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் ஆன விநாயகர் சிலைகளே அதிகம் வாங்கப்படுகின்றன. வட இந்தியாவில் தயாரிக்கப்படும் இவ்வகை சிலைகள், வண்ணமயமாக உள்ளன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள், விழா முடிந்தவுடன் அதை நீரில் கரைக்கின்றனர்.
இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தோம், முடியவில்லை. மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், நாங்களே சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய முடிவெடுத்தோம். பாரம்பரியமாக சிலைகள் செய்யும் கைவினைக் கலைஞர்களிடம் கொடுத்து, கையளவு நவதானியங்களை அதில் சேர்த்து இவற்றை உருவாக்கியுள்ளோம்.
வண்டல் மண்ணால் ஆன விநாயகர் சிலையால் நீருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நீரில் நனைந்த நவதானியங்கள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாகும். நீரில் சிலைகளைக் கரைக்கும்போது அங்குள்ள உயிரினங்களுக்குத் தொந்தரவு ஏற்படும். அதை முடிந்த அளவு குறைக்க, அவற்றுக்கு உணவளிக்கலாம் என்று திட்டமிட்டோம்.
அதேபோல வித்தியாசத்தை மக்கள் விரும்புகின்றனர். அதனால் தானியங்களைச் சேர்ந்து நவதானிய விநாயகர் என்ற பெயரில் வண்ணம் பூசாமல் இதை உருவாக்கியுள்ளோம்.
சாதாரண விநாயகர் சிலையை விட, குறைவான விலைக்கே இதைக் கொடுக்கிறோம். சுந்தராபுரத்தில் உள்ள அலுவலகத்தில் இதை விற்பனைக்கு வைத்துள்ளோம்.இயற்கை மீது அக்கறை கொண்டவர்கள், ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்'' என்கிறார் மணிகண்டன்.