

விழுப்புரம்
செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் விழுப்புரம் மட்டுமின்றி கடலூர், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
பக்ரீத், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் அதிகளவிலான ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
இந்நிலையில் வருகின்ற 12-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதால் குர்பான் விருந்து கொடுக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்னரே ஆடுகளை வாங்கி அதனை வளர்த்து விருந்து கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் நேற்று நடைபெற்ற சந்தைக்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, வியாபாரிகள் ஆடுகளை வாங்கு வதற்காக குவிந்தனர். ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என இருந்தாலும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், “பக்ரீத் பண்டிகை யின்போது ஆடுகளின் விலை அதிகமாக இருக்கும். ஒரு வாரத்துக்கு முன்பாக வந்தாலும் ஆடுகளின் விலை அதிகமாக தான் உள்ளது.
வெளியூரில் இருந்து வாகனம் எடுத்துக் கொண்டு வந்து விட்டதால் வேறு வழியில்லாமல் கிடைக்கிற விலைக்கு ஆடுகளை வாங்கிச் செல்கிறோம்” என்றனர். நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.5 கோடி அளவுக்கு 30 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகி இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.