

எதிர்காலம் பசுமையாக இருக்கும் அல்லது இல்லாமலே போகும்- பாப் ப்ரெளன்
மாறிவரும் பருவநிலை மாற்றத்தை உணர்ந்து, காடுகள், வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்லுயிர்ப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கோயம்புத்தூரைச் சேர்ந்த இயற்கை மற்றும் விலங்கு பாதுகாப்பு (NATURE AND ANIMAL CONSERVANCY) அமைப்பு.
இதுகுறித்துப் பேசும் அதன் உறுப்பினர்களில் ஒருவரான ஆனந்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பே எங்கள் அமைப்பின் பிரதான நோக்கம். இதற்காக நாங்கள் (தன்னார்வலர்கள்) பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு சூழலியல் குறித்து விளக்குகிறோம். அதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். மற்ற உயிர்களிடமும் இரக்கம் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், முடிந்தவரை எந்தவொரு உயிருக்கும் தீங்கு செய்யாத வாழ்க்கையை வாழவேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறோம்.
இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் உரையாடி இருக்கிறோம். ஒவ்வோர் அமர்வுக்குப் பிறகும், நாட்டு மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுக்கிறோம், அதை அவர்களின் வளாகத்திலோ அல்லது குடியிருப்புப் பகுதியிலோ நடலாம். இந்த வகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விருப்பம் கொண்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல் தோட்டம் (ECO GARDEN) அமைக்கவும் உதவுகிறோம்.
கடந்த நான்கு மாதங்களாக ’கோவை கூல்’ என்ற பிரச்சாரத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். இதன் நோக்கம், கோவையைப் பசுமையாகவும் குளுமையாகவும் வைத்திருப்பதுதான். இதற்காக கோயம்புத்தூர் மக்களுக்கு இலவசமாக நாட்டு மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம்.
அதேபோல சுற்றுச்சூழலுக்கும் பிற உயிர்களுக்கும் தீங்கில்லாத, எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்ற தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் சூழலியல் குறித்து இலவசமாக விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்கிறார் ஆனந்தி.
க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in