Published : 06 Jul 2019 10:28 am

Updated : 06 Jul 2019 10:28 am

 

Published : 06 Jul 2019 10:28 AM
Last Updated : 06 Jul 2019 10:28 AM

ஞெகிழி பூதம் 23: கடையில் வாங்கும்போது கவனம் தேவை

23

கடந்த வாரம் துணிப் பொருள்களில் உள்ள ஞெகிழியை மாற்றுவது பற்றிப் பார்த்தோம். இந்த முறை கடைகளில் (Shopping) வாங்கும் ஞெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது பற்றிப் பார்ப்போம்.

# மொத்தக் கடைகளில் வாங்குங்கள் – அரிசி, பருப்பு போன்றவற்றை மொத்தக் கடைகளில் துணி அல்லது காகிதப் பொட்டலங்களாக வாங்குவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐம்பது ஞெகிழிப் பைகளைத் தவிர்க்க முடியும். மொத்தமாக வாங்குவதால் செலவும் கொஞ்சமாவது குறையும்.

# பால்காரரைத் தேடுங்கள் - காலையும் மாலையும் கறந்த பாலை வீடுவீடாக விநியோகிக்கும் மனிதர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களிடம் பால் வாங்குவதால் இரண்டு அல்லது நான்கு ஞெகிழிப் பைகளை அன்றாடம் குறைக்க முடியும்.

# உழவர் சந்தைகளை அரவணையுங்கள் - உழவர் சந்தைகள், காய்கறிச் சந்தைகளில் வாங்கும்போது நம்முடைய பைகளிலேயே வாங்கிக்கொள்ளலாம். பல்பொருள் அங்காடியில் விற்கப்படும் ஞெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட பொருள்களைத் தவிர்க்கலாம்.

# பை, பாத்திரத்தைக் கையில் எடுங்கள்- வீட்டில் இருந்தே துணிப் பை, பாத்திரங்களை எடுத்துச் செல்லுங்கள். ஞெகிழித் தடைக்குப் பின்னர் அனைத்துக் கடைகளுமே இந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றன. நாம்தான் தயாராக வேண்டும்.

# இயற்கை பொம்மைகள் – குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி விதவிதமான வண்ணங்கள், வடிவங்கள், தொடு உணர்வில் மாறுபட்டு அறியக்கூடிய பொருள்களே தேவை. வீட்டுக்குள் இருக்கும் காய்கறி, சாதாரணமாகப் பயன்படும் கரண்டி, சாவிக் கொத்து, இயற்கையில் கிடைக்கும் விதைகள், இலைகள், மரப் பட்டைகள், கற்கள் ஆகியவற்றில் இந்த அம்சங்கள் நிறைந்துள்ளன. இரண்டு வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு இவற்றையே விளையாட்டுப் பொருள்களாகக் கொடுக்கலாம். ஞெகிழிப் பொருள்கள் விலை மலிவு என்பதால் வாங்கிக் குவிக்க வேண்டாம்.

சிலவற்றையே வாங்குவோம்.

# பல முறை பயன்படுத்தும் பேனா – ஒரு ரூபாய்க்குத் தூக்கி எறியும் பேனா வந்ததே, தூக்கி எறியும் பண்பாட்டின் தொடக்கப் புள்ளி. பல முறை மையை மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய மைப்பேனாவையே பயன்படுத்துங்கள். தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பேனாவும் குறைந்தது ஐந்து ஞெகிழிப் பைகளின் எடைக்குச் சமம்.

# தண்ணீர் குடுவை– ஒரு எவர்சில்வர் அல்லது தாமிர-செம்பு தண்ணீர் குடுவை கையில் இருந்தால் அது தாகத்தையும் தீர்க்கும், சூழலுக்குத் தீங்கும் விளைவிக்காது. உணவு விடுதிகளில், அலுவலகங்களில், நண்பர்களின் வீடுகளில், கடைகளில் அதில் நீரை நிரப்பிக்கொள்ளவும் முடியும். நீரை நிரப்பிக்கொள்ளக் குடுவை நம் கையில் இருந்தால் தண்ணீருக்குக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஞெகிழி இல்லா தமிழகம் ஜூலை 14-ல் மாநாடு

ஒருமுறை பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியக்கூடிய ஞெகிழிப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘நெகிழி இல்லா தமிழகம்’ என்ற விழிப்புணர்வு மாநாடு திருச்சி தேசியக் கல்லூரியில் ஜூலை 14-ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களுக்கு: 95008 02803

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

நெகிழி பூதம்பிளாஸ்டிக் தடை ஞெகிழிப் பொருட்கள் பிளாஸ்டிக் மாற்றுசுற்றுசூழல் பாதுகாப்பு மக்காத ஞெகிழிஞெகிழிக் குப்பைபெருங்குப்பைபிளாஸ்டிக் குப்பைகுப்பை வகைகள்கவனம் தேவை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author