Published : 06 Jul 2019 10:24 am

Updated : 06 Jul 2019 10:24 am

 

Published : 06 Jul 2019 10:24 AM
Last Updated : 06 Jul 2019 10:24 AM

காட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்

கரும்புப் பயிரை வேட்டையாடும் காட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்த புதுவிதமான முறை ஒன்று வாட்ஸ்-அப் தகவலாக வந்தது. ‘காய்ந்த சோலை, தக்கைப் பூண்டு ஆகிய இவற்றைக் கொண்டு பன்றி வருவதைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பதுதான் அந்தத் தகவல்.

இந்தத் தகவலுக்குச் சொந்தக்காரர் விழுப்புரம் அருகே அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த உழவர் மனோகரன். இவர் கரும்புச் சாகுபடி தொடர்பான தொழில் நுட்பங்கள் குறித்த ‘கரும்புத் தோகையில் கருப்புத் தங்கம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். “5-ம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன்.

தமிழ் தவிர வேறு மொழி பேசத்தெரியாது. 17 வயதில் அப்பா இறந்த பின் என்னிடம் இருந்த 3.5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட ஆரம்பித்தேன். கரும்பு உற்பத்தியைப் பொறுத்தவரை உழவர்களின் மிகப் பெரிய தலைவலி காட்டுப்பன்றிகள்தாம். நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை ஒடித்து நாசம் செய்துவிடும்” என காட்டுப்பன்றிகளின் தாக்குதல் குறித்துப் பகிர்ந்துகொண்டார் மனோகரன்.

பொதுவாகக் காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளிடமிருந்து விளைநிலத்தைப் பாதுகாக்க மின்வேலி அமைக்கும் பழக்கம் உழவர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், அப்படி மின்வேலி அமைக்கும்போது அதில் சிக்கிக் காட்டுப்பன்றி இறந்தால் காவல்துறைக்கும் வனத்துறைக்கும் பதில் சொல்ல வேண்டிவரும்.

இது மிகச் சிரமமான விஷயம். மேலும் சில நேரம் மனிதர்களும் இந்த மின்வேலியில் சிக்கிவிடுவதுண்டு. அதனால் இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என அவர் யோசித்தார். சில வழிமுறைகளைக் கண்டறிந்தார்.

“கரும்புத் தோகையை 2 அடி உயரத்துக்கு ஒரு பார் (வாய்க்கால்) விட்டு ஒரு பாரில் தோகைகளைக் குவித்தேன். இந்த 2 அடி உயரமுள்ள தோகைக் குவியலைத் தாண்டி ஒன்றை அடி உயரமுள்ள காட்டுப்பன்றி ஏறி வரும்போது தோகைக்குள் சிக்கிக்கொண்டு நடக்க முடியாமல் போகும்.மேலும் கரும்புத் தோட்டத்தைச் சுற்றிலும் வரப்பையொட்டித் தக்கைப் பூண்டு விதைத்தேன்.

இந்தத் தக்கைப்பூண்டின் வாசம் காட்டுப் பன்றிகளுக்குப் பிடிக்காது. கரும்பின் வேர், தக்கைப்பூண்டின் வேர் பூமியில் பின்னி பிணைந்திருப்பதால் பன்றியால் இவற்றைத் தோண்டவும் முடியாது. தக்கைப்பூண்டு மூலம் ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து கிடைக்கும். இது 110 கிலோ யூரியாவுக்குச் சமம்.

100 கிலோ தோகையில் 1.54 கிராம் தழைச்சத்தும் 800 கிராம் மணிச் சத்தும் 700 கிராம் சாம்பல் சத்தும் கிடைக்கும். இவை எல்லாம் சான்றுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன” என அந்த வழிமுறைகளையும் அதன் பயன்களையும் மனோகரன் பகிர்ந்துகொண்டார்.

இவை அல்லாமல் வரப்புகளில் கோ 4 என்ற புல்வகையை விதைத்துள்ளார். இந்தப் புல்வகையில் உள்ள சிலந்திப்பூச்சி, சிவப்பு வண்டு கரும்பை அழிக்கும் குருத்துப்பூச்சிகளைக் கொல்லும் இயல்புகொண்டது. மேலும் இதனால் 90 சதவீதக் களைகள் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.

“பொதுவாக இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கரும்பை மருத்தாம்பு விட்டுச் சாகுபடி செய்வார்கள். பின் புது கரும்புப் புல் நடுவார்கள். ஆனால், நான் 14-வது முறையாக மருத்தாம்பு விட்டுச் சாகுபடி செய்கிறேன்” என்கிறார் அவர். மாற்றி யோசித்ததுதான் அவரது இந்த வெற்றிக்கான காரணம்.

விவசாயி மனோகரனைத்

தொடர்பு கொள்ள: 9443668346

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

காட்டுப்பன்றிபுதிய தொழில்நுட்பம்கரும்புப் பயிர்தொழில் நுட்பங்கள்உழவர்கள்கரும்புத் தோகைதக்கைப்பூண்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author