Last Updated : 13 Jul, 2019 11:27 AM

 

Published : 13 Jul 2019 11:27 AM
Last Updated : 13 Jul 2019 11:27 AM

தோட்டக்கலைப் பயிர் சாகுபடிக்கு மானியம்

தோட்டக்கலை, உழவுத் தொழிலில் ஒரு முக்கிய அங்கம். இதனால் உழவர்களுக்கு மாற்றுப் பயிர் சாகுபடி வாய்ப்பு கிடைக்கிறது. தோட்டக்கலை சார்ந்த வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மேலும், பண்ணை நிலங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பும் அதிகம்.

விளைபொருட்களின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப, தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பும் உற்பத்தியும் அதிகரித்துவருகின்றன. தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு ஒரு ஆண்டுக்கு 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல் தோட்டக்கலைப் பயிர்களின் ஆண்டு உற்பத்தி 7.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தோட்டக்கலைப் பயிர்கள்

காய்கறிகள், பழங்கள், கீரைகள், காளான், அலங்காரச் செடிகள், மலர்ச் செடிகள் போன்றவை தோட்டக்கலைப் பயிர்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இதேபோல் தேயிலை, காப்பி, பாக்கு போன்ற மலை சார்ந்த பயிர்கள் மலைப்பயிர்கள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றிற்கு மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலை -  மலைப்பயிர்கள் துறையின் பல்வேறு திட்டங்களின்கீழ் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குகின்றன.

“தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின் 2019-20 திட்டத்தின்படி தோட்டக்கலைப் பயிர் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பல்வேறுவிதமான மானியங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி வீரிய ரக காய்கறிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000, ‘மா' நெருக்கு செடி நடவுக்கு ரூ.9,840, திசு வாழைக்கன்று நடவுக்கு ரூ.37,500, பப்பாளி நடவுக்கு ரூ.23,120, செண்டுமல்லி நடவுக்கு ரூ.16,000, மிளகாய்ச் சாகுபடிக்கு ரூ.12,000, மிளகுச் சாகுபடிக்கு ரூ.20,000, பழைய மாந்தோட்டத்தைப் புதுப்பிக்க ரூ.20,000, நீர் சேமிப்பு கட்டமைப்புக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது” எனத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கோவை மாவட்ட துணை இயக்குநர் ஜி.கே. உமாராணி கூறுகிறார்.

பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர்களை வளர்க்கும் வகையில் பசுமைக் குடில்கள் 1,000 சதுர மீட்டரில் அமைக்க ரூ.4,67,500, 1001-2,000 சதுர மீட்டர் வரை ரூ.4,45,000, 2,001-4000 சதுர மீட்டர் வரை ரூ.4,22,000 வழங்கப்படுகிறது. நிழல் வலைக்கூடாரம் அமைக்க 1,000 சதுர மீட்டருக்கு ரூ.3,55,000, பறவை தடுப்பு வலை அமைக்க ரூ.17,500, நிலப்போர்வை அமைக்க எக்டேருக்கு ரூ.16,000 வழங்கப்படும். ஒருங்கிணைந்த உர மேலாண்மை - பயிர்ப் பாதுகாப்பு மேலாண்மைக்கு எக்டேருக்கு தலா ரூ.1,200, மண்புழு உரக் கூடாரம் அமைக்க ரூ.50,000 வழங்கப்படுகிறது. அறுவடைப்

பின் செய்நேர்த்தி முறையில் பயிர்களைத் தரம் பிரித்துச் சிப்பம் கட்டும் அறை அமைக்க 600 சதுர அடிக்கு ரூ.2,00,000, குளிர்வூட்டும் அறை அமைக்க ரூ.8,75,000, வெங்காயச் சேமிப்புக் கிடங்கு அமைக்க ரூ.87,500, பதப்படுத்தும் சூரிய உலர்த்தி அமைக்க ரூ.1,30,000, நடமாடும் விற்பனை ஊர்தி வாங்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும்.

விவசாயிகள் உள் மாநிலத்தில் பயிற்சி பெற ரூ.2,000, வெளி மாநிலத்தில் பயிற்சி பெற ரூ.10,000, வெளி மாநிலப் பட்டறிவு பயணத்துக்கு ரூ.5,000 என மத்திய, மாநில அரசுகள் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

“பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா திட்டம் 2019-2020-ல் ஆடிப்பட்டத்தில் (Kharif) ஒரு ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்வதற்கான ரூ.2,18,348 செலவினத்தில், பயிர் காப்பீட்டுக்கான பிரிமீயம் தொகையாக 5 சதவீதம் அதாவது ரூ.10,917 செலுத்த வேண்டும்.

மா சாகுபடி செய்வதற்கான ரூ.50,635 செலவினத்தில் ரூ.2,536, திராட்சை சாகுபடி செய்வதற்கான ரூ.1,11,397 செலவினத்தில் ரூ.5,569, தக்காளி சாகுபடி செய்தவற்கான ரூ.66,690 செலவினத்தில் ரூ.3,335, கத்தரி சாகுபடி செய்வதற்கான ரூ.51,425 செலவினத்தில் ரூ.2,571, வெங்காயம் சாகுபடி செய்வதற்கான ரூ.94,848 செலவினத்தில் ரூ.4,742, மரவள்ளி சாகுபடிக்கான ரூ.74,594 செலவினத்தில் ரூ.1,246, மஞ்சள் சாகுபடிக்கான ரூ.1,88,214 செலவினத்தில் ரூ.9,411 வீதம் பிரீமியம் செலுத்த வேண்டும். இதன்மூலம் ஏதேனும் காரணங்களில் பயிர் உற்பத்தி பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட சதவீதம் கணக்கிடப்பட்டு, அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பளவு விரிவாக்கத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000, காய்கறி விதைக்கு ரூ.10, நிரந்தரப் பந்தல் அமைக்க ரூ.2,00,000, தாங்கு குச்சி நடவுக்கு ரூ.25,000 மானியம் அளிக்கப்படுகிறது.

நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படும். மானாவாரி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை சார்ந்த பண்ணை அமைக்க ஹெக்டேருக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது.

இம்மானியங்களைப் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில உரிமைச் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கலாம்” எனப் பகிர்ந்துகொண்டார் உமாராணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x