ஒளியிலே தெரிவது…

ஒளியிலே தெரிவது…
Updated on
1 min read

மே

ற்குத் தொடர்ச்சி மலை மழைக்காடுகள். இந்தக் காடுகளை தரிசிக்க தென்மேற்குப் பருவ மழைக்காலத்தைவிட வேறு எந்த காலம் சிறந்ததாக இருக்க முடியும்? அன்றும் மழை விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருந்தது. எங்கும் கும்மிருட்டு.

மகாராஷ்டிர மாநிலம் அம்போலி காட்டுப் பகுதிக்குள் நானும் நண்பர்களும் இரவில் முன்னேறிக்கொண்டிருந்தோம். இடையிடையே தவளைகளின் கரகர குரல் குறிப்பிட்ட இடைவெளியில் காதை எட்டியது. பம்பாய் புதர் தவளையின் குரல் அதிவேகமாக தட்டச்சு செய்வதைப் போலிருந்தது. தோலில் சுருக்கம் கொண்ட தவளையோ தன் இணையை மெல்லிய விசில் ஒலிகளால் அழைத்துக்கொண்டிருந்தது. அந்தக் காடுகளுக்காக நன்கு அறியப்பட்டிருந்த மலபார் விரியன் பாம்புகளைத் தேடித்தான் சென்றிருந்தோம்.

முந்தைய நாள் பெய்த மழை காரணமாக பசுமை பாய் விரித்திருந்தது. என் நண்பரும் ஊர்வன நிபுணருமான ஹேமந்துடன் இன்னொரு மர்ம விஷயத்தையும் அந்த இருட்டில் தேடிச் சென்றுகொண்டிருந்தோம். அது இரவில் ஒளிரும் பூஞ்சைகள். அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்ற பிறகு எங்கள் சுட்டுவிளக்குகளை அணைத்தோம். இருட்டுக்கு எங்கள் கண்களைப் பழக்கிக்கொண்டோம்.

அப்போதுதான் அந்த மாயாஜாலம் எங்களுக்கு மெல்லிதாகப் புலப்பட ஆரம்பித்தது. கடைசியாகக் காட்டின் ஒரு தரைப் பகுதியிலிருந்து, அந்த கும்மிருட்டில் பச்சை வெளிச்சம் தெரிந்தது. இருளில் ஒளிரும் அந்த பூஞ்சைகளைத் தேடித்தான் நாங்கள் வந்திருந்தோம். அதோ, காட்டின் தரைப்பகுதி ஒளிர ஆரம்பித்துவிட்டது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படக் காட்சிகள் என் மனதில் தோன்றி மறைந்தன.

பருவமழைக் காலத்தில் மழை பெய்த பிறகுதான், இந்த மர்மப் பூஞ்சைகள் ஒளிர ஆரம்பிக்கின்றன. இவை இயற்கையாக ஒளிரும் பூஞ்சை வகை. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சில பகுதிகளில் மட்டுமே இந்த அரிய பூஞ்சை வகை இருக்கிறது. அந்த ஒளிரும் பூஞ்சை இருளில் ஒளிர்ந்து எங்களை நோக்கி மர்மப் புன்னகையை வீசியது, விடைபெற்றோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in