Published : 05 Aug 2017 10:59 am

Updated : 05 Aug 2017 10:59 am

 

Published : 05 Aug 2017 10:59 AM
Last Updated : 05 Aug 2017 10:59 AM

கண் மூடிய புரட்சி மரபணு!

ரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகப் பலவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. ‘உண்ணும் உணவில் மரபணு மாற்றம் கூடாது’ என்று விவசாய, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து அரசை நிர்ப்பந்தித்துவந்தன. அரசு வழக்கம்போல் காது கொடுக்காமல் இருந்துவந்தது.


அப்போது மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து, மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர் புஷ்ப பார்கவாவிடம் கேட்டபோது, “அப்படி மக்கள் போராட்டங்களுக்கு அரசு காது கொடுக்கவில்லை என்றால், அரசு தோல்வியைச் சந்திக்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். புரட்சி இப்படித்தான் தொடங்கும்!” என்றார்.

பத்ம விருதுகள் வாங்கிவிட்ட பிறகு பல விஞ்ஞானிகள் அடக்கி வாசிப்பார்கள். ஆனால், புஷ்ப பார்கவா அதற்கு நேர்மாறாக இருந்தார். மக்களின் நலனுக்கு எதிராகத் திட்டங்கள் கொண்டுவரப்படும்போது, அரசின் தவறைச் சுட்டிக்காட்ட அவர் தவறியதில்லை. இந்தியாவின் இதர விஞ்ஞானிகளிடமிருந்து புஷ்ப பார்கவாவைத் தனித்துக் காட்டுவது இந்தக் குணம்தான்.

அப்படிப்பட்ட விஞ்ஞானி கடந்த 1-ம் தேதி மறைந்துவிட்டார்.

நவீன உயிரியலின் வடிவமைப்பாளர்

1928 பிப்ரவரி 2 அன்று பிறந்த புஷ்ப மித்ர பார்கவா, அடிப்படையில் உயிரி வேதியியல் அறிஞர். இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் குறித்து முதன்முதலில் பேசியவர் இவரே. ‘மரபணுப் பொறியியல்’ என்ற பதத்தைப் பயன்படுத்திய முன்னோடிகளில் இவரும் ஒருவர்.

1977-ம் ஆண்டு ஹைதராபாத்தில், ‘சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிக்யுலர் பயாலஜி’எனும் அறிவியல் நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.அதோடு, அந்த நிறுவனத்தின் இயக்குநராக 1977 முதல் 1990-ம் ஆண்டுவரை பணியாற்றினார்.

இவருடைய முயற்சியின் மூலமாகத்தான் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ், 1986-ம் ஆண்டு உயிரித் தொழில்நுட்பத் துறை புதிதாகத் தொடங்கப்பட்டது. இந்தத் துறையின்கீழ் மரபணுப் பொறியியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அரசிடமிருந்து நிதி பெற்று மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை, மக்களுக்குப் பயன்படும் விதமாக லாப நோக்கமில்லாத வணிகமயமாக்கலுக்கு அரும்பாடுபட்டார். இந்தக் காரணங்களால், ‘இந்தியாவின் நவீன உயிரியல் வடிவமைப்பாளர்’ என்று அவர் போற்றப்படுகிறார்.

வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்

இந்தியாவில், மரபணு மாற்றப் பயிர்களின் வரலாறு 2002-ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்போதுதான், பி.டி. பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தப் பயிர் வந்த பிறகு, விவசாயிகள் பயன்படுத்திய விதைகளில் சுமார் 90 சதவீதம், பி.டி. வகைகளாக இருந்தன. பி.டி.க்கு முன், வெறும் 40 சதவீதக் கலப்பின விதைகளையே விவசாயிகள் பயன்படுத்திவந்தனர்.

பி.டி. பருத்திப் பயிர் தொடக்கத்தில் பெரிய லாபத்தைக் கொடுத்தது. அதையொட்டி, பி.டி. கத்திரிக்காய், மரபணு மாற்றப்பட்ட கடுகு ஆகிய பயிர்களையும் அறிமுகப்படுத்த அன்றைய மத்திய அரசு நினைத்தது. ஆனால், ஆட்சியாளர்கள் ஒரு விஷயத்தை எளிதில் மறந்திருந்தார்கள். அது, பி.டி. பருத்தி மழைப்பொழிவை நம்பியிருந்த பகுதிகளில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. நிரந்தர பாசன வசதி உள்ள பகுதிகளில் மட்டுமே, அது ஓரளவு லாபத்தைக் கொடுத்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் பெருமளவிலான விவசாய நிலம், மழைப்பொழிவை நம்பியிருக்கிற வானம் பார்த்த பூமியாக இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், இந்த விஷயங்கள் குறித்து ஆராய உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் (ஜி.இ.ஏ.சி.) உறுப்பினராக, 2008-ம் ஆண்டு புஷ்ப பார்கவாவை நியமித்தது. இந்தக் குழுதான், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மரபணு மாற்றம் சார்ந்த ஆய்வுகளை நெறிப்படுத்தும் அமைப்பு.

புஷ்ப பார்கவா நியமிக்கப்படுவதற்கு முன்புவரை, அந்தக் குழுவின் தகிடுதத்தங்கள் வெளியே வரவில்லை. பார்கவா வந்த பிறகு, மரபணு மாற்றப் பயிர்கள் தொடர்பான உண்மைகள் பல வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின. அதில் முக்கியமான ஒன்று… பி.டி. பருத்தியில் உள்ள நச்சுத்தன்மை தொடர்பான உண்மையை, ஜி.இ.ஏ.சி. குழு கண்டுகொள்ளவில்லை என்பது!

மான்சாண்டோ கடவுள் அல்ல!

பி.டி. பருத்தியாவது உண்ணும் பொருள் அல்ல. அதனால் மக்கள் ஓரளவு தப்பித்தார்கள். பி.டி. பருத்தியின் விளைச்சல் பொய்த்துப் போய், விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொள்ள ஆரம்பித்த தருணத்தில், மத்திய அரசு அடுத்த அஸ்திரத்தை மக்கள் மீது ஏவியது. அது பி.டி. கத்திரிக்காய்!

பி.டி. பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2006-ம் ஆண்டு பி.டி. கத்திரிக்காயை அறிமுகப்படுத்த ஆரம்பகட்டப் பணிகள் நடைபெறத் தொடங்கின. அப்போது அந்தக் கத்திரிக்காயைப் பரிசோதித்த முதல் நிபுணர் குழு, ‘இந்தக் கத்திரிக்காய் பாதுகாப்பானது’ என்று சான்றளித்தது.

05CHVAN_pushpa-mittra-bhargava.jpg புஷ்ப பார்கவா

பிறகு 2009-ம் ஆண்டு இரண்டாவது நிபுணர் குழுவும், ‘இந்தக் கத்திரிக்காய் பாதுகாப்பானது’ என்று சொன்னது மட்டுமல்லாமல், இதைப் பயிரிடவும் ‘ஜி.இ.ஏ.சி.’யிடம் பரிந்துரைத்தது. அதை ஏற்றுக்கொண்ட அந்தக் குழு, அந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பி.டி. கத்திரிக்காயை வணிகமயமாக்குவதற்கு அனுமதித்தது.

உடனே, சூழலியல் செயல்பாட்டாளர்கள் பலர், ‘புஷ்ப பார்கவா இருந்துமா இப்படி?’ என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். உண்மையில், அப்போது பார்கவா வழங்கிய சில வழிகாட்டுதல்களை ஜி.இ.ஏ.சி., ஏற்கவில்லை. பொருட்படுத்தவில்லை என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

“ஜி.இ.ஏ.சி., உறுப்பினர்கள், ஏதோவொரு கட்டாயத்தின் பேரிலேயே பி.டி. கத்திரிக்காயை அனுமதித்திருக்கிறார்கள். அது என்னவென்று தெரியவில்லை. அவர்கள் காட்டும் பி.டி. கத்திரிக்காய் தொடர்பான பரிசோதனைகள் எல்லாம் மான்சாண்டோ மேற்கொண்டவை.

அவை போதாது. இன்னும் கூடுதலாக 30 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினேன். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. மான்சாண்டோ சொல்வதை எல்லாம் நம்பக் கூடாது. காரணம், மான்சாண்டோ கடவுள் அல்ல!” என்று ஊடகங்களில் எழுதவும் பேசவும் செய்தார் பார்கவா.

தொடர்ந்து, தனது கருத்துகளை ஒரு கடிதமாக அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கும் அனுப்பிவைத்தார். தொடர்ந்து, 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பி.டி. கத்திரிக்காய் அறிமுகத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு, அறிவியல் உலகில் புஷ்ப பார்கவா ஒரு புரட்சி மரபணுவாக வலம்வந்தார்.

எதிர்க்கும் காரம் குறையாது

அடுத்தபடியாக, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அறிமுகப்படுத்த முயன்றுவருகிறது. அது மட்டும் நிகழ்ந்தால் இந்தியாவில் ஒரு ‘பேரழிவு’ ஏற்படும் என்று எச்சரித்தபடி இருந்தார் பார்கவா.

“மரபணு மாற்றக் கடுகுக்குக் கதவைத் திறந்துவிட்டால், பிறகு, எல்லாப் பயிர்களிலும் மரபணு மாற்றத்தை வரவேற்க வேண்டியதாகிவிடும். ‘பேயர்’ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு நமது விவசாயம் அடிமையாகிவிடும். போராடிப் பெற்ற சுதந்திரத்தை மீண்டும் இழந்துவிடுவோம்!” என்று கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“இன்று பலர் பசியில் வாடுவதற்குக் காரணம், போதுமான உணவு இல்லாதது அல்ல. மாறாக, அந்த உணவைப் பெறுவதற்கான வளங்கள் அவர்களிடத்தில் இல்லாமல் போனதே. மரபணு மாற்றப் பயிர்கள் இல்லாமல், நம்மால் தேவையான அளவுக்கு உணவு உற்பத்தி செய்ய முடியும். சொல்லப்போனால், இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் 40 சதவீதம் வீணாகிறது!” என்று தன் கட்டுரை ஒன்றில் எழுதினார் பார்கவா. அவரின் வார்த்தைகளை உலகம் நம்பும்போது, அவர் வழியில் இன்னும் பல புரட்சி மரபணுக்கள் பிறக்கும் என்று அர்த்தம்! மண்ணில் விழுந்த விதைகள் உறங்குவதில்லை.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x