கடலம்மா பேசுறங் கண்ணு 15: பசி, சாகசம், மரணம்!

கடலம்மா பேசுறங் கண்ணு 15: பசி, சாகசம், மரணம்!
Updated on
2 min read

டல் தங்கல் பயணத்துக்காக எடுத்துச் செல்லும் கட்டுச்சோற்றுக் கவளங்கள் மூன்று நாட்கள் தாங்கும். அதனுடன் சிறு பனையோலைக் கடகத்தில் வேகவைத்த உணக்கக் கிழங்கை (சீவி உலர்த்திய மரவள்ளிக் கிழங்கு) எடுத்துச் செல்வார்கள். பசி போக்கவும் விழித்திருக்கவும் அருமையான நொறுக்குத் தீனி இது.

சுட்ட வற்றல் மிளகு, நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு – மூன்றும் கலந்த நீத்தண்ணியை (நீர்த்த சோற்று வடிநீர்) கன்னாசுகளில் (அல்லது குப்பிகளில்) எடுத்துக்கொள்வார்கள். கடலுக்குள்ளே தாகசாந்திக்கு அருமையான பானம் இது. மடைப்பெட்டியில் (பனையோலையில் முடையப்பட்ட, இடுப்பில் செருகிக்கொள்ளும் சிறு மடக்குப் பெட்டி) நறுக்கிய கொட்டைப்பாக்கு, வெற்றிலை, புகையிலைத்தண்டு, சுண்ணாம்பு போன்றவை தாராளமாக இருக்கும்.

உட்கடலின் வெட்டவெளியில் பகலின் வெய்யிலும் வாரியடித்துத் தோலில் படியும் உப்பும் இரவின் குளிரும் இருளும் 24 மணி வேளைக்குச் சுழற்சியாக வந்து கொண்டிருக்கையில் உடல் களைப்பையும் மனச்சோர்வையும் சமாளித்து விழித்திருக்க, கடலோடி கைத்தலம் பற்றுவது வெற்றிலைதான்.

கடந்த மே 2016-ல் அந்தமானுக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் சதாம் போர்ட் படகுத் துறையிலிருந்து சதர்ன் ஐலண்டு (தெற்குத் தீவு). ராஸ் தீவு ஆகிய இரண்டு தீவுகளுக்கும் கடத்துப் படகு (Ferry Boat) மூலம் பயணித்தோம். அந்தமானில் எப்போது மேகம் கருக்கும் மழையடிக்கும் என்று கணிப்பது கடினம். அந்தப் பிரதேசத்தின் இயல்பே அதுதான். தெற்குத் தீவிலிருந்து பிற்பகல் மூன்றரை மணிக்கெல்லாம் ராஸ் தீவை நோக்கி எங்கள் படகு புறப்பட்டது.

நடுக்கடலில் திடீரென்று மழையடிக்கத் தொடங்கியது. படகில் ஏறத்தாழ 50 பேர் இருந்தோம். அதில் பெரும்பாலானோர் முதன்முதலாகக் கடலில் பயணிப்பவர்கள். சட்டென்று பலமாக வீசிய கச்சான் காற்று படகின் ஒருபக்கமாக இருந்தவர்களை மழையில் குளிப்பாட்டிவிட, அந்தப் பக்கம் இருந்தவர்கள் எல்லோரும் சட்டென்று எங்கள் பக்கம் வந்துவிட, படகு கவிழ்ந்துவிடும் அபாயம் உருவாயிற்று.

ஒலிபெருக்கியில் பயண வழிகாட்டி எவ்வளவோ எச்சரித்தும் எடுபடவில்லை. அலைகளின் போக்கிலும் படகு அலைக்கழிக்கப்பட்டது, குதித்துக் குதித்துத் தள்ளாடியது. பிறகு படகின் வேகம் தானாகவே மிதமாயிற்று. அன்று படகு கவிழாமல் மீண்டது ஆச்சரியம். ராஸ் தீவில் இறங்கி ஜப்பானீஸ் பங்கருக்குள் நான் நுழையும்போது, எங்கள் படகில் உடனிருந்த ஓர் அம்மணியின் முகபாவத்தைக் கவனித்தேன். மரணபீதி இன்னும் விடைபெற்றிருக்கவில்லை.

ஆழக்கடலில் நான்கைந்து நாட்களுக்கு நான்கு கட்டைகளின் மீது நான்கு பேர் மிதந்து வாழ்வது, உண்பது, கழிப்பது, மீன்பிடிப்பது, ஓய்வெடுப்பது… சாதாரண விஷயமல்ல.இதில் கடலுக்கும் அவர்களுக்குமிடையே இடைவெளி என்பது இல்லை. அலைகள் கட்டுமரத்தைத் தழுவித் தாலாட்டிக்கொண்டேயிருக்கும். இரவில் நாலாபுறமும் இருள் சூழ்ந்திருக்க, சமுத்திரத்தின் பெருவெளியிலிருந்து எழும் ‘ஹோ’வென்ற இரைச்சல். ராஸ் தீவு படகுப் பயணம் இதைத்தான் எனக்கு நினைவுபடுத்தியது. கடலின் அலைக்கழிப்பில் கட்டுமரம் கவிழாமல் பார்த்துக்கொள்வதே ஒரு சர்க்கஸ் சாகசம்தானே.

படகுகளில் மீன்பிடிப் பயணம் போகும் கடலோடிகள் எப்போதும் கட்டுச்சோற்றைச் சுமக்க வேண்டியதில்லை. அரிசி, தண்ணீர், சூட்டடுப்பு, பானையுடன் சீராகப் பிளந்த விறகு / நறுக்கிய தென்னம்பாளைக் கற்றைகளைப் படகில் எடுத்துச் செல்வார்கள். துள்ளத் துடிக்க மீன் சமைத்துண்ணும் வாய்ப்பு இவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்.

தங்கள் பயணத்தில் மூன்று, நான்கு நாட்களுக்கு அவர்கள் மீன்பிடித்தாலும் கடைசி நாளில் அறுவடையாகும் மீ்ன்கள் மட்டுமே சமைக்கத் தகுதியானவை. முந்தைய அறுவடை மொத்தமும் பதமான நிலையிலே உப்பில் இடப்படுகிறது. கொண்டுவந்த உணவுப் பொருட்கள், குடிநீர் எல்லாம் செலவாகிவிடும் நிலையில் உப்பிட்ட மீன் கடகங்கள் ஒரு முனையில், கடைசி நாள் அறுவடை மறுமுனையில் என்பதாகக் கட்டுமரம் பாய்விரித்துக் கரை பிடிப்பது அன்றைய வழமை.

தொலைத் தொடர்பு வசதியில்லை. இடம் கணிக்கும் கருவிகளில்லை. இயந்திர உத்திகள் இல்லை. பனிக்கட்டி அறிமுகமாகி இருக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடு என்று எதுவும் இல்லை. கரை காணாத் தொலைவில் கடலின் நீரோட்டத்தின் மீது மிதந்தவாறு நான்கைந்து நாட்களைக் கட்டுமரத்தில் கழித்துக் கரை திரும்புவதே படுவோட்டுத் தொழில். அந்தக் கடல் தங்கலின் கால அளவைத் தீர்மானிப்பது மூன்று காரணிகள்: படகில் எடை தாங்கும் அளவுக்கு அறுவடை கிடைத்து விடுவது, கொண்டுவந்த உணவும் குடிநீரும் தீர்ந்துபோவது, அல்லது அபாயமான பருவநிலை அறிகுறிகள் கடலில் தென்படுவது.

ஆனால், கடல் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கூறுகளோ வேறு: பசி, சாகசம், மரணம்.

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in