

நாட்டின் மிகப் பெரிய தொழிலான வேளாண்மை குறித்துப் பேசும்போது, வேளாண் கொள்கைகள் குறித்தும் பேசி ஆக வேண்டும். அந்தக் கொள்கைகள் குறித்துப் பேசும்போது, தவிர்க்க முடியாத பெயர் தேவிந்தர் சர்மா. தாவர வளர்ப்பு, மரபணுவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பத்திரிகையாளராகச் சேர்ந்தார். 80-களில், வேளாண்மை குறித்து எழுதவந்த சில பத்திரிகையாளர்களில் மிகவும் முக்கியமானவர்.
சில காலம் கழித்து, பத்திரிகைத் துறையிலிருந்து விலகி, வேளாண் கொள்கைகள் சார்ந்த ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார். நாடெங்கும் பயணித்து, கிராமங்களுக்குச் சென்று உழவர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை தன் கட்டுரைகள் வழியாக முன்வைத்து வருகிறார். ‘கிரவுண்ட் ரியாலிட்டி’ என்ற பெயரில் வலைப்பூ ஒன்றையும் நடத்திவருகிறார். நேரடியான கள அனுபவமும், பிரச்சினைகளுக்குப் பின்னுள்ள அரசியலும் இவருக்குத் தெரிந்திருப்பதால், இவரின் கருத்துகளுக்கு விஞ்ஞானிகளிடத்திலும் அதிகாரிகளிடத்திலும் நல்ல செல்வாக்கு உண்டு.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரிடம், இன்றைய வேளாண்மையின் நிலை குறித்துப் பேசியதிலிருந்து…
- தேவிந்தர் சர்மா
இன்று உழவர்கள் யாரிடத்தில் பேசினாலும், ‘குறைந்தபட்ச ஆதார விலை’ தொடர்பான தங்களது ஆதங்கத்தைதான் வெளிப்படுத்துகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
நாடு முழுக்கக் குறைந்தபட்ச ஆதார விலையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று உழவர்களும், வேளாண் அமைப்புகளும் போராடி வருகின்றன. ஒரு உண்மை தெரியுமா..? அப்படியே அந்த ஆதார விலையை உயர்த்தினாலும், அதனால் பயனடையும் உழவர்களின் எண்ணிக்கை வெறும் 6 சதவீதம் மட்டும்தான்.
சுமார் 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோதுமை, அரிசி ஆகியவற்றை மட்டும்தான் அரசு வாங்கிக் கொள்கிறது. அந்த இரண்டுக்கு மட்டுமே ஆதார விலை கிடைக்கிறது. மற்ற பயிர்கள் அனைத்தும் சந்தையை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. சந்தையில் உழவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைப்பதில்லை.
இதனால் அவர்கள் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது. அதில் கிடைக்கும் லாபம், இடுபொருள் செலவை ஈடுசெய்தில்லை. அதனால் வங்கியிலும், தனியாரிடத்திலும் கடன் வாங்குகிறார்கள். மழை பொய்க்க, விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போய், கடனுக்கான வட்டியைச் செலுத்த முடியாமல் சோர்ந்து, இறுதியில் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
வேளாண் பொருட்கள் விற்பனைக் குழுவின் மூலம் முறையான விற்பனைக் கூடங்களை அரசு அமைக்காததால், இந்த நிலை உருவாகிறது. அதற்குக் காரணம், வேளாண்மையில் அரசு போதுமான முதலீட்டை இடவில்லை. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கென 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அந்த முதலீடு எவ்வளவு தெரியுமா? வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய்தான்.
வேளாண்மையில் செய்யப்பட்ட முதலீட்டைவிட நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு இடப்பட்ட முதலீடு இரண்டு மடங்கு அதிகம். ஆக, இதிலிருந்து தெரிவது, அரசுக்கு வேளாண்மையில் எந்த விருப்பமும் இல்லை என்பதுதான்.
1996-ம் ஆண்டு உலக வங்கி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 40 கோடி மக்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றி, நகர்ப்புறத்தை நோக்கி இடம்பெயர வைக்க வேண்டும் என்று உலக வங்கி வழிகாட்டியது. அதன்படிதான் இன்றைய அரசுகள் செயல்பட்டு வருகின்றன. ஆம், விவசாயத்தைக் கொல்ல அரசு முடிவெடுத்துவிட்டது!
வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசுகள் யோசிப்பதை அல்லது மறுப்பதை, வேளாண்மையிலிருந்து மக்களை வெளியேற்றுவதன் ஒரு பகுதியாகப் பார்க்கலாமா?
கடன் தள்ளுபடி என்பது தற்காலிகத் தீர்வுதான். அப்படியே அரசுகள், வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தாலும், அதனால் பெரிய நன்மைகள் எதுவும் விளைந்துவிடப் போவதில்லை. இருந்தாலும் அரசுகள், அந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் எனது வாதமும்.
ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின்படி, எஸ்ஸார் ஸ்டீல் எனும் தனியார் நிறுவனத்துக்கு வங்கிகளில் இருக்கும் கடன் அளவு 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். அதைப் பற்றி அரசுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் மகாராஷ்டிர உழவர்களின் கடன் 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்தான். எஸ்ஸார் ஸ்டீலுக்கு இருக்கும் கடனைவிட, மகாராஷ்டிர உழவர்களின் வாராக் கடன் குறைவுதான். இருந்தும், உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய அரசு யோசிக்கிறது. இப்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு உதாரணத்தை சுட்டிக்காட்டிக் கொண்டே போக முடியும்.
உற்பத்தியைப் பெருக்கினால் இதுபோன்று கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான தேவையே இருக்காது என்ற ஒரு வாதம் இருக்கிறதே?
அதைப்போன்று தவறான வாதம் வேறு எதுவும் இல்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். பஞ்சாப் மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு சுமார் 98 சதவீத நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருக்கின்றன. ஒரு ஹெக்டேருக்கு 45 குவிண்டால் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் ஒப்பிட்டால், இது அதிகம். அதேபோல ஹெக்டேருக்கு 60 குவிண்டால் வீதம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இது சீனாவின் நெல் சாகுபடிக்கு நிகரானது. அங்கு ஹெக்டேருக்கு 67 குவிண்டால்.
இப்படியிருக்கும் நிலையில், உற்பத்தியைப் பெருக்கினால் உழவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றால், பஞ்சாபில் எல்லா உழவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே? ஆனால் அங்கு உழவர்கள் தற்கொலை செய்துகொள்ளாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. எனவே, உற்பத்திப் பெருக்கம் மட்டுமே தற்போதிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை.
உழவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்காதவரை, இந்த நிலை தொடரவே செய்யும். ஆனால் இன்றிருக்கும் வேளாண் கொள்கைகளைப் பார்த்தீர்கள் என்றால், உற்பத்திப் பெருக்கத்துக்கு மட்டுமே அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியும்.
சரி, உழவர்களுக்கு எப்படி நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பது? அதற்கென திட்டம் ஏதும் இருக்கிறதா?
நவீன வேளாண்மை என்பது இரண்டு வகையான உற்பத்தி முறைகளை முன்வைக்கிறது. ஒன்று, மேலை நாடுகளில் இருப்பது போன்ற மானிய வேளாண்மை. அங்கு உழவர்கள் பெருமளவில் அரசு மானியத்தைச் சார்ந்தே இருக்கிறார்கள். அரசும் மானியத்தை வழங்கி வேளாண்மையை ஊக்கப்படுத்துகிறது. அதனால், அங்கு உழவர்களுக்கு நிலையான வருமானம் உண்டு.
ஆனால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வேளாண்மை என்பது வாழ்வாதாரம். அதாவது, உழவர்கள் தங்களின் சொந்தப் பலன்களுக்காக மட்டுமே வேளாண்மையை மேற்கொள்கிறார்கள். அதில் லாபத்தைவிட, கடன்கள்தான் அதிகம். எனவே, நிலையான வருமானம் இருப்பதில்லை. இதன் காரணமாகவே, உழவர்களுக்கு மாதா மாதம் நிலையான வருமானம் வழங்கும் ‘உழவர் ஊதியக் குழு’ ஒன்றை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்கிறேன்.
அந்தக் குழுவின் மூலம் உழவர்களுக்கு மாதா மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை, ஒருவர் மாண்புடன் உயிர் வாழ்வதற்குக் குறைந்தபட்சம் மாதம் ரூ.18 ஆயிரம் தேவை என்று சொல்கிறது. எனவே, அந்தப் பரிந்துரையின்படி, உழவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய நேரடி வருமானம், மானியம் என்கிற பெயரில் உழவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
1970-களில் ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ.76, குறைந்தபட்ச ஆதார விலையாக இருந்தது. 2015-ம் ஆண்டில் அந்த ஆதார விலை வெறும் 19 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. அதன்படி, ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ.1,450 மட்டுமே கிடைக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் (அக விலைப்படி உட்பட) 150 மடங்காக உயர்ந்திருக்கிறது. கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு 170 மடங்காக உயர்ந்திருக்கிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு 320 மடங்காக உயர்ந்திருக்கிறது. கார்பரேட் ஊழியர்களுக்கு ஆயிரம் மடங்காக உயர்ந்திருக்கிறது.
இதே அளவுகோலின்படி, கடந்த 45 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 100 மடங்காக உழவர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டிருந்தால், இந்நேரம் ஒரு குவிண்டால் கோதுமைக்கு குறைந்தபட்சம் ரூ.7,600 கிடைத்திருக்கும். ஆனால் அப்படி வளரவில்லை என்றால், எங்கு பிரச்சினை? ஒரு அரசு ஊழியருக்கு வழங்கும் மரியாதையை, ஏன் ஒரு உழவருக்குத் தருவதில்லை?
வருமானமில்லாமல், எந்த ஒரு மாநிலத்திலும் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் உழவர் தற்கொலைகள் நடைபெறுகின்றன. ‘உழவர்களுக்கான ஊதியக் குழு’வை அமைத்து அதன் கீழ், உழவர்களுக்கு நிலையான மாத வருமானத்தை உறுதி செய்தால், உழவர்கள் தற்கொலை பெருமளவு தடுக்கப்படும்.
உழவர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ‘இயற்கை வேளாண்மை’ முன்னிறுத்தப்படுகிறதே?
நீங்கள் இயற்கை வேளாண்மை செய்கிறீர்களோ அல்லது ரசாயன உரங்களை நம்பி இருக்கிறீர்களோ என்பதல்ல பிரச்சினை. நிலையான வருமானம் இல்லை என்பதே இங்கு பிரச்சினை. அதைத்தான் நாம் விவாதிக்க வேண்டும்!