காப்பீடு உழவர்களைக் காப்பாற்றுகிறதா?

காப்பீடு உழவர்களைக் காப்பாற்றுகிறதா?
Updated on
3 min read

மீ

ண்டும் டெல்லியில், இரண்டாவது கட்டமாகத் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். இந்த வேளையில், உழவர்களைக் காப்பாற்றவந்த ஆபத்பாந்தவனாகச் சித்தரிக்கப்படும் ‘பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா’ எனும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு குறித்து இரண்டு இடங்களிலிருந்து மிக முக்கியமான அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன.

முதல் அறிக்கை, டெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையத்திலிருந்தும் (சி.எஸ்.இ.), இரண்டாவது அறிக்கை, தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அலுவலகத்திலிருந்தும் வந்திருக்கின்றன. இந்த இரண்டு அறிக்கைகளும் மேற்கண்ட விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

புதிய காப்பீட்டில் புதிது என்ன?

பிரதம மந்திரி விவசாயப் பயிர்க் காப்பீடு திட்டம் 2016 ஏப்ரல் 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ‘தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்’, ‘திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்’ ஆகியவற்றுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது. பழைய திட்டங்களில் சில குறைபாடுகள் இருந்ததால் இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன இரண்டு திட்டங்களோடு, மூன்றாவதாக, பருவநிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் நம்மிடையே உண்டு. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் (பிரீமியம் தொகை), ஃபசல் பீமா யோஜனாவின் பிரீமியம் தொகைக்கு நிகராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, ஃபசல் பீமா யோஜனாவையோ பருவநிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையோ இந்த இரண்டு திட்டங்களையுமோ ஒரு மாநிலத்தில் செயல்படுத்தலாம். எதைத் தேர்வு செய்வது என்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்தைப் பொறுத்தது.

புதிய காப்பீட்டுத் திட்டத்தில், கடன் பெற்ற விவசாயிகள் கட்டாயத்தின் பேரிலும், கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரிலும் பங்கேற்கலாம். குளிர்காலம் (ராபி), கோடை பருவத்துக்கு (காரிஃப்) ஏற்றபடி, எந்தெந்தப் பயிர்களுக்குக் காப்பீடு வழங்கப்படும் என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யும்.

அனைத்துக்கும் மேலாக, இத்திட்டத்தில் பிரீமியம் தொகை, வணிக முறையில் கணக்கிடப்படுகிறது. எனினும் விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணம் காரிஃப் பருவத்தில் காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதமாகவும், ராபி பருவத்தில் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதமாகவும், வர்த்தக, தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

முன்பிருந்த தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில், வர்த்தக, தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீட்டுக் கட்டண மானியம் வழங்கப்படவில்லை. அதேபோல திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகை அதிகமாக இருந்தது. புதிய திட்டத்தில் இந்த இரண்டு குறைகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

சி.எஸ்.இ. அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், முன்பிருந்த காப்பீட்டுத் திட்டங்களைக் காட்டிலும், இந்தப் புதிய திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல, காப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலங்களின் எண்ணிக்கையும் 16 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இந்தப் புதிய திட்டத்தில் சிறு விவசாயிகள் அதிக அளவில் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். காரணம், அவர்கள் கடன் பெற்றதுதான். கடன் பெற்ற விவசாயிகள் கட்டாயத்தின் பேரில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர, மேற்கு வங்க மாநிலங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இதர மாநிலங்களில் கடன் பெறாத விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சேரவில்லை.

இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து பிரீமியம் தொகையாக சுமார் ரூ.15,891 கோடியை வசூலித்திருக்கின்றன. ஆனால், வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையோ ரூ.5,962 கோடி மட்டுமே. அப்படியென்றால், சுமார் ரூ.10 ஆயிரம் கோடியை லாபமாகச் சம்பாதித்திருக்கின்றன காப்பீட்டு நிறுவனங்கள். இதற்குக் காரணமில்லாமல் இல்லை. தனக்கு ஏற்பட்ட இழப்பை விவசாயி நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்துக்குச் சொல்வதில்லை. விவசாயிகளின் சார்பாக, மாநில அரசுதான் சொல்கிறது. அந்த வகையில் மாநில அரசு மனது வைத்திருந்தால், பல விவசாயிகள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்!

சி.ஏ.ஜி., நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை, 2011-2012 முதல் 2015-2016 வரை செயல்படுத்தப்பட்ட பழைய காப்பீட்டுத் திட்டங்களை ஆய்வுசெய்தது. அதில், 10 தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து எந்த ஒரு ஆவணத்தையும் சரிபார்க்காமல், சுமார் ரூ.3,622 கோடி பிரீமியம் மானியத்தை மத்திய அரசின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் வழங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. அந்த வகையில், யாருக்கு இழப்பீடு கிடைத்திருக்க வேண்டுமோ அவர்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் போயிருக்க வாய்ப்புண்டு.

அதேபோல விவசாயிகள் செலுத்தியது போக மீதி பிரீமியம் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்த வேண்டும். அதில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்த நேரத்தில் செலுத்தப்படாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஃபசல் பீமா யோஜனா நடைமுறைக்கு வந்தது. ஆனால், எந்தெந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமோ அந்தந்த பயிர்களின் உத்தரவாத மகசூல் தகவலையும் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அந்தத் தகவல் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. உத்தரவாத மகசூல் தொடர்பான தகவல்கள் இல்லாதபோது, எவ்வாறு விவசாயிகளின் நஷ்டத்தை அரசு கணக்கிடும் என்பது தெரியவில்லை. எதன் அடிப்படையில் இழப்பீட்டை வழங்கும் என்பதும் தெரியவில்லை.

சி.எஸ்.இ., அமைப்பு மேற்கண்ட தகவலை, தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் ரகசியம் காத்திருக்கின்றனர். தவிர, கடந்த ஆண்டு மட்டும் ரூ.963 கோடி பிரீமியம் தொகையைத் தமிழக விவசாயிகளிடமிருந்து காப்பீட்டு நிறுவனங்கள் வசூலித்திருக்கின்றன. ஆனால், வழங்கப்பட்ட இழப்பீட்டின் அளவோ வெறும் ரூ.22 கோடியாக இருக்கிறது. நஷ்டமடைந்த இதர விவசாயிகள் எங்கே?

அதேபோல, இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தில், வருவாய் கிராமத்துக்குப் பயிர் ஒன்றுக்கு நான்கு பயிர் அறுவடைப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பயிர் இழப்பு கணக்கிடப்படுகிறது. ஆனால், பழைய திட்டங்களைப் போன்று வட்ட அளவிலேயே இழப்பீடுகளைக் கணக்கிட்டிருப்பதாகப் புகார்கள் வருகின்றன. இது உண்மை என்றால், நஷ்டமடைந்த பல விவசாயிகள் இழப்பீட்டைப் பெற முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.

மொத்தத்தில், புதிய காப்பீட்டுத் திட்டம் முந்தைய திட்டங்களைவிட நல்ல திட்டம்தான். ஆனால், அதைச் செயல்படுத்துவதில் நடைபெறும் அரசியலும் குளறுபடிகளும்தான், அந்தத் திட்டத்தின் உண்மையான பலனை உழவர்கள் பெற முடியாமல் இருப்பதற்குக் காரணமாக அமைகின்றன! திரும்பவும் ஒரு முழுச் சுற்று வந்த பிறகும், நஷ்டமடைபவர்கள் என்னவோ விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in