Published : 22 Jul 2017 10:52 AM
Last Updated : 22 Jul 2017 10:52 AM

விளைச்சல் பிரச்சினை இல்லை, விற்பனைதான் பிரச்சினை!

“இன்றைக்கெல்லாம் யாரைக் கேட்டாலும் ‘விவசாயமா… அதுல ஏகப்பட்ட பிரச்சினை இருக்குங்க’ன்னு சொல்றாங்க. விவசாயிகளைக் கேட்டாலும் அதைத்தான் சொல்றாங்க. அதிகாரிகளைக் கேட்டாலும் அதைத்தான் சொல்றாங்க. விஞ்ஞானிகளைக் கேட்டாலும் அதைத்தான் சொல்றாங்க. இப்படி எல்லோருமே பிரச்சினைகளை மட்டுமே பேசிட்டிருந்தா எப்படி? அதற்கான தீர்வுகளையும் சொல்லணும், இல்லையா? அதான், விவசாயத்தில் சாதிச்ச முதல் தலைமுறை உழவர்களைச் சந்திச்சு அவர்கள் கடந்து வந்த பாதையை, அனுபவம் தந்த பாடங்களை தொலைக்காட்சி மூலமா, நாடு முழுக்கவும் உள்ள விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கோம்!” - புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் மொரப்பாக்கம் பிரபு.

புதியதோர் உலகம் செய்வோம்

ஆனால் அப்படிச் சொன்னால் யாருக்கும் தெரியாது. எம்.ஜே. பிரபு என்றால் ‘ஃபார்மர்ஸ் நோட்புக்’ எழுதியவர்தானே என்று நூறு சதவீதம் சரியாகச் சொல்வார்கள் பலர். ‘தி இந்து’ ஆங்கில இதழில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஃபார்மர்ஸ் நோட்புக்’ எனும் பகுதியில், இந்தியா முழுக்கச் சுற்றியலைந்து, பல விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளையும் சாதனைகளையும் பதிவு செய்தவர். வேளாண்மை சார்ந்த தன் கட்டுரைகளுக்காகப் பல்வேறு விருதுகளை வென்றவர். தற்போது, முழுநேரப் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி, இயற்கை விவசாயம், உழவர்களுக்கு உதவுதல், விவசாயம் தொடர்பான அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திவருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, தூர்தர்ஷனின் பொதிகை அலைவரிசையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற தலைப்பில் முதல் தலைமுறை உழவர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். 52 வாரங்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. இப்போதுவரை சுமார் 40 பகுதிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

அறிவுப் பரிமாற்றம்

“பூர்வீகம் மதுராந்தகம் பக்கமுள்ள மொரப்பாக்கம் கிராமம். சின்ன வயசுல இருந்து விவசாயத்தை நேரடியாப் பார்த்து வளர்ந்தவன். பத்திரிகைத் துறைக்குள் வந்த சில காலத்துக்குப் பிறகு, நாட்டில் விவசாயம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய ஆய்வுகளைக் கடைக்கோடி உழவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் விவசாயப் பத்திரிகையாளனாக மாறினேன். நாடு முழுக்கச் சுற்றி, பல விவசாயிகளைச் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். அவர்களின் பிரச்சினைகளைப் பேசியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் செய்த சாதனைகளையும் பேசினேன். தாங்கள் சந்தித்த பிரச்சினைகளுக்கு அவர்களாகவே கண்டுபிடித்த தீர்வுகளையும், தொடர்புகொள்வதற்கான முகவரி, தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் குறிப்பிட்டேன்.

அதைப் படித்த உழவர்களுக்குப் பெரும் பயன் கிடைத்தது. குஜராத்தில் உள்ள உழவர் ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள உழவருடன் தொடர்புகொள்வார். ஆந்திராவில் உள்ள உழவர் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள உழவருடன் தொடர்புகொள்வார். இப்படி, பல உழவர்களுக்குள் தகவல் பரிமாற்றமும் அனுபவ அறிவுப் பரிமாற்றமும் நிகழ்ந்தன. ‘ஃபார்மர்ஸ் நோட்புக்’ வெற்றியடைந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

பொதிகைக்கு நிகழ்ச்சி தயாரிக்கும்போது, ஒரே ஒரு விஷயத்தைத்தான் மனதில் கொண்டோம். முதல் தலைமுறை விவசாயிகளை அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் மூலமாக, இளைஞர்கள் பலரை விவசாயத்துக்குள் ஈர்க்க வேண்டும் என்பதுதான் அது” என்றார் பிரபு.

அந்த எண்ணம் நிறைவேறியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, அதில் அறிமுகப்படுத்தப்பட்ட பல உழவர்களை, இளைஞர்கள் பலர் தொடர்புகொண்டு அறிவுரை பெற்று, விவசாயத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.

“தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே. ராமசாமியின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது. ஏனென்றால், இந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பல்கலைக்கழகம்தான் நிதியுதவி செய்கிறது” என்கிறார் பிரபு.

சந்தைதான் பிரச்சினை

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமே, உள்ளூர் மொழியில் மட்டுமில்லாமல் சப்டைட்டில் போட்டு, நாடு முழுக்க ஒளிபரப்பப்படுவதுதான். உதாரணத்துக்கு, ஆந்திராவில் உள்ள ஒரு உழவவரை பிரபு சந்திக்கிறார் என்றால், அந்த உழவர் தெலுங்கில்தான் பேசுவார். அது மற்ற மாநில உழவர்கள் பலருக்கும் புரியாது. எனவே, அந்த உழவர் பேசுவதை ஆங்கிலத்தில் சப்டைட்டில் உடன் ஒளிபரப்புகிறார்கள். பின்னர், இந்த நிகழ்ச்சி ஆங்கிலத்தில் ‘டப்’ செய்யப்பட்டு, பிரசார் பாரதி மூலமாக நாடெங்கும் ஒளிபரப்பாகிறது.

“நான் ‘ஃபார்மர்ஸ் நோட்புக்’ எழுதினப்பவும் சரி, இப்போது தொலைக்காட்சி மூலமாக உழவர்களை அடையாளம் காட்டும்போதும் சரி, நான் உணர்ந்த ஒரு விஷயம்… விவசாயிகளுக்குப் பருவநிலையெல்லாம் பிரச்சினை கிடையாது. எல்லா பிரச்சினைகளைக் கடந்தும் தான் விளைவித்த பொருட்களைச் சந்தைப்படுத்துவதுதான் மாபெரும் பிரச்சினை. அதை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் எடுத்துச் சொல்கிறோம்.

உழவரின் பெருமை

வங்கிகளில் ‘நோ யுவர் கஸ்டமர்ஸ்’னு ஒரு விஷயம் இருக்குல்ல. அதுமாதிரி, பள்ளிகளில் ‘நோ யுவர் ஃபார்மர்ஸ்’னு ஒரு விஷயம் ஆரம்பிக்கணும். ‘மெடிக்கல் டூரிஸம்’ மாதிரி, நம் குழந்தைகளை ‘அக்ரோ டூரிஸம்’ எனும் வேளாண் சுற்றுலாவுக்கு அழைத்துப் போகணும். அவர்களை கிராமங்களுக்குக் கூட்டிப் போய், விவசாயம்னா என்ன, அதுல எவ்ளோ கஷ்டம் இருக்குங்கிறதைப் புரிய வைக்கணும். ஒவ்வொரு விவசாயியும் ‘நான் ஒரு விவசாயி’ன்னு பெருமையா சொல்லிக்கிற காலம் வரணும். அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வரணுங்கிறதுதான் என் லட்சியம்!” என்பவருக்கு விவசாயம் சார்ந்து ‘ரியாலிட்டி ஷோ’ ஒன்றை நடத்த வேண்டும் என்ற கனவும் இருக்கிறது.

“இன்னைக்குப் பலவிதமான ‘ரியாலிட்டி ஷோ’க்கள் வந்தாச்சு. விவசாயம் சார்ந்த ஒரு ரியாலிட்டி ஷோவும் வரட்டுமே. அதன் மூலம், விவசாயிகள் படுகிற கஷ்ட நஷ்டங்களை, சாமானியர்களும் தெரிந்துகொள்ளட்டுமே. அப்போது விவசாயத்தின் மீதான மதிப்பு இன்னும் உயரும்!” என்கிறார் பிரபு.

அவர் கனவு பலிக்கட்டும்!

‘புதியதோர் உலகம் செய்வோம்’ நிகழ்ச்சியை யூடியூப்பில் காண, இங்கே சொடுக்கவும்: https://www.youtube.com/results?search_query=puthiyathor+ulagam+seivom+podhigai+tvSign up to receive our newsletter in your inbox every day!

 
x