கிழக்கில் விரியும் கிளைகள் 14 - நம் நாட்டு மணமூட்டி: மாகாளிக் கிழங்கு

கிழக்கில் விரியும்  கிளைகள் 14 - நம் நாட்டு மணமூட்டி: மாகாளிக் கிழங்கு
Updated on
2 min read

மாகாளிக் கிழங்குத் தாவரத்தின் மிக முக்கியப் பகுதி அதன் வேர்கள். இவை பருத்துக் கிழங்கை ஒத்ததாக இருக்கும். வெளிர் பழுப்பு நிறத்தைக் கொண்ட இவை நாள்பட அடர் பழுப்பு நிறத்தைப் பெறும். இவற்றுக்கு வானில்லா போன்ற அடர் நறுமணம் உண்டு, 150 செ.மீ. நீளமும், 3.5 செ.மீ. தடிப்பும் கொண்ட இந்த வேர்கள் ஒவ்வொரு தாவரத்திலும் நான்கு முதல் 10 வரை காணப்படும்.

செஞ்சு, ஏனாதி, மற்றும் தமிழக மலையாளி பழங்குடி மக்கள் இத்தாவரத்தில் அதிகபட்சமாக மூன்று வேர்களை மட்டும் மண்ணைத் தோண்டி மிகவும் கவனமாக அறுவடை செய்வார்கள். பின்பு மீண்டும் மண்ணைப் போட்டு வேர்ப் பகுதியை மூடி விடுவார்கள். இவ்வாறு செய்யும்போது அத்தாவரம் மேலும் சில புதிய வேர்களை உருவாக்கும். இத்தகைய வளம்குன்றாத (Sustainable) அறுவடைக்குப் பின், 12-14 மாதங்கள் கழித்து, மீண்டும் இதே போன்று அறுவடையை மேற்கொள்வார்கள். ஒரு தாவரம் ஒன்று முதல் இரண்டு கிலோ எடையுள்ள வேர்களை ஒவ்வொரு முறையும் தரும்.

ராயலசீமா சர்பத்

நன்னாரிக்குப் பதிலாகச் சர்பத் செய்யவும் இந்தத் தாவர வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவேதான், இந்தத் தாவரத்துக்குப் பெருநன்னாரி என்ற பெயர் வந்தது. இந்தச் சர்பத் கோக்கோகோலா போன்ற சுவையையும், வானில்லாவின் நறுமணத்தையும் கொண்டிருக்கும். இது ஆந்திராவின் தெற்குப் பகுதிகளில் நன்னாரி சர்பத் அல்லது ராயலசீமா சர்பத் என்றழைக்கப்படுகிறது.

இந்த வகை சர்பத் முதன்முதலில் ஏனாதி பழங்குடி மக்களால் தயாரிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் அடிக்கடி இடம்பெயரும் நாடோடிகளாக இருப்பதால், தம்முடைய பயணத்தின்போது இந்த வேர்களைச் சேமித்து வைத்துக்கொள்வார்கள். தாகம் ஏற்படும்போதும், குடல் கோளாறுகள் ஏற்படும்போதும் சர்பத் தயாரித்தோ, வேரைக் கடித்துத் தின்றோ இவற்றைப் போக்கிக் கொள்வார்கள்.

அருமருந்து

பழங்குடி, சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இந்த வேர் பல கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, குளிர்ச்சியூட்டக் கூடியது, உணவு செரிமானத்தைத் தூண்டக்கூடியது, ரத்தத்தைச் சுத்தம் செய்யக்கூடியது, உணவுப் பாதைக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது, சளி, காய்ச்சல், இருமல், வாந்தி, வீக்கம் போன்றவற்றை நீக்கக்கூடியது. தோல் நோய்கள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலிகள், சிறுநீரகக் கோளாறுகள், மைய நரம்பு மண்டலக் கோளாறுகள், குறிப்பாகக் காக்காய் வலிப்பு போன்றவற்றுக்கு ஒரு நல்ல மருந்தாக மாகாளிக் கிழங்கு திகழ்கிறது.

ஆயுர்வேத மருந்துகளான அம்ருதமடகா தைலம், தரக்ஷாதி சூரணம், சதவாரி ரசாயனா, யஷ்டிமது தைலம் போன்றவற்றில் இதன் வேர் ஒரு முக்கியக் கூறாகத் திகழ்கிறது. இதன் வேரில் பீனால்கள், டிகல்போலைன், சாப்போனின்கள், டானின்கள், வானில்லின், டெர்பினாய்டுகள் போன்றவை காணப்பட்டாலும் மிக முக்கியமான வேதிப்பொருளாக 2 ஹைட்ராக்ஸி 4 மீதாக்ஸி பென்சால்டிஹைடு என்ற நறுமணப் பொருள் உள்ளது. ஐஸ்கிரீம்களில் வானில்லின்னுக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம். ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் பூச்சிகளைத் துரத்துவதற்காக வீடுகளின் முன்பு இதன் வேர்களைத் தொங்கவிடுகிறார்கள்.

இயற்கை மணத்தை மீட்க…

ஒரு காலகட்டத்தில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட இந்த வேர், தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. இடத்துக்கேற்ப தற்போது இதன் விலை கிலோ ரூபாய் 15 முதல் 150 வரை. ஐஸ்கிரீமில் பயன்படுத்தப்படும் இயற்கையில் வானில்லின்னுக்கு பற்றாக்குறை இருப்பதால், இந்தத் தாவரத்தைப் பயன்படுத்த அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிழக்கு மலைத்தொடருக்கே உரித்தான இந்தத் தாவரத்தை ஒரு போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். குறிப்பாகப் பச்சை மலை, சேர்வராயன் மலை, கொல்லிமலை, கல்ராயன் மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை போன்ற பகுதிகளில் இந்தத் தாவரத்தின் எண்ணிக்கையை அதிக அளவு பெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தாவரத்தின் பயன்களையும் தேவையையும் பிரபலப்படுத்த வேண்டும். இயற்கை உற்பத்தியை அதிகரிக்க, இயல் சூழல்களில் இந்தத் தாவர வளர்ப்பை மேம்படுத்த வேண்டும். ஆந்திராவில் திருப்பதியில் அமைந்துள்ள மூலிகைக்கான நாட்டார் ஆய்வு மையம் இத்தகைய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

(அடுத்த வாரம்: இது வேற வெட்டிவேர்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in