Last Updated : 29 Apr, 2017 11:05 AM

 

Published : 29 Apr 2017 11:05 AM
Last Updated : 29 Apr 2017 11:05 AM

வாசிப்பை வசப்படுத்துவோம்: வணக்கத்துக்குரிய நூல்!

பல்லாண்டு காலமாக வைத்து வளர்த்த, நம்மோடு சேர்ந்து வளர்ந்த, தினமும் பார்த்து வந்த மரங்கள் திடீரென ஒருநாள் இல்லாமல் போனால் நமக்கு எப்படி இருக்கும்? சாலையோரம் நின்றுகொண்டிருந்த மரங்கள் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டு வீழ்ந்து கிடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையிலும், புயல் வீசி எத்தனையோ மரங்கள் கண் முன்னே வீழ்ந்து கிடந்ததைக் காணும் வேளையிலும் நம் மனதில் ஏற்படும் துயரத்தின் வலியை அவ்வளவு எளிதில் வார்த்தைகளால் விவரித்துவிட முடியுமா?

இல்லாமல்போன அந்த மரத்தால் ஏற்படும் வெற்றிடம் நம் மனதிலும் குடிகொள்ளும் அல்லவா? மரத்துடன் உணர்வுபூர்வமாகத் தொடர்பே இல்லாத மனிதர்கள் இருக்க முடியுமா? ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் தொடர்புடைய ஏதோ ஒரு மரம் இருக்கத்தான் செய்கிறது. அது அவர்களின் நினைவுகளின் வாசலில் எப்போதும் வராமல் போனாலும், ஏதோ ஒரு மூலையில் அது அசையாமல் நின்றுகொண்டிருக்கும். இது போன்ற நினைவுகள்தான் ‘மரங்கள்- நினைவிலும் புனைவிலும்’ எனும் நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மனதை மாற்றலாம்

மரங்களை ஒருபுறம் நாம் நேசித்தாலும், அவற்றின் மகத்துவங்களை அறிந்திருந்தாலும் சில நேரங்களில்அவற்றை இடையூறாகத்தான் பார்க்கிறோம். நாமே வெட்டி சாய்க்கிறோம், அல்லது வெட்டத் துணைப் போகிறோம் - நேரடியாகவோ, மறைமுகமாகவோ. சில நேரம் மரங்களை நம்மில் ஒருவராகவே பாவிக்கிறோம். அவற்றுடன் பேசுகிறோம், தொந்தரவாகவே இருந்தாலும் சகித்துக்கொள்கிறோம், வெட்ட வந்தால் வெகுண்டெழுந்து போராடிப் பாதுகாக்கிறோம் அல்லது தோல்வியும் அடைகிறோம். இப்படி மனிதனுக்கும் மரத்துக்கும் இருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்புகளைப் பற்றி பேசுகிறது ‘மரங்கள் நினைவிலும் புனைவிலும்’ என்ற நூல். படிக்கும்போது அது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருப்பதை உணர முடியும்.

அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. உங்கள் ஊரில் சாலையோரமாக உள்ள மரங்களில் பெருக்கல் குறி போடப்பட்டிருந்தால், உங்களுக்கு அந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அங்குள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் இந்த நூலைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். ஒன்று அல்ல குறைந்தது மூன்று, நான்கு படிகளை வாங்கிக் கொடுங்கள். பல உயர் அதிகாரிகளிடம் இந்நூலை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை இந்த நூலைப் படித்த பின் அவர்கள் மனம் மாறி மரங்களை வெட்டாமலும்கூடப் போகலாம்.

ஔவையார் இப்போது இருந்தால் இப்படியும் பாடியிருப்பார்:

“சாலையோர மரமும், அரசு அறிய

வீற்றிருந்த வாழ்வும், வீழும் அன்றே”

விதவிதமான உணர்வுகள்

இலையில்லா மரமாய், பசுந்தளிர்களை ஏந்தி, கொத்து கொத்தாய்ப் பூ பூத்து, கனிகள் நிறைந்த மரமாய் - அதை ஒவ்வொரு நிலையிலும் காணும்போதும் நமக்குள் வெவ்வேறு உணர்வுகள் தோன்றும். அதைப் போலவே, இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும்போதும் விதவிதமான உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்.

இந்த நூலில் 29 கட்டுரைகளை மதுமிதா தொகுத்தளித்துள்ளார், அவரது மனோரஞ்சிதத்தையும் சேர்த்து. சா. கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணதாசன், பாவண்ணன், நாஞ்சில் நாடன், அ. முத்துலிங்கம், தோப்பில் முஹம்மது மீரான் உள்ளிட்ட பல மூத்த எழுத்தாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் எங்கே, எப்போது வெளிவந்தவை எனும் தகவலும் கொடுக்கப்பட்டிருந்தால் முழுமையாக இருந்திருக்கும்.

இந்நூலில் எனக்குப் பிடித்த கட்டுரைகள் பல. அவற்றில் மிகவும் பிடித்தவை நாஞ்சில் நாடனின் ‘சிறுமீன் சினையினும் நுண்ணிது’, ச. விசயலட்சுமியின் ‘மெளனத் தவமிருக்கும் உயிர்முடிச்சு’, வண்ணதாசனின் ‘ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்’, சா. கந்தசாமியின் ‘தெங்கு முதல் மயில் கொன்றைவரை’, கல்யாண்குமாரின் ‘மரங்களின் மகாத்மா’, தமிழ்நதியின் ‘வேம்பின் குயில்களும் மேப்பிள் மரங்களும்’.

பெயர்க் குழப்பங்கள்

ஒரு இயற்கையியல் ஆராய்ச்சியாளனாக இந்த நூலைப் படித்தபோது சில கட்டுரைகளில் சொல்லப்பட்டுள்ள அறிவியல் துல்லியமற்ற கருத்துகளைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

மூன்று கட்டுரைகளில் குல்மோகர் மரம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள் (சா. கந்தசாமியின் கட்டுரையைத் தவிர). இதன் தமிழ்ப் பெயர் மயில் கொன்றை என்கிறது கே.எம். மேத்யூவின் The Flora of the Palani Hills. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மயிற்கொன்றை எனவும், விக்கிபீடியா இதைச் செம்மயிற்கொன்றை அல்லது மயிற்கொன்றை எனவும் அழைக்கிறது. அறிவியலாளர்களால் Delonix regia என்றழைக் கப்படும் இதன் பூர்விகம் மடகாஸ்கர் தீவு. (மயில் கொன்னை என்பது வேறு அது Caesalpinia pulcherrima எனும் சிறு மரம் இது மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதன் மலரும் குல்மோகர் மலரும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருப்பதாலும், இவை அயல் தாவரங்களாக இருப்பதாலுமே இந்தப் பெயர்க் குழப்பம்.

சா. கந்தசாமியின் கட்டுரையில் மருதமரம் எனக் குறிப்பிட்டிருப்பது Terminalia arjuna, அதாவது வெள்ளை மருது, ஆனால் கு. வி. கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்’ நூலில் சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் மருத மரம் இதுவல்ல என்றும் செம்மருதம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால் Lagerstroemia reginae தான் என்கிறார்.

படைப்பாளரின் தனித்திறம்

தோப்பில் முஹம்மது மீரானின் ‘ஒரு மரமும் கொஞ்சம் பறவைகளும்’ கட்டுரையில் வெளிநாட்டுப் பறவைகள் மாமரத்தில் கூடு கட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வலசை வரும் பறவைகள் இங்கே கூடு கட்டுவதில்லை. சரி, இதையெல்லாம் இவ்வளவு நுணுக்கமாகப் பார்க்க வேண்டுமா என்றால், பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன்.

எனினும் ஒரு ஆராய்ச்சியாளனாக இந்த நூலில் இருந்து நான் கற்றுக்கொண்டவை பல. தாவரவியல் படித்த ஒருவர் ஒரு மரத்தைப் பற்றி விவரிப்பதற்கும், மொழி வளமும் கற்பனைத் திறனும் கொண்ட படைப்பாளர் விவரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உதாரணமாக இந்நூலில் மரங்கள் குறித்து, எளிமையாகப் புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சில சொற்களை, வாக்கியங்களைத் தாவரவியல் நூல்களில் பார்க்க முடிவதில்லை.

இந்த நூலைப் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குள் இருக்கும் ஆராய்ச்சியாளனின் புத்தி சில கேள்விகளுக்கான விடைகளைத் தேடியது. இந்த நூலில் எத்தனை வகையான மரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன? எந்தக் கட்டுரையில் அதிகமான மரங்கள் இடம்பெற்றிருக்கின்றன? அந்த மரங்கள் எவை? பல எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட மரம் எது? என் அப்பாவும் நானுமாகச் சேர்ந்து இதையெல்லாம் பட்டியலிட்டோம். நூலைப் படித்துவிட்டு, முடிந்தால் நீங்களே பட்டியலிட்டுப் பாருங்கள். பொறுமை இல்லையெனில் எழுதுங்கள் சொல்கிறேன்.


சந்தியா பதிப்பகம் தொடர்புக்கு: 044-24896979

உணர்வுபூர்வமான பதிவு

புறவுலகை போற்ற, பாதுகாக்க முதலில் அவற்றைப் பார்த்து ரசிக்க வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ, அதைத்தான் காப்பாற்றவும் செய்வோம். இயற்கையின் ஓர் அங்கமான மரங்களைப் போற்றிப் பாதுகாக்க மரத்தின் பயனை மட்டுமே சொல்லிப் புரியவைப்பதைவிட, மரங்களை மரங்களாகப் பார்க்கக் கற்றுத்தரவேண்டும். தாவரங்களையும் மரங்களையும் இனங்காணக் கையேடுகள் உதவும். ஆனால் மரங்களின் மேல் பரிவு காட்டவும் கரிசனம் கொள்ளவும் தொடர்ச்சியாக அவற்றைப் பாதுகாக்கவும், இது போன்ற உணர்வுபூர்வமான அனுபவப் பகிர்வுகளே பேருதவி புரியும்.

கி. ராஜநாராயணன் கரிசல் காட்டுக் கடுதாசியில் ஆல், அரசு போன்ற மரங்களை அடுப்பெரிக்கப் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் அவை வணக்கத்துக்குரிய மரங்கள் என்று குறிப்பிடுவார் (இந்நூலில் உள்ள நாஞ்சில் நாடனின் கட்டுரையைப் படித்தால் ஏன் அவற்றை அடுப்பெரிக்கப் பயன்படுத்துவதில்லை என்பது விளங்கும்). அதுபோல மரங்கள் குறித்த இந்த நூலும் வணக்கத்துக்குரியதே!

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x