

எழும்பூரில் உள்ள குடியிருப்பில் பிடிபட்ட 19 நல்ல பாம்பு குட்டிகள்.
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி அருகே குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பின் பின்புறம் பயன்படுத்தப்படாமல் கிடந்த பகுதியில், வீட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் மதியம் சில முட்டைகளை பார்த்தார்.
அவை பாம்பு முட்டைகளாக இருக்கலாம் என சந்தேகமடைந்த அவர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கிண்டி வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அவை நல்ல பாம்பின் முட்டைகள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை நடத்தியபோது, தரைக்கு அடியில் 39 நல்ல பாம்பு முட்டைகள் பொரிந்து, அவற்றில் இருந்து குட்டிகள் வெளியேறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முட்டைகள் பொரிந்து ஓரிரு நாட்களே ஆகியிருக்கலாம் என்பதால், பாம்பு குட்டிகள் அருகில் பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் கருதினர். இதையடுத்து கான்கிரீட் பிளவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத பகுதிகளை தோண்டி, சுமார் 4 மணி நேரம் தீவிரமாக தேடினர்.
அப்போது, மறைவிடங்களில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக 19 நல்ல பாம்பு குட்டிகள் சிக்கின. அவற்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த பாம்பு குட்டிகள் செங்கல்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டன.
39 முட்டைகளில் இருந்து 19 பாம்பு குட்டிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 20 குட்டிகள் வீட்டின் தரைக்கு அடியிலோ அல்லது அருகில் உள்ள பயன்படுத்தப்படாத பகுதிகளிலோ பதுங்கியிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து நேற்று மீண்டும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆனால், பாம்பு குட்டிகள் எதுவும் பிடிபடவில்லை. இதே குடியிருப்பில் சுமார் 10 நாட்களுக்கு முன்பு, பெரிய அளவிலான பெண் நல்ல பாம்பு ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டது.
தற்போது மீட்கப்பட்டுள்ள பாம்பு குட்டிகள், அன்று பிடிபட்ட பெண் நல்ல பாம்பின் குட்டிகளாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீதம் உள்ள பாம்பு குட்டிகளை வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.