Published : 01 Sep 2018 11:19 AM
Last Updated : 01 Sep 2018 11:19 AM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 12: குறிஞ்சி மலரும் வரையாடுகளும்

குறிஞ்சி நிலமான மலைக்காட்டுப் பகுதியில் வாழ்ந்த வேடர் குலப்பெண் வள்ளியை முருகன் மணந்த போது குறிஞ்சி மலர்களால் தொடுத்த மாலையை அணிவித்ததாக ஐதீகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏறக்குறைய 1,600 மீட்டர் உயரத்தில், சோலைக்காடுகளும் புல்வெளியும் சேர்ந்திருக்கும் மலைச்சரிவுகளில் வளர்கிறது குறிஞ்சி மலர்ச் செடி. இதைப் புதர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சங்கப் பாடல்கள் சில குறிஞ்சி மலரைப் பற்றி பேசுகின்றன. அகநானூறு, புறநானூறு போன்றவற்றில் இந்த மலர் பற்றி சில குறிப்புகள் உண்டு. குறுந்தொகைப் பாட்டில் அரசனைப் புகழ்கிறார் கவி, இப்படி:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல்

கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும்

நாடனொரு நட்பே.

பிரிட்டிஷார் இந்தியாவின் மீது தங்கள் பிடியை இறுக்கி ஆள ஆரம்பித்த பின், நாட்டின் செடிகொடி, உயிரினங்கள் இவற்றை விவரமாகப் பதிவு செய்யத் தொடங்கினர். இதற்கென சில தாவரவியலாளர்கள் பணிக்கப்பட்டனர். ராபர்ட்

வைட், காப்டன் பெட்டோம் என்ற இரு ஆங்கிலேயர்கள்தான் முதன்முதலாக அறிவியல் ரீதியில் குறிஞ்சி மலரைப் பற்றி எழுதினர். 1836-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் பகுதியில் பயணம் செய்து இருபது வகையான குறிஞ்சிச் செடிகளைப் பற்றி எழுதினார்கள். அவர்களுக்குப் பின் இந்த மலரை பகுப்பாய்வு செய்த கேம்பிள் என்ற அறிவியலாளர் 46 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன என்று எழுதினார்.

தமிழகத்தின் இரண்டு குறிஞ்சி

ஆனால், இவை எல்லாவற்றிற்கும் பொதுவான சில அம்சங்கள் உண்டு. ஒரே ஒரு முறை பூப்பது, ஒரு முறை பூத்த பின், அந்தப் புதர் அழிந்து, புதிய செடி அங்கே முளைப்பது போன்ற தன்மைகள். ஒவ்வொரு வகையான குறிஞ்சியும் சில வருடங்களுக்கு ஒரு முறையே மலரும். சில செடிகள் 6 வருடங்களுக்கு ஒரு முறை, சில 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை எனப் பூக்கும். எல்லா குறிஞ்சி மலர்களும் நீல வண்ணத்தில் இருந்தாலும், சயாத்திரி மலையில் ஒரு மஞ்சள் நிறக் குறிஞ்சிகூட உண்டு.

குறிஞ்சிப் புதர்ச் செடி ஒரு மீட்டர் உயரம் இருக்கும். தண்டு சிவப்பாகவும் காம்புகளின் கணுக்கள் கருப்பாகவும் இருக்கும். மதுரைக்காஞ்சி இந்தச் செடியை ‘கருங்காற்குறிஞ்சி’ என்று குறிப்பிடுவது இதனால்தான்.

இரு வகையான குறிஞ்சி தமிழ்நாட்டில் மலர்கிறது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். கொடைக்கானல், மூணார் பகுதிகளில் வளரும் குறிஞ்சியின் அறிவியல் பெயர் ‘ஸட்ரோபிலாந்தஸ் குந்தியானம்’ (Strobilanthes kunthianum). இந்தப் பகுதியில் குறிஞ்சி மலர்ந்த ஆண்டுகளை கொடைக்கானலுக்கு அருகே உள்ள செண்பகனூர் சேசு சபை மடத்திலுள்ள துறவிகள் துல்லியமாகப் பதிவு செய்து வைத்தார்கள். மூணாறு பகுதியில் வாழும் முதுவர் எனும் பழங்குடியினர் தங்களது வயதைக் குறிஞ்சி மலரும் ஆண்டோடு சம்பந்தப்படுத்தி நினைவில் வைத்துக்கொள்கின்றனர்.

நீலகிரிப் பகுதியில் காணப் படுவது ‘ஸ்ட்ரோபிலாந்தஸ் நீலகிரியன்சிஸ்’ (Strobilanthes nilgirinsis). இந்தப் பிரதேசத்தில் 1858-ம் ஆண்டு முதல் குறிஞ்சி மலர்வது பற்றிய விவரங்கள் கோத்தகிரியில் வாழ்ந்த கோபண் (Cockburne) என்ற ஆங்கிலேயரிடம் இருந்தன. கோபணின் தந்தை இந்த விவரத்தை எழுதி வைத்திருந்தார். அவரது தாய் (கோபணின் பாட்டி) மலைவாழ் மக்களிடமிருந்து 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்த மலர் பற்றிக் கேட்டறிந்து பதிவு செய்திருந்தார். இப்படியாக 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பதிவு, மூன்று தலைமுறைப் பதிவு, நமக்குக் கிடைத்திருக்கிறது.

பச்சைப் பாலைவனம்

குறிஞ்சி பூத்திருப்பதை கொடைக்கானல் நகரிலேயே ‘கோக்கர்ஸ் வாக்’ எனும் மலையோர நடைபாதைக்கு அருகே பார்த்திருக்கிறேன். பின்னர் ஊட்டியிலிருந்து கோத்தகிரி செல்லும் வழியில் ஒரு பள்ளத்தாக்கில் பார்த்திருக்கிறேன். எழுபதுகளில் தலைக்காவேரிக்கு அருகிலுள்ள பிரம்மகிரி மலைகளில் பரந்த மலைச்சரிவுகளில் இந்த மலர்ச்செடி பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. எங்கு நோக்கினாலும் நீல நிறப் பூக்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை மலைச்சரிவுகளை நீல நிறப் போர்வை ஒன்றால் போர்த்தியிருப்பது போன்று தோன்றியது.

ஆனால் கடந்த நூறாண்டுகளாக குறிஞ்சி வளரும் மலைப் பிரதேசம் ‘மேம்பாடு’ என்ற பெயரில் பரவலாகச் சீரழிக்கப்பட்டது. செயற்கை நூலிழைக்காகத் தைல மரங்களும், தோல் பதனிடும் தொழிலுக்காகச் சீகை (wattle) மரங்களும் இந்தப் பகுதியில் பெருமளவு நடப்பட்டன. சாலை பாவியது, அணைகள் கட்டியது, கனிமங்களை எடுக்க மலைகளைப் பிளந்தது போன்றவையாலும் இந்தப் பகுதியின் இயற்கை இயல்பு அழிக்கப்பட்டது.

மலைச்சரிவுகளை அழித்து அங்கு தேயிலைத் தோட்டங்கள் தோன்றின. வால்பாறை, மூணாறு பகுதிகளில் காரில் பயணித்தால் அடுத்தடுத்து மலைச்சரிவுகளில் தேயிலைத் தோட்டங்கள்தான் கண்ணில் படுகின்றன. ஒரு ராட்சத நாவிதர் பெருங்கத்தி ஒன்றைக் கொண்டு மலைகளை ஒட்டச் சிரைத்து விட்டாற்போல் தெரிகிறது. சூழலியலாளர் இந்த நிலப்பரப்பை ‘பச்சைப் பாலைவனம்’ என்று குறிப்பிடுகின்றனர்.

நீலக்குறிஞ்சி சரணாலயம்

குறிஞ்சி மலர் ஒரு எழிலார்ந்த நிலப் பகுதியின் குறியீடு. இங்குதான் வரையாடு, கரும்வெருகு (Nilgiri martn), சோலை மந்தி போன்ற அரிய விலங்குகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கின்றன. அது மட்டுமல்ல. இந்தப் பகுதிதான் அமராவதி, வைகை நதிகள் உற்பத்தியாகும் இடம். எஞ்சியிருக்கும் இந்தப் பகுதியை மீட்டெடுக்க வேண்டுமென்று ஒரு இயக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன் உருவானது.

திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்கில் பணிபுரிந்து கொண்டிருந்த ராஜ்குமார் என்ற இளைஞர் ‘சேவ் குறிஞ்சி கேம்பெய்ன் கவுன்சில்’ (Save Kurinji Campaign Council) என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். கொடைக்கானலில் இருந்து மூணாறுக்குப் பாதயாத்திரை நடத்தினார். சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட வேறு சில அமைப்புகளும் ஆதரவு கொடுத்தன.

கொடைக்கானலுக்கும் மூணாறுக்கும் இடையில் உள்ள ஒரு பகுதியைச் சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கையை முன் வைத்தனர். அவர்கள் கேட்டது 95 சதுர கி.மீ பரப்புள்ள சரணாலயம். ஆனால் 36 சதுர கி.மீ கொண்ட இடம் நீலக்குறிஞ்சி சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு என்பது மக்களால் மட்டும் ஆனது அல்ல. அதில் ஓடும் ஆறுகள், ஓடைகள், காடுகள், மலைகள், அங்கு வளரும் தாவரங்கள், காட்டுயிர் இவை யாவுமே ஒரு நாட்டின் முழுப் பரிமாணம். ஓடி ஓடிப் பொருள் சேகரிக்கும் அவசரத்தில் இதையெல்லாம் நாம் மறந்து விடுகிறோம்.

(அடுத்த கட்டுரை: செப்டம்பர் 15 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x