

சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திரைப்படமும் ஒளிப்படமும் சக்தி வாய்ந்த உபகரணங்கள். காட்டுயிர் பற்றிய சீரிய ஆவணப்படங்களை எடுத்து, சேகர் தத்தாத்ரி பல பிரச்சினைகளை அலசியிருக்கிறார். அதுபோல் தனது ஒளிப்படங்கள் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலைக்காகப் பேசி வருகிறார் இயான் லாக்வுட் (48). அண்மையில், சென்னை தட்சிணசித்ராவில் ‘முருகனின் மலைகள்’ என்ற தலைப்பில் பழனி மலைத்தொடர் சார்ந்த இவரது படக் கண்காட்சி நல்ல கவனிப்பைப் பெற்றது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரை சென்னையில் ரோமுலஸ் விட்டேக்கரின் திருப்போரூர் இல்லத்தில் சந்தித்தேன். அவரது கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்துப் பிரம்மித்துவிட்டேன். அமெரிக்க ஒளிப்படக் கலைஞர் ஆன்சல் ஆடம்ஸின் படைப்புகளை நினைவூட்டுகின்றன என்று நான் சொன்னபோது, அவர்தான் தன் ஆதர்சக் கலைஞர் என்றார் இயான்.
இயானின் பூர்வீகம் அமெரிக்கா. அவருடைய தாத்தா எடிசன் லாக்வுட் 1920-ல் இந்தியாவுக்கு வந்தார். அவருடைய ஒரு மகன் மைக்கேல் லாக்வுட், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியாரகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். பல்லவர் கலை வரலாறு பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி கல்விப்புலத்தில் புகழ் பெற்றவர் அவர். இன்னொரு மகன், கொடைக்கானல் அமெரிக்கன் பள்ளியில் பணியாற்றினார். இவருடைய மகன்தான் இயான்.
இருட்டறை தந்த வெளிச்சம்
கொடைக்கானலில் பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு மலைகளிலும் காடுகளிலும் சுற்றுவது பிடிக்கும். நீண்ட நடைப்பயணங்கள் மூலம் அந்தப் பகுதியை நன்கு அறிந்துகொண்டார். இவர் மாணவனாக இருந்தபோதே ரோமுலஸ்ஸின் நட்பு கிடைக்க, காட்டுயிர் மீது அவருக்கு இருந்த ஆர்வம் இயானையும் தொற்றிக்கொண்டது. பள்ளியிலிருக்கும்போதே மலைகளைப் படமெடுக்கத் தொடங்கினார்.
கொடைக்கானலில் இருந்த டவ்டன் போட்டோ ஸ்டுடியோக்காரர் இந்தச் சிறுவனின் ஆர்வத்தைக் கண்டு இருட்டறையைப் பயன்படுத்த அனுமதி தந்தார். இங்கு, தான் எடுத்த படங்களைத் தானே உருத்துலக்கக் கற்றுக்கொண்டார். இதுதான் இயானின் ஒளிப்படக் கலைப் பள்ளி.
இந்த மலைப் பகுதி கண் முன்னேயே சீரழிக்கப்படுவதைப் பார்த்தார். காட்டுயிர்களின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு, அதன் பல்லுயிரியத்தன்மை பாழாக்கப்படுவதை உணர்ந்தார். தனது கேமரா மூலம் இந்த அரிய மலைப் பிரதேசத்தில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க விழைந்தார்.
நிலப்பரப்புக் காட்சிகளை, மலை மடிப்புகளை, ஓடைகளை, மரங்களை இயான் படம் பிடிக்கிறார். அதில் மனிதர்களோ விலங்குகளோ இருப்பதில்லை. மனிதரால் உருவாக்கப்பட்ட எதுவும் இருக்காது. இயற்கைக்கும் அவருக்கும் இருக்கும் பந்தத்தைக் கூறுவதுபோல இருக்கின்றன அவர் படைப்புகள். ஆன்சல் ஆடம்ஸ் ஒரு முறை இப்படிக் கூறினார்: “ஒவ்வொரு படத்திலும் இருவர் இருக்கின்றனர் - படம் எடுப்பவர், படத்தைப் பார்ப்பவர்”.
கறுப்பு வெள்ளைக் கலைஞர்
பள்ளியில் இவர் படித்தபோது இவருடைய தந்தை ஆன்சல் ஆடம்ஸ் ஒளிப்படங்களை இயானுக்கு காட்டினார். போட்டோகிராபியைக் கலை என்று விமர்சகர்கள் ஒப்புக்கொள்ளாத காலகட்டத்தில், அதாவது 1930, 40-களில், தன் படைப்புகளால் அந்த அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தவர் ஆடம்ஸ்.
அது மட்டுமல்ல. இயற்கையை நேசித்தவர். உயிரினங்களின் வாழிடம் பாழ்பட்டுவிடக் கூடாது என்ற உணர்வைத் தன் படங்கள் மூலம் ஊட்டியவர். பிரேசில் நாட்டு ஒளிப்படக் கலைஞர் செபஸ்டியோ சல்கெடோவின் படைப்புகளாலும் இயான் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவரும் கறுப்பு -வெள்ளைக் கலைஞரே! அவர் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையைப் படம் பிடித்தவர்.
ஏன் கறுப்பு – வெள்ளைப் படங்கள்? இயான் இரண்டு காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார். இவ்வகைப் படங்கள், இயற்கை சார்ந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பற்கு ஏற்றவை. பரந்து விரியும் மலைக்காட்சிகள், காட்டில் தரையில் உள்ள கற்கள், மரங்கள், இலைகள் இவற்றைக் கறுப்பு - வெள்ளையில் துல்லியமாகக் காட்ட முடியும். ஒளியின் விளையாட்டு, கறுப்பு -வெள்ளையில் நன்றாகப் பிடிபடும். இரண்டாவது, இந்தப் படைப்புகளை உருவாக்குவதில் கறுப்பு - வெள்ளையில் ஒளிப்படக் கலைஞருக்குப் படிமத்தின் மீது நல்ல கட்டுப்பாடு கிடைக்கிறது என்கிறார் இயான்.
படம் சார்ந்த எல்லா வேலைகளையும் எடுப்பதிலிருந்து காட்சியில் வைப்பது வரை, இவரே செய்கிறார். டிஜிட்டல் போட்டோகிராஃபி பல தொழில்நுட்ப வசதிகளை அளித்தாலும் இவர் கறுப்பு - வெள்ளைக் கலைஞராக இருக்கிறார். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தனது ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ (1993) படத்தைக் கறுப்பு -வெள்ளையில் எடுத்தது என் மனத்தில் தோன்றியது.
காடுகளும் மலைகளுமே வகுப்பறை
டிஜிட்டல் போட்டோகிராஃபி பல வசதிகளைக் கொடுத்தாலும், விலை உயர்ந்த அந்த உபகரணங்களை நம் ஊர் போன்ற ஈரப்பதம் மிக்க இடத்தில் பேணிப் பராமரிப்பது கடினம். எளிதாகப் பூசணம் பூத்துவிடும். பின்னர் அதைச் சுத்தம் செய்வது கடினம் என்கிறார் இயான். டிஜிட்டல் போட்டோகிராஃபியால் இன்று படம் எடுப்பதில் ஒரு புதிய ஆர்வ அலை எழுந்துள்ளதைக் காண முடிகிறது.
ஆனால், இங்கு அவலம் என்னவென்றால், தமிழ்நாட்டில் ஒளிப்படம் போன்ற காண்பியல் கலையை எதிர்கொள்ள எவ்வித பயிற்சியோ முயற்சியோ இல்லை. ஆகவே, போட்டோகிராஃபி பற்றிய எவ்வகையான விமர்சனத்தையும் நம் பத்திரிகைகளில் காண முடிவதில்லை. இக்கலை இங்கு இன்னும் ஆட்களைப் படம் பிடிக்கும் நிலையிலேயே உறைந்துவிட்டது.
இயானின் படங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சோலைக் காடுகள், ஓடைகள், புல்போர்த்திய மலைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள் குறிஞ்சிப் புதர்கள், பெருமாள் மலை, ஆனைமுடி போன்ற இடங்கள் ஒரு தனி அழகைப் பெறுகின்றன. ‘இதைத்தான் நான் பார்க்கிறேன்’ என்று அவர் கூறுவது போல் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள எல்லா சரணாலயங்களும் (பறவை சரணாலயங்கள் தவிர) மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் உள்ளன.
இத்தகைய உயிர்வளம் மிக்க வாழிடங்களைப் பாதுகாத்துவிட்டால் காட்டுயிர் பெருகும் என்கிறார். அந்தப் பகுதியில் வாழும் உயிரினங்கள், சோலைமந்தி போல் அங்கு மட்டும் இருக்கும் ஓரிடவாழ்விகள் பல! காட்டுயிர், அங்கு உற்பத்தியாகும் நதிகள் எல்லாமே பாதுகாக்கப்படும். இன்றும் இக்காடுகளில் அவ்வப்போது புதிய தவளை வகைகளும் ஓணான் வகைகளும் கண்டறியப்பட்டு அறிவியலுக்கு அறிமுகமாகின்றன.
இயான், தன் மனைவி (மிசோரமைச் சேர்ந்தவர்), இரு குழந்தைகளுடன் கொழும்பில் வசிக்கிறார். அங்கு ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் இவர், வகுப்பறையில் இருப்பதைவிட மாணவர்களுடன் மலைகளிலும் காடுகளிலும் சுற்றிக்கொண்டிருக்கும் நேரமே அதிகம்!
(அடுத்த கட்டுரை: அக்டோபர் 13 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com