Published : 01 Jun 2019 11:25 AM
Last Updated : 01 Jun 2019 11:25 AM

ஞெகிழி பூதம் 18: உங்கள் வீட்டில் ஞெகிழித் தின்னி இருக்கிறதா?

வீட்டிலே ஒரு நல்ல பெரிய அட்டைப் பெட்டி அல்லது கோணிச் சாக்கைத் தேடிப் பிடியுங்கள். வீட்டில் ஒரு ஓரத்தில அதை வைத்துவிடுங்கள், அதற்கு ‘ஞெகிழித் தின்னி' என்று பெயர் வைத்துவிடுங்கள்.

குப்பைத் தொட்டியில் ஞெகிழியை போடுவதற்குப் பதில் இந்த ‘ஞெகிழித் தின்னி’யில் ஞெகிழிக் கழிவைப் போடுங்கள். பால் பாக்கெட், எண்ணெய் புட்டி, பினாயில் புட்டி என்று நம் ஒவ்வொருவர் வீட்டிலும் சேரும் ஞெகிழிப் பொருட்களின் அளவு ஒன்றும் சாதாரணமானதல்ல. மாதந்தோறும் பல கிலோ தேறும்.

மாதம் இரு முறை அல்லது ஞெகிழித் தின்னியின் வயிறு நிரம்பியவுடன் உங்கள் தெருவுக்கு வரும் துப்புரவுத் தொழிலாளியிடமோ, பழைய பொருள் சேகரிப்பவரிடமோ, காயலாங்கடையிலோ கொடுத்துவிடுங்கள்.

எதற்கெல்லாம் மறுசுழற்சி செய்யக்கூடிய சந்தை இருக்கிறதோ, அந்தப் பொருட்களை எல்லாம் அவர்களால் விற்க முடியும். அதேநேரம் நம்முடைய ஞெகிழிக் குப்பையை பிரித்துக் கையாளுவதே பெரும் வேலை. எனவே, அவரிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள்.

நீங்கள் கொடுக்கும் அத்தனையும் மறுசுழற்சி செய்வதற்குப் போவதில்லை. அலுமினியம், ஞெகிழி சேர்ந்து செய்யப்படும் (Multilayer packaging) பிஸ்கட் கவர் போன்றவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது.

உங்களிடமிருந்து வாங்குபவர், அதை மீண்டும் குப்பையிலேதான் போடுவார். அந்தப் பாவத்தை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும் அல்லது அத்தகைய பொருட்களை வாங்காமல் இருக்க வேண்டும்.

சுமையைக் குறைப்போம்

இந்த ஒரு வேலையை ஒழுங்காகச் செய்தாலே மண்ணில் சேரும் குப்பையில் பெரும் பகுதியைத் தவிர்த்துவிடலாம். சரி, ஞெகிழியைக் கையாளுவது இவ்வளவு சுலபமா? அப்படியானால் இனிமேல் கண்மூடித்தனமாக ஞெகிழிப் பொருட்களை வாங்கிக் குவிக்கலாமே என்று தோன்றுகிறதா? சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். ஞெகிழித் தின்னியின் வேலை ஞெகிழி நஞ்சை மறுசுழற்சி செய்ய முயல்வதில் முதல் படி மட்டுமே. அதுவே முழுத் தீர்வு அல்ல.

நச்சான ஞெகிழியை நாம் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்துகொண்டு இருந்தால், நம்மைக் காப்பாற்ற எந்தக் கடவுளும் வரப் போவதில்லை.

மொத்த நஞ்சையும் நம் குழந்தைகளும் அவர்களுடைய பிந்தைய தலைமுறையினரும்தான் சமாளித்தாக வேண்டும். அவர்களின் சுமையைக் குறைக்க இன்றே ஞெகிழித் தின்னியை உங்கள் வீட்டுக்குள் வைத்து விடுங்கள்.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x