Published : 08 Jun 2019 10:17 AM
Last Updated : 08 Jun 2019 10:17 AM

கோதாவரி – காவிரி இணைப்பு சாத்தியமா?

இந்தியாவில் ஏறக்குறைய 40% நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. சூழலியல் மாற்றம், எல் நினோ போன்றவை இவற்றுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. என்றாலும், மத்திய மாநில அரசுகளின் நீர் மேலாண்மைத் திட்டங்களின் படுதோல்வியும் தண்ணீர் பயன்பாட்டில் காட்டப்படும் மக்களின் அலட்சியமும் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன.

இதுபோன்ற வறட்சி, தண்ணீர் பஞ்சத்துக்குத் தீர்வாக நீண்டகாலமாக நதிநீர் இணைப்பு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆறுகளை இணைக்க வேண்டும் என்று

1858-ல் முதலில் திட்டமிட்டவர் பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் ஆர்தர் தாமஸ் காட்டன். ‘தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைத் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வருகிறது.

கூடுதல் மழைப் பொழிவின்போது வெள்ளத்தால் உபரியாகக் கடலில் கலக்கும் நீரைச் சேமித்து, வறண்ட பகுதிகளுக்குத் திருப்புவது இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் (ஆனால் அதேநேரம், உபரியாக நீர் கடலில் கலக்கிறது என்ற கருதுகோளே தவறு. கடலில் நன்னீர் கலக்காவிட்டால், கடல் கடலாக இருக்காது.).

1972-ம் ஆண்டு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல்.ராவ் நடத்திய ஆய்வில் கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 14 ஆறுகளை மகாநதி ஆற்றுடனும் இந்திய தீபகற்பத்தின் வடக்கிலுள்ள மகாநதி - கோதாவரி ஆறுகளை தெற்கிலுள்ள கிருஷ்ணா - காவிரி ஆறுகளுடன் இணைப்பது என இரண்டு பெரும் பகுதிகளை இத்திட்டம் கொண்டிருக்கிறது. இந்த 30 நதிகளும் 30 கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டு அந்த நீர் 300 அணைகளில் சேமிக்கப்படும்.

தமிழகமும் நதிநீர் இணைப்பும்

நதிநீர் இணைப்பு குறித்த ஆதரவு, எதிர்கருத்துகள் தொடக்க காலத்தில் இருந்தே தமிழகத்தில் நிலவி வருகின்றன. கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீரை ஆறுகளை இணைப்பதன் மூலம் முறையாகப் பெற்று வேளாண்மையைச் சீராக்க முடியும் என்று கூறப்படுகிறது. என்றாலும் நூற்றாண்டைத் தொடப் போகும் காவிரி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின் சிக்கல்களையும் தாண்டி, தென்னிந்திய மாநிலங்களில் நதிநீர் இணைப்பு எந்த அளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி பெரிதாக இருக்கிறது.

இந்நிலையில்தான் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புதான் தன்னுடைய முதல் பணி என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். கோதாவரியில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் 1,100 டி.எம்.சி. நீரை, கிருஷ்ணா, பென்னாறு, காவிரி ஆகிய மூன்று ஆறுகளுடன் இணைப்பதன் மூலம் தமிழகம், தெலங்கானா - ஆந்திர மாநிலங்கள் பயனடையும் என்று கூறப்படுகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்படும்பட்சத்தில் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூழலியல் பேரழிவு

இத்திட்டத்தால் உண்மையில் பயன் உண்டா, இதன் விளைவுகள் என்ன என்பது குறித்து பொறியாளர் அ. வீரப்பன் விளக்குகிறார்.

“தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 925 மி.மீ. அளவு மழை பொழிகிறது. அப்படி இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் ஆட்சியாளர்கள்தாம். தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களையே எப்போதும் நம்பி இருக்க வேண்டியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பகிர்ந்தளிப்பு ஒப்பந்தங்களை இந்த மாநில அரசுகள் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. கோதாவரி - காவிரி இணைக்கப்பட்டால் பெரும் வெள்ளக் காலங்களில் ஓர் ஆண்டுக்கு இருபது அல்லது முப்பது நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வர வாய்ப்புள்ளது. மீதி 11 மாதங்களும் எல்லா ஆறுகளும் வறண்டே கிடக்கும்.

சூழலியல் நோக்கில் பார்க்கும்போது நதி நீர் இணைப்பு, நதிகளின் ஆற்றுப் போக்கை மாற்றியமைத்து அதை முற்றாகச் சீர்குலைத்துவிடும். நிலம் கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் காடுகள் அழியும்; தொடர்ச்சியாகத் தாவரப் பன்மையும் உயிரினப் பன்மையும் பெரிதும் பாதிக்கப்படும். ஆறுகளை இணைக்கும்போது இடையில் இணைப்பாறுகளை உருவாக்கப் பெரும் செலவு பிடிக்கும்.

நதி நீர் இணைப்பு என்று முன்வைக்கப்படும் திட்டங்கள் எல்லாமே உத்தேச அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன. நதிநீர் இணைப்பினால் தமிழகத்துக்குப் பெரும் பயன்கிடைக்கும் எனத் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கவில்லை. காவிரியில் உண்மையில் கிடைப்பது 50 டி.எம்.சி.க்குக் குறைவான நீர்தான்.

நடைமுறை சாத்தியமில்லை

சமூகவியல் நோக்கில் பார்க்கும்போது மாநிலங்களுக்கு இடையேயான உறவில் மேலும் சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது. 1924 காவிரி ஒப்பந்தப்படி எந்தக் காலத்திலும் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தரவில்லை. அந்தந்த மாதக் காலத்தில் காவிரியில் உரிய டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகம் பெற்றதாக நம்முடைய அரசுத் தகவல்கள் தெரிவிக்கவில்லை.

ஆந்திர அரசு பாலாற்றில் நமக்குத் தரவேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீரை 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி, தண்ணீர் தேக்கப்பட்டே வருகிறது. கண்டலேறு, பூண்டி கால்வாய் மூலமாக கிருஷ்ணா ஆற்றுத் தண்ணீரில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி.யைக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கவே இல்லை. எனவே, ஏற்கெனவே இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டி, நதிநீர் இணைப்பு ஒரு வேளை நிகழ்ந்தால் புதிதாகப் பல்வேறு சிக்கல்கள் எழக்கூடும்.

இந்நிலையில் கோதாவரி - கிருஷ்ணாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திராவோ, கர்நாடகாவோ, மகாராஷ்டிராவோ எந்தக் காலத்தில் நமக்குத் தரும்?

nadhijpg

பொருளாதார அடிப்படையில் இத்திட்டத்துக்கு சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளில் கடன் வாங்கப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் தீட்டலாம். ஆனால், அதை உண்மையில் நடைமுறைப்படுத்த இயலாது” என்கிறார் வீரப்பன்.

மாற்று வழிகள்

இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துச் சுற்றுச்சூழலைச் சீர்குலைத்து, ஆற்றின் போக்கை மாற்றி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதைவிடச் சாத்தியப்படக்கூடிய மாற்றுவழிகளாக வீரப்பன் பரிந்துரைப்பது: “கோதாவரி - காவிரி இணைப்புக்குப் பதிலாகச் செலவு குறைவாகப் பிடிக்கும், குறுகிய காலத்தில் நிறைவேற்றத்தக்க உள்ளூர்த் திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவது நல்லது.

மேலும், தமிழ்நாட்டில் இருக்கிற நீர்வளங்களை முறையாகப் பேணி காக்காமல் விட்டதால் 39,000க்கு மேற்பட்ட ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, தவறான பயன்பாடுகளை உடனடியாக அகற்ற வேண்டும். அவை அனைத்தும் தூர்வாரப்பட்டு மழைநீரைச் சேகரிக்க 1 மீட்டர் அளவுக்காவது ஆழப்படுத்தப்பட வேண்டும்.”

ஆறுகளை இணைப்பதற்குப் பதிலாக இப்போதுள்ள ஆறுகள் மூலமாகக் கிடைக்கும் தண்ணீரைச் சிக்கனமாகவும் அதிக பயன்தரும் வகையிலும் பயன்படுத்தும் உத்திகளை முதலில் கையாள வேண்டும். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தை ஊக்குவிக்க வேண்டும். ஏரிகளில் தண்ணீரைத் தேக்கி, பயன்படுத்தும் பண்டை காலப் பாசன முறையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

நதிநீர் இணைப்பின் சிக்கல்கள்

“நதி என்பது பல்லூழிக் காலமாக உருவான ஒரு வாழிடம். இயற்கை நிலவாகுக்கு ஏற்ப நதிகள் பாய்கின்றன; தாமாகவும் இணைந்து கொள்கின்றன. நதிகளை இணைப்பது என்பது சாலை போடுவது போன்ற வேலையல்ல” என்று நதிகளை இணைப்பதில் உள்ள அடிப்படைப்

பிரச்சினைகளைப் பற்றிக் கூறுகிறார் சூழலியலாளர் சு. தியடோர் பாஸ்கரன். நதிகளை இணைப்பதால் கிடைக்கும் நன்மையைவிட, திட்டச் செயல்பாட்டுக்கு ஆகும் செலவு அதிகம் என்றும் அதனால் நாம் இழக்கப்போகும் இயற்கை அம்சங்கள் அரிய உயிரினங்களுக்கான விலையை மதிப்பிடவே முடியாது என்றும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: arunprasath.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x