Published : 15 Jun 2019 11:23 AM
Last Updated : 15 Jun 2019 11:23 AM

ஞெகிழி பூதம் 20: ஞெகிழிக் குப்பையும் தாய்ப்பாலில் டையாக்சினும்

ஊரைவிட்டு வெளியில், ஒதுக்குப்புறமாக உள்ள குப்பைக் கிடங்குகளில்தான் மாநகராட்சி / நகராட்சிக் குப்பை கொட்டப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் சேரும் திடக்கழிவை வெளியேற்ற மாநகராட்சிகள்/நகராட்சிகள் ஒரு பெரும் தொகையை ஒதுக்குகின்றன.

ஆனால், குப்பையை எடுப்பது, லாரிகளில் நிரப்புவது, லாரிகளுக்கான எரிபொருள் செலவு போன்றவற்றுக்கே அதில் 90% சதவீதத் தொகை செலவாகிவிடுகிறது.

அதற்கு அப்புறம் அந்தக் குப்பையைப் பிரிக்கவோ அறிவியல்பூர்வமாகக் கையாளவோ பணம் இருப்பதில்லை என்று கை விரிக்கப்பட்டு விடுகிறது. கடைசியில் எல்லாக் குப்பையும் குப்பைக் கிடங்குகளில் (landfills) கொட்டப்படுகின்றன, வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எரிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் தினசரி சேகரிக்கப்படும் 15,000 டன் குப்பையில், 7,000 டன் குப்பை கிடங்குகளில்தான் உறங்குகிறது. அது நம் மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன செய்கிறது என்று குப்பைக் கூடங்களுக்கு அருகே வசிக்கும் மக்களிடம் ஒரு வார்த்தை கேட்டாலே தெரிந்துவிடும்.

குப்பைக் கிடங்குச் சிக்கல்கள்

குப்பைக் கிடங்குகளை வடிவமைப்பதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. குப்பையிலிருக்கும் வேதிப்பொருட்கள் நிலத்தடி நீரில் ஊடுருவாமல் இருக்க வேண்டும், அருகில் மக்கள் வசிக்கும் பகுதி இருக்கக் கூடாது, குப்பையை எரிக்கும் பட்சத்தில், அதில் நச்சுப்பொருட்கள் இருக்கக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆனால், சென்னை கொடுங்கையூர், பெருங்குடி போன்ற குப்பைக் கிடங்குகளில் இருந்து நச்சுக்காற்று வராமலா இருக்கிறது அல்லது பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் இயற்கைச் சமநிலை சீர்குலையாமல் இருக்கிறதா? இந்தப் பகுதிகளில் ஞெகிழியை எரிப்பதால் வெளியேறும் டையாக்சின் தாய்ப்பாலில்கூடக் கலந்துள்ளது என்ற ஒரு எடுத்துக்காட்டு, இங்கு கொட்டப்படும் குப்பையில் உள்ள ஆபத்தை வெளிச்சமிட்டுக் காட்டும்.

மதுரை மாநகரின் வெள்ளக்கல் குப்பைக் கிடங்குக்கு அருகே இருக்கும் மூன்று ஊர்களின் நிலத்தடி நீரின் தரத்தை ஒரு கல்லூரி ஆய்வு செய்துள்ளது. குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு காரணமாக, அங்கு இருக்கும் நிலத்தடி நீரின் TDS அளவு சராசரியைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இப்படி நிலத்தடி நீரில் அதிகமாகக் கலந்துள்ள பல தாதுக்கள் மனித உடலுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடியவை. எனவே, குப்பையைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x