Last Updated : 10 Mar, 2018 12:23 PM

 

Published : 10 Mar 2018 12:23 PM
Last Updated : 10 Mar 2018 12:23 PM

அன்னமிடும் கைகளுக்கு எப்போது அங்கீகாரம்?

பெ

ண்கள் - உலகுக்கு உணவு படைப்பவர்களாக காலம் காலமாக இருந்து வந்திருக்கிறார்கள். இது சமையல்கட்டுடோடு முடிந்துவிடும் ஒன்றல்ல. இன்றைக்கும் வயல்களில் இடுப்பொடிய வேலை பார்க்கும் உழவுக் கூலிகளாக, உழவர்களாக, வேளாண் பணி மூலம் குடும்பத்துக்கு சோறு போடுபவர்களாக இந்திய கிராமப்புற பெண்கள் திகழ்கிறார்கள்.

‘நமது கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு' என்று சந்தேகமில்லாமல் இவர்களைச் சொல்லலாம்.

ஆனால் உழவர்கள் என்றவுடன் நம் கண் முன் தோன்றும் பிம்பம், இதற்கு நேரெதிராக இருக்கிறது. பெண்களுக்கு நில உரிமை கிடையாது, வேளாண் பணிகளுக்கு எளிதாகக் கடன் பெற முடியாது, வேளாண் பயிற்சிகளோ - தகவல்களோ ஆண்களை மையமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய கிராமப்புறங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், அதாவது 100 கோடிக்கு மேற்பட்டோரின் தொழில் ஏதோ ஒருவகையில் வேளாண்மையைச் சார்ந்தே இருக்கிறது. இந்திய கிராம பெண்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேளாண் பணிகளையே நம்பியுள்ளனர். நேரடி விவசாயப் பணிகளில் பெண்களின் பங்கு 30 சதவீதத்துக்கு மேலும், விவசாயக் கூலித் தொழிலாளர்களில் 45 சதவீதத்துக்கு மேலாகவும் உள்ளது. நேரடி வேளாண் பணிகள் மட்டுமே இதில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண்மையில் பெண்களின் பங்கு இந்த அளவுக்கு இருந்தாலும் கூலி, நில உரிமை, வேளாண் சங்கங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் போன்ற அம்சங்களில் எந்த வகையிலும் சமத்துவமில்லை. பெண்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுவதால் குழந்தைகளின் கல்வியறிவும் குடும்ப ஆரோக்கியமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

அதேநேரம் பெண்களுக்கு இந்த உரிமைகள் தரப்படும் பட்சத்தில் வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, பட்டினி - ஊட்டச்சத்து குறைபாடு ஒழிப்பு, கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு போன்ற ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்கு பெரும் பங்களிக்கிறது என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெண்களுக்கும் வேளாண்மைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நாம் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது:

வேளாண் பணிகளுக்கும் பெண்களுக்குமான தொடர்பு எப்படிப்பட்டது?

வேட்டை சமூகமாக இருந்து வேளாண் பணிகளை நோக்கி உலக நாகரிகங்கள் திரும்பிய காலத்தில், காட்டுத் தாவரங்களில் உண்ணத் தகுந்தது எது, எந்தத் தாவரம் எந்த ஊட்டச்சத்தைத் தரும், எப்படி ஒரு பயிரை வளர்க்க வேண்டும் என வேளாண்மையின் பல்வேறு அம்சங்களை வளர்த்ததில் பெண்களின் பங்கு அளப்பரியது. இன்றைக்கும் பெரும் பக்கவிளைவுகளைத் தருவதாக அறியப்படும் வீரிய விதைகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு மாறாக மரபார்ந்த-பாரம்பரிய விதைகளை கிராமப்புற பெண்களே பெருமளவில் பாதுகாத்து வருகின்றனர்.

வளரும் நாடுகளில் வேளாண் பணியில் பெண்களின் பங்கு எத்தகையது?

வளரும் நாடுகளில் நடைபெறும் வேளாண்மையில் ஈடுபடுவோரில் 43 சதவீதம் பேர் பெண்கள். தென்னமெரிக்க கண்டத்தில் இது 20 சதவீதமாக இருந்தாலும், ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் 50 சதவீதத்தை எட்டுகிறது. சில நாடுகளில் 60 சதவீதமாக உள்ளது.

வேளாண் பணிகளில் பெண்களின் பங்கு பெரும்பாலும் குறைத்து கணிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் பெண்களில் பலரும் வேளாண் பணியை தனி வேலையாகக் கருதுவதில்லை அல்லது சொல்வதில்லை. அத்துடன் வயது வித்தியாசமின்றி ஆண்களைவிட பெண்களே அதிக நேரம் வேளாண் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

வேளாண் ஆதாரங்கள், மூலப்பொருட்களைக் கையாளுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்களா?

இல்லை. மிகக் குறைவாகவே அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான நாடுகளில் இதுவே உண்மை. வேளாண் பணிகளில் ஈடுபடும் ஆண்களுக்கு உள்ளதைவிட பெண்களின் கட்டுப்பாட்டில் நிலம், கால்நடைகள், கடன் - காப்பீட்டை பெறுவதற்கான சாத்தியம் போன்றவை குறைவாகவே உள்ளன. இதற்குப் பெண்கள் கல்வியறிவு பெறாதது, விரிவாக்க வசதிகளைப் பெற முடியாதது போன்றவை காரணமாக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், வேளாண்மை சார்ந்த பணம், சொத்து பெண்கள் கையில் பெரிதாக இல்லை.

கிராமப்புற வேலைச் சந்தையில் பெண்கள் ஒடுக்குமுறையை எதிர்கொள்கிறார்களா?

பெரும்பாலான நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் வேளாண் பணிகள் சார்ந்து ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பருவ காலத்திலும், பகுதி நேரமாகவும், மிகக் குறைந்த ஊதியமுமே வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் கல்வி, வயது, வேலை போன்றவற்றின் அடிப்படையிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஒரே வேலையைச் செய்யும்போதுகூட ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.

பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்கள் வறியவர்களிலும் கூடுதல் வறுமையைக் கொண்டுள்ளனவா?

வறியவர்களிலும் பெண்கள் அதிக வறியவர்களாக இருப்பது ஒரு வகையில் உண்மை. அதற்குக் காரணம் உற்பத்தி ஆதாரங்களை அவர்களால் நேரடியாகக் கையாள முடியாமல் போவதே.

உலக உணவு நிறுவனம் 20 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின்படி ஆண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்களைவிட பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்களில் வறுமை கூடுதலாக இருந்துள்ளது. தனியாக வாழும் தாய்மார்கள், விவாகரத்து பெற்றவர்கள், கணவரை இழந்தவர்கள், கணவரிடம் இருந்து விலகி வாழ்பவர்களின் குடும்பங்கள் கூடுதல் வறிய நிலையிலேயே உள்ளன.

உணவுப் பொருள் விலையேற்றத்தின்போது பெண்கள் தலைமை வகிக்கும் கிராமப்புற குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை உணவைப் பெறுவதற்காகவே அவர்கள் செலவழிக்க வேண்டியுள்ளதுதான்.

ஆண்கள், சிறுவர்களைவிட, பெண்கள், சிறுமிகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா?

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை இந்தக் கூற்று பெரிதும் உண்மை. அத்துடன் குடும்ப வருமானத்தில் ஏற்படும் சரிவு சிறுவர்களைவிட, சிறுமிகளையே பெரிதும் பாதிக்கிறது.

ஆண்களைவிட பெண்களுக்குக் கிடைக்கும் வருமானம், அவர்களுடைய குழந்தைகளுக்கு அதிகம் செலவழிக்கப்படுகிறதா?

இது சார்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளின்படி ஆண்களைவிட பெண்களுக்குக் கிடைக்கும் வருமானம் அவர்களது குழந்தைகளின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம், கல்விக்கே பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல படித்த பெண்கள் இருக்கும் குடும்பங்களில் ஆக்கப்பூர்வ விளைவை பார்க்க முடிகிறது. பெண்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றுவது குழந்தைகளின் நலனை மேம்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x