

கடற்கரைப் பகுதிகளில் கடந்த 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 160.83 டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ள தாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொது மக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்கள். இயந்திரங்களைக் கொண்டு கடந்த 14-ம் தேதி முதல் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் 116.17 டன், பெசன்ட் நகரில் 20.97 டன், திருவான்மியூர் கடற்கரையில் 9.02 டன். திருவொற்றியூரில் 3.37 டன், பாலவாக்கத்தில் 6.96 டன், நீலாங்கரையில் 4.34 டன் என மொத்தம், 160.83 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
கடற்கரைப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதார மாகவும் பராமரிப்பது அனைவரின் பொதுபொறுப்பாகும். கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள், எச்சங்கள் உள்ளிட்ட எந்த விதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கடற்கரைப் பகுதிகளுக்கு வரும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குப்பைக் கழிவுகளை, அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு. மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.