Last Updated : 09 Mar, 2019 02:01 PM

 

Published : 09 Mar 2019 02:01 PM
Last Updated : 09 Mar 2019 02:01 PM

ஆழ்கடல் மைந்தர்கள்

இன்று, நேற்றல்ல; கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக முத்துக்குளித்தல் தமிழகப் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்திருப்பதை வரலாறு உறுதிப்படுத்துகிறது. வலையர், முத்திரியர், அம்பலக்காரர் ஆகிய மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரம் இத்தொழில் மட்டுமே.

காலனிய காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் கடல் வளம் அதிகப்படியாகச் சுரண்டப்பட்டதால், 1960-களுக்குப் பிறகு முத்துக்குளித்தல் அருகிப்போனது. முத்துக் குளிப்பவர்களில் அநேகர் சங்கு சேகரிப்பவர்களாக மாறிப்போனார்கள். ஆழ்கடலில் வசிக்கும் நத்தைகளின் ஓடுகளே சங்குகள். ஆசியக் கடற்பரப்புகளில் கடலின் மேற்பரப்பிலிருந்து சில மீட்டர் ஆழத்தில் சுமாரான தரத்தில் சங்குகள் கிடைக்கின்றன. தரமான, விலையுயர்ந்த சங்குகளோ 125 அடி ஆழத்துக்குக் கீழ் சென்றால்தான் கிடைக்கும்.

முத்துக்குளிப்பால் அடங்கிய உயிர்கள்

முத்துக்குளித்தல் எளிதான காரியமல்ல. கடலடியில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் மூச்சடக்க முடியாத நிலையில், சங்குகளைச் சேகரிக்கக் கடலுக்குள் நூற்றுக்கணக்கான அடி ஆழத்துக்குக் கீழ் நீந்த வேண்டும். ஒரு கூடையை இடுப்பில் கட்டிக்கொண்டு எந்தப் பாதுகாப்புக் கவசமுமின்றி நீருக்குள் மூழ்கிச் சங்குகளைச் சேகரித்தல் என்பது பெரும்பாடு. தமிழக அரசு 2011-ல் சங்கு சேகரிப்பவர்கள் கட்டாயம் ‘கட்டுப்பாட்டுக் கருவி’யை (regulator) வாயில் பொருத்திக்கொண்டு நீருக்குள் மூழ்க வேண்டும். அந்தக் கருவியோடு 100 மீட்டர் நீளம் கொண்ட ஹோஸ் குழாய் இணைக்கப்பட்ட காற்றழுத்தக் கருவி (air compressor) இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், இதைப் பயன்படுத்துவதற்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால் 2013-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 23 கடலோடிகள் கடலில் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

சீர்குலைந்த வாழ்வாதாரம்

இந்த மரணங்கள்தாம், ஒரு கட்டத்தில் முறையான பயிலரங்கம் நடத்த அரசை நிர்ப்பந்தித்தன. அதன்பிறகே மீன்வளத் துறை சங்கு சேகரிப்பவர்களுக்கு ஒரு சங்குக்கு ரூ.30 முதல் ரூ.130வரை ஊதியத்தையும் அளிக்கத் தொடங்கியது. பாதுகாப்புக் கருவிகளின் போதாமையும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான போதிய பயிற்சியின்மையும் ஒருபுறம் இருக்க, கடல் மாசுபாடும் மீன்பிடிப் படகுகளின் அதிகரிப்பும்தான் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பெரிதும் சீர்குலைப்பதாக இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். கடல் மடியிலும் குப்பைகூளத்துக்கு இடையிலும் சங்கைக் கண்டடைய வேண்டிய நிலை வந்துவிட்டது என வேதனையுடன் அவர்கள் கூறுகிறார்கள்.

முத்துக்குளிக்கும் பட்டதாரிகள்

கடலடியில் பல மணிநேரம் கழிப்பதால் இவர்களுடைய செவித்திறன் கடுமையாகப் பாதிப்படைகிறது. இதனால், தொடர்ச்சியாக 45 நிமிடங்களுக்கு மேல் ஆழ்கடலில் நீந்தக் கூடாது என்று அரசு வலியுறுத்துகிறது. இருப்பினும், வருமானம் போதவில்லை என்று தொடர்ச்சியாக இரண்டு மணிநேரம்வரை கடலடியில் சங்கு தேடலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இன்னல்கள் தொடர்ந்தாலும், தொழிலை அவர்கள் விடுவதாக இல்லை. அவர்களுடைய சந்ததியினரும் அதே தொழிலைத் தொடர்கின்றனர். புதிய வேலைவாய்ப்பு இல்லாததால் இச்சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளும் சேகரிக்க ஆழ்கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், உழைப்புக்கேற்ற ஊதியத்துக்கு வழியில்லை. சில ஆண்டுகளுக்கு முன்புவரை வாரத்துக்கு ஒரு கோடி ரூபாய்வரை ஈட்டிவந்த இத்தொழிலில் தற்போது வாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது எனக் கவலையுடன் அவர்கள் கூறுகின்றனர்.

கேள்விக்குறியான வாழ்வு

தமிழகத்தில் சேகரிக்கப்படும் சங்குகளில் பெரும்பான்மை மேற்கு வங்கம், அசாம், வங்கதேசம் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கு அவை ஆபரணங்களாக மாற்றப்படுகின்றன. தினமும் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான சங்குகள் கொல்கத்தாவுக்கு மட்டும் கொண்டுசெல்லப்படுகின்றன. இருப்பினும், கடலின் அடி ஆழத்திலிருந்து சங்குகளை மேலெடுத்துவரும் முத்துக்குளிக்கும் சமூகத்தினருக்கு அதனால் பெரிய பலன் எதுவும் இன்று இல்லை. 1993-க்கு முன்புவரை இவர்களுக்கு வீட்டு வசதியும் சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளையும் அரசு வழங்கிவந்தது. ஆனால், சங்கு சேகரிப்புத் தொழில் தனியார் மயமாக்கப்பட்ட பிறகு இம்மக்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.

வாழ்வில் ஒளியேற்றுவோம்

தமிழகத்தைப் பொறுத்தவரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், முத்துக்குளிக்கும் தொழிலில் ஆயிரக்கணக்கான கடலோடிகள் ஈடுபட்டுவருகிறார்கள். அருவியிலோ ஆற்றிலோ அடித்துச்செல்லப்பட்டவர்களை நீந்திக் கண்டுபிடித்துக் கரை சேர்க்க போலீஸ் நாடுவது இவர்களைத்தான். இந்தப் பணிக்கு அவர்களுக்குக் கொடுக்கப்படுவது என்னவோ பயணச் செலவு, உணவுப் பொட்டலங்கள் மட்டுமே. சில நேரம் பறிகொடுத்தவர்கள் நன்றிக்கடனாகப் பணம் தரக்கூடும். மொத்தத்தில், சங்கானாலும் நீரில் அடித்துச் சென்ற பிணமானாலும் கரைகொண்டு வந்து சேர்க்கும் இந்த மனிதர்களின் இருப்பு உலகுக்குத் தெரிவதில்லை என்பது வேதனையே. சமூகமும் அரசும் மனம் வைத்தால், பிழைப்புக்காக மூச்சடக்கும் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x