Last Updated : 16 Mar, 2019 10:54 AM

 

Published : 16 Mar 2019 10:54 AM
Last Updated : 16 Mar 2019 10:54 AM

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

உலக மக்காச்சோளத் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. 2014-ல் முன்பு 9,93,748 மெட்ரிக் டன்னாக இருந்த உலகத் தேவை 2017-ல் 10,65,114 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. அதுபோல 2014-ல் 19,600 மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியத் தேவையும் 2018-ல் 25,800 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது எனத் தேசிய வணிக மேலாண்மைச் சேவை நிறுவனத்தின் (NCMS) அறிக்கை கூறுகிறது.

அதுபோல் இந்திய மக்காச்சோள உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு உற்பத்தி 2.8 கோடி டன் ஆக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டின் உற்பத்தி இலக்காக 2.7 டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விளைச்சல் அதைவிடக் குறைவாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று சென்ற ஆண்டு இந்தியாவுக்குள் படையெடுப்பை நிகழ்த்திய அந்நியப் படைப்புழுக்கள்தாம் (Armyworm).

படைப்புழு, முதன்முதலாக 2016-ல் சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை நிறுவனத்தால் (IITA) ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அடையாளம் காணப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் 38 ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் படைப்புழுக்கள் பரவின. இந்தப் படைப்புழு, மக்காச்சோள உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை. விவசாய உற்பத்தி இறக்குமதி மூலம் இது ஆப்பிரிக்க நாடுகளுக்குள் நுழைந்தது. சர்வதேச உயிரியல், விவசாய மையம் 12 ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்தப் படைப்புழுக்கள் 250-லிருந்து 620 கோடி அமெரிக்க டாலர்வரை பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மற்ற பயிர்களுக்கும் ஆபத்து

இந்தப் படைப்புழுக்கள் கடந்த ஆண்டு மே மாத மத்தியில் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டன. இந்திய மக்காச்சோள உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கர்நாடகத்தில் இதன் தாக்கத்தை சீமக்கா வேளாண், தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் ஐ.ஐ.டி.ஏ.வின் உதவியுடன் உறுதிசெய்துள்ளது. இது இப்போது இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளைத் தொடர்ந்து சீனாவுக்கும் பரவியுள்ளது. அமெரிக்காவுக்கு இணையாக உலக மக்காச்சோள உற்பத்தியில் பங்களிக்கும் நாடு சீனா. இதன்மூலம் ஆசிய மக்காச்சோள உற்பத்தியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் எனக் கணிக்கப்படுகிறது.

இலங்கை அரசு மக்காச்சோளம் பயிரிடுவதைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், படைப்புழுக்கள் இப்போது கரும்புப் பயிரையும் தாக்கத் தொடங்கியிருக்கின்றன. ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் கரும்பு இனப்பெருக்க அபிவிருத்தி மையத்தைச் சேர்ந்த பூச்சி யிலாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கென்யாவில் இந்தப் படைப்புழுக்கள் சோளம், பீன்ஸ், முட்டைக்கோசு, பீன்ஸ், தக்காளி ஆகிய பயிர்களையும் தாக்கியுள்ளன. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் இந்தப் புழுக்கள் நுழைந்திருப்பதன் ஆபத்தை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஸ்டப்னி பார்கர் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் புழுக்கள் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படைப்புழுக்களைப் பூச்சிகொல்லிகளை வைத்துக் கட்டுப்படுத்திவிட முடியாது. அம்முறைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இவை பயிர்களுக்குள் ஒளிந்துகொண்டு தனது கழிவால் மூடிக்கொள்வதால் பூச்சிக்கொல்லிகளால் இவற்றைக் கொல்ல முடிவதில்லை. இதைக் கட்டுப்படுத்த ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட இயற்கை வழிமுறைகள் உண்மையில் பலன் தந்துள்ளன என பயோவிஷன் அமைப்பு குறிப்பிடுகிறது. ஐ.நா.வின் உணவு, வேளாண் அமைப்பும் இம்முறைகளை வழிமொழிந்துள்ளன.

‘புஷ் - புல்’ பூச்சி மேலாண்மை முறை

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முதலில் கென்ய அரசும் பூச்சிக்கொல்லிகளையே பரிந்துரைத்தது. ஆனால், அதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படவில்லை. விளைச்சலில் பாதிக்கும் மேல் நஷ்டமாகியுள்ளது. அதன் பிறகுதான் கென்யாவில் இயங்கிவரும் சர்வதேசப் பூச்சி உடலியல் மையம் உருவாக்கிய Push pull பூச்சி மேலாண்மை முறையைப் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது. இந்த முறையில் நேப்பியர் போன்ற புல் வகைப் பயிரை மக்காச்சோளப் பயிர் வரிசையைச் சுற்றி நட வேண்டும். இதன் மூலம் படைப்புழுக்கள் இந்தப் புல்லைத்தான் தாக்கும். அப்படித் தாக்கிப் புல்லின் மீது இடப்படும் முட்டைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பெரும்பாலும் அடுத்த நிலைக்கு உயிர்பெறுவது பெருமளவு குறையும். இதன்மூலம் அதன் தாக்கத்தைப் படிப்படியாகக் கட்டுப்படுத்த முடியும்.

ஊடு பயிர் முறை

பயறு வகைப் பயிர்களை ஊடு பயிராக நடுவதன் மூலம் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்காச்சோளப் பயிர் விதைப்பதற்கு 10 நாட்கள் முன்பே பீன்ஸ் போன்ற பயறு வகைப் பயிர்களைப் பயிரிட வேண்டும். இதனால் முதலில் வளர்ந்துவரும் பீன்ஸைப் படைப்புழுக்கள் தாக்கும். அடுத்து நடவிருக்கும் மக்காச்சோளத்தைக் கவனிக்கத் தவறிவிடும்.

மரச் சாம்பலும் மிளகாய்ப் பொடியும்

முட்டுவரை வளர்ந்த மக்காச்சோளப் பயிரில் 2 கிலோ மரச் சாம்பலுடன் ஒரு சிட்டிகை மிளகாய்ப் பொடியும் கலந்து இட வேண்டும். இம்முறையின் மூலம் படைப்புழுக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

நிலத்தைச் செப்பனிடுதல்

மக்காச்சோளத்தைப் பயிரிடும் முன்பு நிலத்தை உழுவதன் மூலம் லார்வாவுக்கும் அந்துப்பூச்சிக்கும் இடைப்பட்ட மூன்றாம் கட்ட படைப்புழுக்களை வெளியேற்ற முடியும். இப்படி வெளிவரும் படைப்புழுக்களைப் பறவைகள், சிற்றுயிர்கள் இரையாக்கும் வாய்ப்புள்ளது.

இனக்கவர்ச்சிப் பொறி

ஆண் படைப்புழுப் பூச்சியைக் கவர்வதற்கு இனக்கவர்ச்சிப் பொறியைப் வைப்பதன் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும். இனப்பெருக்கத்தைத் தூண்டக்கூடிய பெண் பூச்சிகளின் வாசனை (Pheromone) உள்ள மருந்துகளைப் பைகளில் வைத்து ஆண் பூச்சிகளைப் பிடிக்கலாம். இது பரிசோதனை முறையில் நல்ல பலன் தந்துள்ளது.

உயிர்ப் பூச்சிக்கொல்லி

சர்வதேசப் பூச்சி உடலியல் மையம் இம்முறையைப் பரிந்துரைத்துள்ளது. சில வகை பொறி வண்டுகளுக்கு (Cotesia icipe) படைப்புழுக்களைக் கொல்லக்கூடிய ஆற்றல் உண்டு. அவற்றை அதிக அளவில் வளர்த்து, படைப்புழுக்கள் தாக்கியுள்ள விளைநிலங்களில் விட்டால் 70 சதவீதம்வரை அவற்றைக் கட்டுப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டுகள் ராணுவப் படைப்புழுக்களின் முட்டைகள் மீது முட்டையிட்டுத் தொடக்க நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்துவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது பூஞ்சை, பாக்டீரியத்தை வளர்ப்பதும் பலன் தரும் என சர்வதேசப் பூச்சி உடலியல் மையம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x