Published : 23 Mar 2019 10:08 am

Updated : 23 Mar 2019 10:08 am

 

Published : 23 Mar 2019 10:08 AM
Last Updated : 23 Mar 2019 10:08 AM

வறட்சியை வென்ற கிராமம்

பல ஆண்டுகளாக மழை போதிய அளவு இல்லாததால் நாட்டின் விவசாய உற்பத்தித் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆற்றுவழிப் பாசனம் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. கண்மாய் வழிப் பாசனம் ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது. இதுதான் பல கிராமங்களின் நிலை. சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இரண்டு போகம் விளைந்த, வளம் நிறைந்த கிராமமாக இருந்தது வேப்பங்குளம். இப்போது விவசாயம் நிரந்தரமாக கைவிடப்பட்டுவிடுமோ என்கிற நிலையில் உள்ளது. ஆனால், இந்த நிலையை அந்தக் கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து மாற்றியிருக்கிறார்கள். கண்மாய்களைத் தூர்வாரி சுமார் 250 ஏக்கரில் நெல் பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்திருக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.


மழை குறைவு என்று குறைபட்டுக் கொள்கிறோம். ஆனால், மழை நீரைச் சரியாகச் சேகரித்து வைத்துக்கொள்வதில்லை. மழை நீரைச் சேகரித்துப் பயன்படுத்த ஏற்கெனவே அங்கு கண்மாய்கள் இருந்தன. ஆனால், பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்தக் கண்மாய்களில் நீர்வரத்து இல்லாதிருந்தது.

இந்நிலையில் நான்கு பெரிய கண்மாய்களைச் சீரமைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. முதலில் திட்ட அறிக்கையைத் தயார் செய்தனர். அதற்குத் தேவைப்படும் ரூ. 5 லட்ச ரூபாயை ஊர் மக்களிடமும் நண்பர்களிடமும் பெற்று நான்கு மாதக் காலத்திற்குள் கண்மாய்கள் சிறப்பாகச் சீரமைக்கப்பட்டன.

கண்மாய்கள் சீரமைக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு, அதை நேரில் பார்வையிட வேப்பங்குளம் கிராமத்துக்கு வந்த இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், கிராம மக்களை வெகுவாகப் பாராட்டிச் சென்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் மழையளவு மிகக் குறைவு. இருந்தபோதிலும், பெய்த குறைந்த அளவு மழையால் கண்மாய்கள் முக்கால் பாகம் நிரம்பின. கிராமமே தாங்கள் செய்த பணியின் பலனை உணர்ந்தனர். நம்பிக்கையின்மையால் விதைப்பு மூலம் நெல் பயிரிடும் முறைக்கு மாறியிருந்த விவசாயிகள் பலர், நாற்று பாவி விவசாயம் செய்யத் தொடங்கினர்.

பல வருடங்களுக்குப் பிறகு மடைகள் திறந்து விவசாயம் செய்யப்பட்டது. கண்மாய்களில் நிறைந்திருந்த நீரால் நிலத்தடி நீர் உயர்ந்து ஆழ்துளைக் கிணறுகள் முழுத்திறனுடன் செயல்பட்டன.

விவசாய வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தொடர் விவசாயக் கூட்டங்கள் துல்லிய வேளாண்மைக்கான அவசியத்தை மக்களுக்கு உணர்த்தின. பலர் திருந்திய நெல்சாகுபடி முறையைப் பின்பற்ற வழிசெய்தது. பூச்சி தாக்குதல், ஊட்டச்சத்து குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு, விவசாய வல்லுநர்கள் மூலமாகத் தீர்வு காணப்பட்டது. சிறந்த பயிர் மேலாண்மை பின்பற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் விவசாயம் பொய்த்துப்போயிருக்கும் நிலையில், வேப்பங்குளம் கிராமம் வெற்றிகரமாக விவசாயத்தைச் செய்திருக்கிறது.

ஐந்து லட்ச ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் இன்று வேப்பங்குளம் கிராமம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நெல் உற்பத்தி (கிலோ 17 ரூபாய் என்கிற கணக்கில்) செய்த கிராமமாக மாறியிருக்கிறது. இந்த வெற்றி, பயிரிடப்படாத மேலும் 250 ஏக்கர் வரும் காலங்களில் பயிரிடப்பட வழிவகுக்கும். பிற பயிர்களான எலுமிச்சை, நார்த்தை, புளி போன்ற விளைபொருள்களைச் சிறப்பாகச் சந்தைப்படுத்துதல் மூலம் மூன்று கோடி ரூபாய் உற்பத்தித் திறன் கொண்ட கிராமமாக விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் முயற்சியைப் பார்த்த மாவட்ட நிர்வாகம் கண்மாய்களின் மடைகளை மாற்றித் தருதல், நெற்களம் அமைத்துத் தருதல், ஆயிரம் மரக் கன்றுகளை நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் உருவாக்குதல் ஆகியவற்றுக்கு உறுதி அளித்துள்ளது.

வேப்பங்குளம் கிராம மக்கள் இந்திய விவசாயிகளுக்கு முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், கிராமப்புற மறுசீரமைப்பு சாத்தியமே. எளிதும்கூட. கிராமப்புறங்கள் மிக வேகமாகத் தங்கள் ஆற்றலை இழந்து வருகின்றன. வெகுவிரைவில் நாம் செயல்படவில்லையென்றால் அவை நிரந்தரமாகச் செயல் இழந்துவிடும் ஆபத்து உள்ளது. கிராம நீர்நிலைகளைச் சிறப்பாகச் செப்பனிட்டுப் பராமரிப்பது கிராம மறு சீரமைப்புக்கு அடிப்படை. நமது காலத்துக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் தேவைப்படும் நீர், விவசாய மேலாண்மையைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியமானது.

அடுத்த கட்டமாக, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் சார்ந்த ‘விவசாய செயல் மேலாண்மை மையம்’ அமைத்து அதன் மூலம் டிஜிட்டல் கிராமங்களுக்கு முன்னுதாரணமாக மாறும் பணியில் தீவிரமாக இருக்கிறது வேப்பங்குளம் கிராமம். விளைபொருள்களின் விலை வீழ்ச்சி/ விலை அதிகரிப்பைக் கட்டுக்குள் வைக்கத் தேவைப்படும் ‘பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கும் தற்போதைய பரப்பளவு புள்ளிவிபரம்’ (Live Crop Variety Production Data), பயிர்க்கடன், பயிர்க் காப்பீட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் போன்ற அத்தியாவசியமான அம்சங்களை இந்த முறை உள்ளடக்கியிருக்கிறது.

 

- மேனா.உலகநாதன்,
தொடர்புக்கு: menaulaganathan@gmail.comவறட்சி கிராமம்வறட்சி ஒழிப்புமாதிரி கிராமம்சிறந்த கிராமம்கண்மாய் வழிப் பாசனம் சிவகங்கை மாவட்டம்வேப்பங்குளம் கிராமம்கண்மாய் சீரமைப்புநீர்நிலை சீரமைப்புதண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்Live Crop Variety Production Data

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x