Last Updated : 23 Feb, 2019 12:13 PM

Published : 23 Feb 2019 12:13 PM
Last Updated : 23 Feb 2019 12:13 PM

சிங்கப்பூரைத் துறந்த இயற்கை உழவர்

கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை கிராமங்களில் ஒன்று வள்ளிமதுரம் கிராமம். விவசாயம் பொய்த்துப்போய் வீட்டுக்கு வீடு தொலை நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்துவிட்டார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் தான் செய்துகொண்டிருந்த வெளிநாட்டுப் பணியை உதறி, இயற்கை விவசாயத்தின் மூலம் அந்த கிராமத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அவர் இளம் விவசாயி கதிர்வேல்.

“இயற்கை விவசாயம் அப்பிடின்னாலே இடுபொருட்களுக்காக அதிகம் செலவு பிடிக்கும், அதைக் கத்துக்கிறது சிரமம், உரிய வழிகாட்டுதல் கிடையாது என்று தவறான அபிப்பிராயங்கள் மக்களிடம் ஏராளமா இருக்கு. அதனாலேயே இயற்கை நடைமுறைகளுக்குத் திரும்பாம இருக்காங்க. ஆனா கிட்டத்தட்ட செலவே இல்லாத இயற்கை விவசாயத்தை அஞ்சு வருஷமா பழகி வர்றேன்” என்றபடி வள்ளிமதுரம் கிராம எல்லையில் பரந்துகிடந்த தனது வயலைச் சுற்றிக் காண்பித்தார் கதிர்வேல்.

மஞ்சளும் ஊடுபயிராக வெங்காயமும் பயிரிட்டப்பட்டிருந்த வயல், மழையின்மையால் ஈரம் கண்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் பசுமை யாகவும் அடிமண் காய்ச்சல் இன்றியும் காணப்படுகிறது. “இதுவே ரசாயன உரம் போட்ட வயலாக இருந்தால், அந்த உப்பின் வெப்பத்தில் பயிர்கள் இந்நேரம் காய்ந்து போயிருக்கும். 3 வருடமாக மாட்டு எருவில் உரமூட்டிய வயல் இப்போது மழை தள்ளிப்போனாலும் பயிர்களைப் பாதுகாத்து வருது” என்றபடி வெங்காயப் பயிரின் தழைகளைக் கோதி விடுகிறார். 

பரந்த பரப்பில் விரிந்த விவசாயம்

விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஆடு மாடு வளர்ப்பு, வயல்வெளி வாசம் என வளர்ந்த கதிர்வேலுக்கு இளம்பிராயம் தொட்டே வேளாண்மையில் ஈடுபாடு அதிகம். ஆனால் நடைமுறையில் அதில் உழைப்புக்கான பலன் இல்லாததும், விவசாயப் பெருங்குடி மக்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் அல்லாடி வாழ்க்கையில் உயர முடியாததும் அவரை யோசிக்க வைத்தது. ஐ.டி.ஐ. படிப்பு முடித்ததும் ஊரின் வழக்கமாக இவரும் பிழைப்புக்காக சிங்கப்பூர் போனார்.

ஏழு வருடம் கழித்து ஊர் திரும்பியவர் வயலில் முழுமனதோடு களமிறங்கினார். வெளிநாட்டில் உழைத்துச் சேமித்ததை எல்லாம் சொந்த வயலில் கொட்டினார். கூடுதலாக நிலம் வாங்கியும் 2 கிணறுகளுடன் 10 ஏக்கருக்கு விவசாயப் பரப்பை அதிகரித்தார். 40 மாடுகளை வளர்த்து அவற்றின் மூலம் கிடைக்கும் இயற்கை உரத்தால் வயலுக்கு உயிர் சேர்த்தார்.

சொந்த நிலம் மட்டுமன்றி குத்தகை நிலங்களையும் சேர்த்துக்கொண்டு தற்போது 35 ஏக்கரில் விவசாயத்தை முன்னெடுக்கிறார். ”எங்கள் பகுதியின் விவசாய குடும்பங்களில் 40 வயசுக்கு உட்பட்ட விவசாயிகளை விரல் விட்டு எண்ணலாம். அதாவது அடுத்த ஒரு தலைமுறையே விவசாயத்தை தலைமுழுகிடுச்சு. வேலை தேடி வெளியே போனவங்களோட காடுகள்ல சீமைக் கருவேலமும் முள்வேலி மரங்களும் மண்டிக் கிடந்தன. மாநிலம் முழுக்க அவற்றை அகற்றும் பிரச்சாரம் நடந்தபோது நானும் அதில் பங்கெடுத்தேன்.

கருவேல மரத்தை விறகாக்கினால் வருஷத்துக்கு பத்தாயிரமாவது கிடைக்குதேன்னு அவற்றை அகற்ற ஊர் மக்கள் மறுத்தாங்க. அவர்களில் சிலரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில், வயலை என்னிடமே குத்தகைக்கு விட்டுட்டாங்க. எல்லா வயலையும் திருத்தி ஏரிகளில் இருந்து வண்டல் மண் அடிச்சு உயிரூட்டினேன். என்னோட சொந்த நிலத்தில் செலவில்லாத இயற்கை விவசாயத்தை மக்களுக்கு காட்சி பொருளாக்கினேன்.

இப்போ கணிசமான இளைஞர்கள் விவசாயத்துக்குத் திரும்பி வர்றாங்க. என்னோட மாட்டுப் பண்ணையையும் அதில் கிடைக்கும் வருமானத்தையும் பார்த்துட்டு வீட்டுக்கு வீடு கறவை மாடுகள் வளர்க்க ஆரம்பிச்சிருக்காங்க” என்று பெருமிதப்படுகிறார் கதிர்வேல்.

மதிப்புக்கூட்டலில் கூடும் லாபம்

இவரது பரந்த வயல் பரப்புகளில் நெல், கடலை, மஞ்சள், வெங்காயம், கரும்பு என ரகம் ரகமாய் விளைபொருட்கள் பயிர்விட்டிருக்கின்றன. விதைப்பு, களையெடுப்பு, அறுவடைக்கு மட்டுமே ஆட்கூலி செலவு ஆகிறது. மற்றபடி மாட்டுப் பண்ணையில் சேகரமாகும் எருவும், சொந்தத் தயாரிப்பிலான ஜீவாமிர்தக் கரைசலுமே இவரது இடுபொருட்கள். சமயங்களில் பண்ணையில் சேரும் கோமயத்தை அப்படியே வயல் பாசனத்தில் நேரடியாகக் கலந்துவிடுவதும் உண்டு.

செலவில்லாத விவசாயம் என்பதுடன், விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பதாலும் இவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. நெல்லைக் கைக்குத்தல் அரிசியாக்கினால் தேடி வந்து வாங்கிக் கொள்கிறார்களாம். கூடவே மாடுகளுக்குத் தரமான தவிடும் கிடைத்துவிடுகிறது. இது போலவே கடலை எண்ணெய்யும் விற்று தீர்வதுடன், மாட்டுக்குப் புண்ணாக்கும் சேர்கிறது. இப்படித் தரமான தீவனம் கிடைப்பதால் 10 கறவை மாடுகள் தினத்துக்கு 120 லிட்டருக்கும் மேல் கறந்து கதிர்வேலின் கைகளை வலுவூட்டுகின்றன.

உருவாகும் ஒருங்கிணைந்த பண்ணையம்

“கடந்த 3 வருஷமா சரியான மழையில்லை. ஊர் ஏரியும் வறண்டு போச்சு. மனம் சோர்ந்து போகாம இந்தக் கறவை மாடுகள்தான் எங்களைக் காப்பாத்துது. இந்த நம்பிக்கையில் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய ஆர்வம் அதிகமாகி, வயலில் மீன் வளர்ப்புக்கு எனத் தனியாகப் பண்ணைக் குட்டையும் இப்போ அமைச்சிருக்கேன். இவையனைத்தும் நடைமுறைக்கு வரும்போது என் வயலின் முகமும், வருமானமும் புதுப் பொலிவுக்குப் போயிடும்” என்று நம்பிக்கையுடன் அவற்றைச் சுற்றிக்காட்டினார் கதிர்வேல். அவரது பெற்றோர் கவனிப்பில் பண்ணை மாடுகள் செழிப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்கின்றன.

அனுபவங்கள் மதிப்பானவை

33 வயதாகும் கதிர்வேல் தனது விவசாய முயற்சிகளில் சொதப்பியும் இருக்கிறார். பட்டம் தவறியும், பருவம் தவறியுமாக சில கணிப்புகள் பிசகியதில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமல் போயிருக்கிறது. ஆனபோதும் இவரது இயற்கை விவசாயத்தில் முதலீடு குறைவு என்பதால், இழப்புகள் கையைக் கடிக்கவில்லை. சிலரது வழிகாட்டுதலில் மண்புழு உரம் தயாரிப்புக்கான முயற்சிகளில் மண்ணுக்கு பொருந்தாத மண்புழுக்களைத் தொட்டிகள் அமைத்து வளர்த்து வந்தவர் பின்னர் சுதாரித்து அவற்றை கைவிட்டிருக்கிறார். “விவசாயத்தில் ஆரம்ப பாடங்களும் அனுபவங்களும் விளைச்சலில் கிடைக்கும் லாபத்தைவிட மதிப்பானவை” என்கிறார் கதிர்வேல்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x