Published : 02 Feb 2019 12:09 PM
Last Updated : 02 Feb 2019 12:09 PM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 21: யானையின் அடிச்சுவட்டில்

காட்டுயிரினம் ஒன்றைப் பற்றி இப்போது வரும் ஆய்வு நூல்களெல்லாம் அந்த இனம் - ஒரு மானோ ஒரு பெரும்பூனையோ - இன்று எந்த நிலையில் இருக்கிறது? அதன் நடத்தையியலின் சிறப்புகள் என்ன? அதன் வாழிடத்தின் நிலை என்ன? அந்த விலங்குக்கு என்னென்ன ஆபத்து என்ற ரீதியில் எழுதப்படுகின்றன. அரிதாகவே ஒரு விலங்கின் வரலாறு பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஜெய்ப்பூரில் வசிக்கும் திவ்யபானு சிங் சிவிங்கிப்புலியின் வரலாறு பற்றி ஆய்வு நடத்தி, எழிலார்ந்த அந்தப் பெரும்பூனை எவ்வாறு இந்தியாவில் அற்றுப்போயிற்று என்பதை விளக்கி ‘End of the Trail’ என்ற நூலை எழுதினார். அந்த நூல் பெரும் கவனத்தை ஈர்த்தது. பின்னர் ஆசிய சிங்கத்தின் வரலாற்றை அவரே ஒரு நூலாக எழுதினார். இப்போது இந்திய வரலாற்று மாணவர்களுக்குப் பரிச்சயமான தாமஸ் டிரவுட்மன் ‘Elephants and Kings: An Environmental History’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூலில் இவரது கவனம் போர் யானைகளைப் பற்றியது.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றுப் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு மெளரிய மன்னர்கள் எவ்வாறு யானைகளைப் போருக்குப் பயன்படுத்தினார்கள் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். அதிலிருந்து பிறந்ததுதான் இந்தப் புத்தகம்.

டிரவுட்மனும் தமிழும்

தமிழ்நாட்டைப் பற்றிய இவரது ஆய்வுகள் பிரசித்தமானவை. மக்களிடையிலான உறவுகள் பற்றி ‘Dravidian Kinship’ (1981) என்ற நூலை எழுதினார். பின்னர் திருக்குறளை முதன்முதலில் மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல், அவர் ஒரு சமணர் என்று சுட்டிக்காட்டிய எஃப்.டபிள்யூ. எல்லிஸ் பற்றிய டிரவுட்மேனின் நூல் ‘Languages and Nations. The Dravidian Proof in Colonial Madras’ (2006) வெளிவந்தது. இந்நூல் இராம.சுந்தரத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு ‘திராவிடச் சான்று: எல்லிஸும் திராவிட மொழிகளும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

சம்ஸ்கிருத மொழியில் புலமை பெற்ற டிரவுட்மன் அர்த்தசாஸ்திரத்தை அலசி ஆராய்ந்து, அது பற்றி ஒரு நூலை எழுதியுள்ளார். பண்டைய சம்ஸ்கிருதப் பதிவுகளில் யானைகளைத் தேடி அலைந்துள்ளார். சங்க இலக்கியங்களையும் ஆராய்ந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குமுன், ஆசிய யானை இருக்கும் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவரங்களைத் திரட்டினார்.

பழக்கப்பட்ட யானைகள்

அகநானூற்றில் காட்டுயானைகளைப் பற்றியும் புறநானூற்றில் பழக்கப்பட்ட யானைகளைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். பண்டைத் தமிழகத்தில் காட்டுயானைகளை மலைப்பிரதேச (குறிஞ்சிப் பகுதி) மக்கள் வேட்டையாடியுள்ளனர். அவற்றின் தந்தங்களைப் பயன்படுத்தியதோடு, அவற்றின் இறைச்சியும் உண்ணப்பட்டது என்கிறார். யானைகளை வேட்டையாடியவர்கள், யானைகளை எந்த வேலைக்கும் பழக்கவில்லை. அதைச் செய்தது அரசர்களும் போர்வீரர்களும்தான்.

போர்க்களத்தில் யானையை எதிர்கொள்ளும் வீரர்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. போரில் முக்கியமான ஒரு ஆயுதமாக ஈட்டி விளங்கியது என்கிறார் டிரவுட்மன். கவி பொன்முடியார் எழுதியுள்ள புறநானூறுப் பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே

வேல் வடித்துக்கொடுத்தல்

  கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே

ஒளிருவாள் அருஞ்சமர் முருக்கி

களிறு எறிந்து பெயர்தல்

  காளைக்கு கடனே.’

காலாட்படை, குதிரைப்படை, தேர் ஆகியவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஒரு மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் எண்ணிக்கையில் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தார்கள். ஆனால், வளர்ந்து முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக்கொண்டு வந்து பழக்கினார்கள்.

முன்னரே பணிசெய்து கொண்டிருந்த யானைகளிடமிருந்து காப்பிட இனப்பெருக்கம் செய்யவில்லை. ஏனென்றால், யானைக் கன்று முழு வளர்ச்சியடைய இருபது ஆண்டுகள் ஆகும். அதற்குத் தீவனம் போட வேண்டும். அது மட்டுமல்ல ஒரு பெட்டை யானை ஒரு நேரத்தில் ஒரு கன்று மட்டுமே ஈனும். ஆகவே, காட்டிலிருக்கும் யானைகளைப் பிடித்துப் பழக்குவது எளிதானது.

மீண்டும் யானை வேட்டை

ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளாக ஆசியாவின் பல போர்க்களங்களில் யானைகள் இயங்கின. முற்றுகையிடுதலிலும் கோட்டைக் கொத்தளங்களைத் தாக்குவதிலும் யானைகள் முக்கியப் பங்காற்றின. ஒளவையார் (1952) படத்தில் பாரியின் நாட்டை மீட்க யானைப்படைகள் சோழரின் கோட்டையைத் தகர்ப்பது, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சிறப்பான காட்சி.

இன்றைய போர்க்களத்தில் பீரங்கிகள் செயல்படுவதுபோல அந்தக் காலத்தில் யானைகள் இயங்கின. இந்திய அரசர்கள் யானையின் சிறப்பை உணர்ந்திருந்தார்கள். ஆகவே, காடுகளைப் பாதுகாப்பதன் தேவையை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்கிறார் டிரவுட்மன்.

vaangame-2jpg

தமிழக அரசர்கள் யானையை வேட்டையாடவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். அது காலனி ஆதிக்கக் காலத்தில் நடந்தது. ஆயிரக்கணக்கான யானைகள் அப்போது கொல்லப்பட்டன. அதை எப்படிச் சுடுவது என்று புத்தகங்கள்கூட வெளிவந்துள்ளன. இதைக் கவனித்த பிரிட்டிஷ் அரசால் 1871-லேயே மதராஸ் ராஜதானியில் யானைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்பட்டது. என்றாலும் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று யானை வேட்டை தொடர்ந்தது.

அது மட்டுமல்ல பிரிட்டிஷார் காலத்தில் இந்தியாவில் யானைகள் மேல் சவாரிசெய்து காட்டுக்குள் சென்று வேட்டையாடினார்கள். யானையின் மீதமர்ந்து சுடுவதற்கென ‘Howdah pistol’ போன்ற பிரத்யேகத் துப்பாக்கிகள் உருவாக்கப்பட்டன. இது போன்ற செயல்பாடுகளால் காட்டு யானைகளின் எண்ணிக்கை சரிந்தது.

யானை செயல்திட்டம்

இந்தப் பின்னணியில் வேங்கைப் புலிக்கு ஏற்படுத்தியதுபோல, 1992இல் ‘Project Elephant’ என்ற செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இன்று இந்தியக் காடுகளில் 28,000 யானைகளும் வெளியில் 3,500 பழக்கப்படுத்தப்பட்ட யானைகளும் இருக்கின்றன. மயக்கத் தோட்டாக்கள், ரேடியோ காலர், தொலையுணர் கருவிகள், செயற்கைக்கோள் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் போன்ற நவீன வசதிகள் இன்றுள்ளன.

முப்பதாண்டுகளுக்கும் முன் திராவிட உறவுகள் பற்றி ஆய்வு செய்யவந்த டிரவுட்மன், சென்னையில் ஓராண்டு தங்கியிருந்தபோது அவரை நான் அறிந்துகொண்டேன். பின் அமெரிக்கா செல்லும் போதெல்லாம் அவரை நான் சந்தித்தேன். அவரது நேர்மை, எளிமை, கூர்மதி போன்றவை என்னைப் பெரிதும் ஈர்த்தன. அவரது யானை பற்றிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவது மகிழ்ச்சியான செய்தி. இதில் சிறப்பு என்னவென்றால், தமிழிலும் காட்டுயிரியலிலும் தேர்ச்சிபெற்ற ஒருவர் அதை மொழியாக்கம் செய்துகொண்டிருப்பதுதான்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
| படம்: சு.தியடோர் பாஸ்கரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x