Published : 12 Jan 2019 10:39 AM
Last Updated : 12 Jan 2019 10:42 AM
நானும் காட்டுயிர் ஒளிப்பட விற்பன்னர் ஜெயராமனும் கோவைக்கு அருகில் உள்ள ஒரு புதர்காட்டுப் பகுதிக்குப் போயிருந்தோம். தரையில் ஒரு சிலந்திக் கூட்டைப் பார்த்து, அதனருகே உட்கார்ந்து ஒரு சிறு குச்சியால் கூட்டின் நுழைவாயிலை அவர் தட்டினார், வலையில் ஏதோ இரை சிக்கிக் கொண்டதென்ற எதிர்பார்ப்புடன் குபுக்கென்று ஒரு சிலந்தி வெளியில் வந்து நின்றது. இதுதான் Wolf spider என்று எனக்கு அறிமுகப்படுத்தினார், சிற்றுயிர்களின் உலகில் சஞ்சரிக்கும் ஜெயராமன்.
மேற்குத் தொடர்ச்சி மலை எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடம். தாவரங்கள், பறவைகள், பாலூட்டிகள் ஆகியவையும் சிற்றுயிர்களும் மிகுந்த நிலப்பரப்பு. உலகிலேயே பல்லுயிரியம் அடர்த்தியாக இருக்கும் பதினெட்டு இடங்களில் ஒன்று என்று உயிரியலாளர்கள் இப்பகுதியைப் போற்றுகிறார்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்குமுன் இங்கு வந்த ஐரோப்பிய அறிவியலாளர்கள் இந்த உயிரின வளத்தைக் கண்டு மிரண்டு போனார்கள். ஆனால், அதே காலகட்டத்தில் அந்த வாழிடங்களின் சீரழிவும் தொடங்கியது.
ஊழிக்காலமாய்த் தழைத்திருந்த முதிர்ந்த மழைக்காடுகள், தேயிலை போன்ற தோட்டப் பயிர்களுக்காகச் சிதைக்கப்பட்டன. வெட்டுமரத்தொழில், அணை, சாலை ஆகியவை எஞ்சிய வாழிடத்தைக் காவுகொண்டன. என்றாலும், ஆங்காங்கே சிறுசிறு தீவுகள்போல மழைக்காடுகளும் இலையுதிர்க் காடுகளும் விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில்தான் நம் நாட்டுச் சரணாலயங்கள் இருக்கின்றன. இன்றும் அறிவுலகுக்குப் புதிதான உயிரினங்கள், தவளைகள். மீன்கள், பல்லிகள் போன்ற சிற்றுயிர்கள் இங்குக் கண்டறியப்படுகின்றன.
அந்நிய அங்கீகாரம்
அண்மையில் ஒரு புதிய தவளை வகையை உயிரியலாளர் ஒருவர் இங்குக் கண்டறிந்துள்ளார். மழைக்காடுகளும் மனிதர் அண்டா ஈரமான இலையுதிர்க் காடுகளிலும் வாழும் இத்தவளை, சோலைக்காடுகளின் பல்லுயிரிய வளத்துக்கு ஒரு குறியீடு. இந்தக் கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர், கோயம்புத்தூரைச் சேர்ந்த உயிரியலாளர் கே. ஜெயராமன் எனும் ஒளிப்பட விற்பன்னர். பிரிட்டிஷாருக்குப் பின், நம் நாட்டில் முறையான சிற்றுயிர் மதிப்பாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் ஜெயராமன்.
புலி, யானை போன்ற விலங்குகள்தாம் காட்டுயிர் என்றறியப்பட்டிருந்த அந்தக் காலத்தில் சிற்றுயிர்களை, அதிலும் பூச்சிகளைப் படமெடுத்துக்கொண்டிருந்த (Macrophotography) ஜெயராமன், ஆரம்பத்தில் நிறையச் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாற்பது ஆண்டுகளாக இத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் அவருக்கு நம் நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
பல்லுயிரியம் எனும் கருத்தாக்கம் பரவிக்கொண்டிருந்த அந்த ஆண்டுகளில் அவர் பன்னாட்டளவில் கவனிக்கப்படலானார். வெகுசீக்கிரமே இவரது பங்களிப்பைச் சிலாகித்து ‘Associate of the Royal Photography Society’ என்ற கெளரவம் லண்டலிலிருந்து இவருக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல விருதுகள் அவரை வந்தடைந்தன.
பெயர்க் குழப்பங்கள்
பூச்சிகளை ஆய்வுசெய்பவர்களுக்கும் இவரது படங்கள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன. கல்விப் புலத்தில் அறிவியல் ஆய்வில் ஈடுபட்ட பலர், இவரது உதவியையும் பட்டறிவையும் நாட ஆரம்பித்தனர். கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரி அண்மையில் நிறுவிய பூச்சிகள் அருங்காட்சியத்தை அமைக்க ஜெயராமன் உதவியுள்ளார். சிற்றுயிர்களை ஒளிப்படமெடுப்பதில் ஈடுபட்டிருந்த இவரது ஆர்வம், வகைப்பாட்டியலுக்கு இட்டுச்சென்றது. இன்று நாட்டின் மூத்த வகைப்பாட்டியலாளர்களில் (Taxonomist) ஒருவராக இவர் அறியப்படுகிறார்.
உயினங்களை இனங்கண்டு ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட அறிவியல் பெயரைக் கொடுப்பதுதான் வகைப்பாட்டியல். எதற்காக அறிவியல் பெயர்? உலகெங்கும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான பெயர் இருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு உயிரினத்துக்கு வெவ்வேறு மொழிகளில் பல பெயர்கள் இருக்கலாம்.
ஒரே மொழியில்கூடப் பல பெயர்கள் இருக்கலாம். மிளா எனும் நம்மூர் மான், கடம்பை மான் என்றும் கடத்தை என்றும் அறியப்படுகிறது ஆங்கிலத்தில் சாம்பர் என்று பெயர். வேறுபட்ட சில உயிரினங்கள் ஒரே பெயரில் அறியப்படலாம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இருக்கும் ஆறு வகை மீன்கொத்திகளுக்கும் மக்களிடையே ஒரே பெயர்தான் - மீன்கொத்தி.
இரு சொல் பெயரிடும் முறை
இந்தக் குழப்பத்தைப் போக்கி, அவற்றைத் தனிப்படுத்திக் காட்ட ஒவ்வொன்றுக்கும் அறிவியல் பெயர் ஒன்று தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து அதற்கு ஒரு வழி கண்டவர் கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus. 1707-1778) என்ற ஸ்வீடன் தாவரவியலாளர்.
இவர் எழுதிய ‘System of Nature’ என்ற நூல்தான் வகைப்பாட்டியலுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்தது. எல்லா நாடுகளும் இவர் வகுத்த வகைப்பாட்டை ஏற்றுக்கொண்டன. இவர் கொடுத்த அறிவியல் பெயர்கள், இரு பகுதிகளைக் கொண்டவை. முதல் சொல் பேரினத்தைக் (Genus) குறிக்கும். அடுத்த சொல் அந்தக் குறிப்பிட்ட உயிரினம்-தாவர வகையைக் (species) -சிற்றினத்தை- குறிக்கும்.
வேங்கைப்புலியின் அறிவியல் பெயர் Panthera tigris. சிறுத்தையின் பெயர் Panthera pardus. இரண்டும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த இரண்டு பெரும்பூனைகளுக்குமே தமிழில் பல பெயர்கள் உண்டு. இதனால் ஏற்படும் குழப்பத்தை அறிவியல் பெயர் போக்குகிறது. அறிவியல் பெயரின் இரு சொற்களுமே லத்தீன் மொழியில் இருப்பது சீர்மைக்காக எடுக்கப்பட்ட முடிவு. மனிதருக்கும் அறிவியல் பெயர் ஒன்று உண்டு, அது Homo sapien.
தமிழ்ப் பாரம்பரியத்தில் வேறு விதமாக வகைப்பாடு இருந்திருக்கிறது என்பதைத் தொல்காப்பியம் பதிவுசெய்கிறது. பொருளதிகாரம் பகுதியில் மரபியல் என்ற தலைப்பின் கீழ். ஓரறிவு படைத்த மரங்களிலிருந்து, ஆறறிவு கொண்ட மனிதர்வரை உயிரினங்கள் ஆறு வகையாகப் பிரித்து அறியப்படுகின்றன. இந்தப் பகுப்பைக் காட்டும் இவ்வரிகளைப் பாருங்கள்.
புல்லும் மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்
பிறப்பே (1527)
பெயர் தாங்கிய உயிரினம்
வகைப்பாட்டியலுக்கு ஜெயராமனின் பங்களிப்பைப் போற்றி இரு உயிரினங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனைமலைக் காட்டில் உள்ள ஒரு தவளை Raorchestes jayarami, என்றும், ஒரு சிலந்தி Myrmarachne jayaramani என்றும் பெயரிடப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களைக் கண்டறிய, பதிவுசெய்ய இவர் செய்த உதவிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது.
புத்தகக் காட்சியில் சூழலியல் வெளியீடுகள் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி பேராசிரியர் த. முருகவேளின் ‘வான்வெளியில் புலிகள்‘ (உயிர் பதிப்பகம்), முனைவர் மா. மாசிலாமணி செல்வத்தின் ‘அலையாத்திக் காடுகள்‘ (காக்கைக் கூடு) ஆகிய இரண்டு சூழலியல் நூல்கள் புதிதாக வெளியாகியுள்ளன. இந்த இரண்டு நூல்களும் காக்கைக்கூடு (71), ஒயாசிஸ் புக்ஸ் (290) ஆகிய அரங்குகளில் கிடைக்கும் |
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com | படம்: சு.தியடோர் பாஸ்கரன்