Published : 19 Jan 2019 11:48 AM
Last Updated : 19 Jan 2019 11:48 AM

அமெரிக்க ஈயைக் கட்டுப்படுத்தும் மஞ்சள் படுதா

கோவை மதுக்கரை சுற்றுவட்டாரக் கிராமங்களான நாச்சிபாளையம், வழுக்குப்பாறை, மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களில் உள்ள தென்னந் தோப்புகளில் 5 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட மஞ்சள் வண்ணப் படுதாக்களைக் கட்டிவைத்திருக்கின்றனர். வழுக்குப்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமியிடம் இது பற்றிக் கேட்டால், ‘‘இந்த படுதா கட்டறது இங்கே ஆரம்பம்தான்.

சீக்கிரமே தமிழ்நாட்டுல மூலை முடுக்கெல்லாம் கட்டுவார்கள் பாருங்கள்!’’ எனச் சொன்னார். அதற்குப் பிறகுதான் தெரிந்தது. இது தென்னைகளைத் தாக்கும் அமெரிக்க வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறை என்று.

‘எந் தோப்புல ஆயிரம் தென்னை மரங்க இருக்கு. அதுல 70 சதவீதம் மரங்களோட ஓலைக கருப்பாகி காய்ந்து விழ ஆரம்பிச்சிருச்சு. 20 மரம் சுத்தமா பட்டுப் போச்சு. ஒரு ஏக்கருக்கு 70 மரம். ஒரு மரத்துல 125 முதல் 150 காய்க வரும். இந்த வருஷம் மரத்துக்கு 70 கூட தேறலை. அதுக்கு இந்த வெள்ளைப்பூச்சிதான் காரணம். அதுக்கான பூச்சி மருந்தெல்லாம் அடிச்சுப் பார்த்துட்டேன். ஆனா, அந்த மருந்தை சாப்பிட்டுட்டே பூச்சிகப் பெருக ஆரம்பிச்சிருச்சு. அப்புறந்தான் வேளாண் அதிகாரிக இந்த படுதா முறைய சொன்னாங்க. கட்டிகிட்டிருக்கேன்!’’ என்று சொல்லி நிறுத்தினார் அவர். தொடர்ந்து பேசினார் இவரின் பக்கத்து தோட்டத்துக்காரரான பாலு.

‘‘ என் தோப்புல 1,300 தென்னை மரங்க இருக்கு. அதுல 1,200 மரங்கள்ல இந்த பூச்சிகதான். அதுல 56 மரங்கள் சுத்தமா பட்டுப் போச்சு. இதெல்லாம் இந்த ஆறு மாசத்துல நடந்தது. இது பச்சையா இருக்கிற தென்னை மட்டைய கருப்பா மாத்திடுது. அப்புறம் ஓலைக காய்ந்து விழுந்து கடைசியா மரமே மொட்டை மரமாயிடுது. ரூகோஸ்ங்கிற இந்த வெள்ளை ஈயையே உண்டு வாழும் ஒட்டுண்ணி ‘என்கார்ஸியா’.

நம்ம ரூகோஸ்க்கு பூச்சி மருந்தை அடிச்சா என்கார்சியா ஒட்டுண்ணிய அழிச்சிடுது. இதைத்தான் தென்னை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. அதனாலதான் ரூகோஸ்க்கு எந்த மருந்தும் அடிக்க வேண்டாம்; மஞ்சள் படுதா கட்டச் சொல்றாங்க வேளாண் அதிகாரிகள்!” என்றவர், மஞ்சள் படுதாவை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அது எப்படி ரூகோஸ் பூச்சியைக் கொல்கிறது என்பதையும் விளக்கினார்.

‘‘குருத்துகள், ஓலைகளின் கீழே ஒட்டியிருக்கும் வெள்ளை ஈ பூச்சிகள் ராத்திரி நேரத்திலதான் பறக்குது. அதுகளை மஞ்சள் நிறம் ரொம்ப ஈர்க்குது. அதனால மஞ்சள் வண்ண படுதாவில் எண்ணெய் தடவி கட்டீட்டா, பறக்கிற பூச்சிக எல்லாம் இதுல ஒட்டி அழியுது. அதே நேரத்துல ஒட்டுண்ணி என்கார்சியா அதிகமாகி வெள்ளைப் பூச்சியோட முட்டைகளை, குஞ்சுகளை சாப்பிட்டு அழிக்கிறது. இதை ஆராய்ந்து கண்டு பிடிச்சது வேளாண் விஞ்ஞானிகள்!’’ என்றார்.

அதிகமாக பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்துவதுதான் இந்த அமெரிக்க வெள்ளை ஈ அதிகரிப்பதற்குக் காரணம் என வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் சொல்கிறார்,‘‘அதிகமா பூச்சி கொல்லிகளை பயன்படுத்தியதால் என்கார்சியா ஒட்டுண்ணி அழிஞ்சிருச்சு. அதனால முதல்வேளையா பூச்சி மருந்து அடிப்பதை நிறுத்தணும். மஞ்சப் படுதாவை கட்டி வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தணும். அதுக்காக விவசாயிகளிடம் நேரியாப் போய்க் கூட்டம் போட்டு பேசிவருகிறோம். மதுக்கரை ஒன்றியத்தில் மட்டும் ரெண்டு மாசத்தில் 15 இடங்களில் இப்படிக் கூட்டம் போட்டு விட்டோம்” என்கிறார்.

manjal-4jpg

‘‘இதன் பெயர் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ. இந்தப் பூச்சியின் பூர்விகம் மத்திய அமெரிக்கா. அங்கே 2000-ம் ஆண்டில் இருந்தது. இந்தியாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் பரவியது. தமிழகத்தில் 2016ல் வந்தது. கோவை, தஞ்சை, திருப்பூர், குமரி, திண்டுக்கல், தேனி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் இருக்கு. இது 140 பயிர் வகைல இருக்கு.

கடைசியாகத்தான் தென்னைய தாக்கியிருக்கு” என இந்த வெள்ளை ஈ குறித்துப் பகிர்கிறார் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜமாணிக்கம். மேலும் பேசிய அவர், “இலைகளின் சாறை உறிஞ்சி வாழ்வதோடு, பிசின் போன்ற கழிவை விடுவதால் அவை இலைகளின் அடியில் கறுப்பாகப் படிந்து பச்சையம் தயாரிக்க விடாமல் செய்துவிடுகிறது” என்றார்அவர்.

வேறு முறைகள்

மேலும் பேசிய அவர் மஞ்சள் படுதா அல்லாமல் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த வேறு சில முறைகளையும் முன்மொழிந்தார். அவற்றுள் ஒன்று என்கார்சியா முட்டை முறை. ஆழியாரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஒட்டுண்ணி என்கார்சியா முட்டைகள் விவசாயிகளுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதை வாங்கி பூச்சிகள் உள்ள தென்னை மரங்களில் ஓலைகளின் அடிப்புறத்தில் கட்டிவிட்டால் போதும். அந்த முட்டைகளில் பொறிபடும் குஞ்சுகள் ரூகோஸ் முட்டைகளை, லார்வா குஞ்சுகளைச் சாப்பிட்டு அழித்து விடும்.

அடுத்தது ‘கிரைசோபைட்’என்ற இரை விழுங்கிகள் மூலம் அழிப்பது. இந்த பூச்சிகளின் முட்டை, லார்வா, குஞ்சு, ஈ என வரும் பருவங்களை நன்றாக சாப்பிடுகிறது.அதனால் அதை ரூகோஸ் பாதித்த தோப்புகளில் ஹெக்டேருக்கு 1,000 எண்ணிக்கையில் விடலாம். தவிர ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணெய் 30 மி.லி. அல்லது அசாரகட்டின் 1 சதம் மருந்தை ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்பக்கத்தில் அடிக்கலாம்.

மட்டையின் கீழ் உள்ள கரும்பூசாணம்தான் இலைகளில் பச்சையத்தைத் தயாரிக்க விடாமல் செய்கிறது. அதைச் சரிசெய்ய மைதா மாவைப் பசை காய்ச்சி அதிலிருந்து 25 கிராம் பசையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து ஓலைகளில் நன்றாகப் படுமாறு அடிக்கலாம். இதனால் அந்தப் பசை திரவம் படிந்து அப்படியே வரண்டு வெள்ளை ஈ பூச்சிகளையும் கொன்று கரும் பூசாணத்துடன் கீழே உதிர்ந்து விடும்.ராஜேந்திரன்கிருஷ்ணசாமிபாலு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x