Published : 26 Jan 2019 12:16 pm

Updated : 26 Jan 2019 12:16 pm

 

Published : 26 Jan 2019 12:16 PM
Last Updated : 26 Jan 2019 12:16 PM

மாற்றம் வரும் முன்பே மாற்றிய இளைஞர்

தமிழக அரசு 05.06.2018 அன்று சட்டசபையில் “ஓருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது”. இது 01.01.2019 முதல் அமலுக்கு வரும் என அறிவித்தது. அன்று முதல் தமிழக மக்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பெரும்பாலான கடைகளில் துணிப்பை கொண்டுவருமாறு தங்கள் வாடிக்கை யாளர்களை அறிவுறுத்த ஆரம்பித்துவிட்டனர்.

2019-ம் ஆண்டை பிளாஸ்டிக்குக்கு எதிரான ஒரு புதிய தொடக்கமாக தமிழகம் மாற்றியுள்ளது. தடை மட்டும் விதித்தால் போதுமா, அதற்கான மாற்று வழி எங்கே என பிளாஸ்டிக் தொழிற்சாலை உரிமையாளர்கள் கேட்கத் தொடங்கினர். ஆனால், இவையெல்லாம் தொடங்கும் முன்னரே கோயம்புத்தூரில் வாழும் இளைஞனான சிபிச்செல்வன் என்பவர் பிளாஸ்டிக்கு மாற்றாக ஒரு புதிய பையை கோயம்புத்தூரில் அறிமுகம் செய்துவைத்து விட்டார்.

சிபி செல்வன் கோயம்புத்தூரில் பிறந்து, அமெரிக்காவின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் பட்டம்பெற்று, அமெரிக்க வேலையை உதறிவிட்டுச் சொந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கியதுதான் பிளாஸ்டிக் பைகள் போன்றே தோற்றமளிக்கும் ஸ்டார்ச் பைகள்.

அமெரிக்கப் பயணம்

சிறு வயது முதலே சிபிக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை அவர் படித்த செயின்ட் ஜோசஃப் பள்ளி அளித்துள்ளது. அதேபோல் அவர் வீட்டிலும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர்களும் வழங்கிவந்துள்ளனர். இதுபோகத் தமிழ்நாட்டில் வெறும் 5-10% வரைதான் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு செல்கிறது என்பதையும் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததையும் கண்ட சிபிச்செல்வன் பிளாஸ்டிக் இல்லாத பைகள் வேண்டும் என முடிவு செய்தார். அவருக்குத் துணையாகக் குடும்பத்தினரும் நண்பர்களும் இருந்தனர்.

அமெரிக்காவில் சிபி படித்துகொண்டிருந்தபோது அந்நாட்டு அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ஸ்டார்ச் பைகளை அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் இம்மாதிரி ஒரு திட்டம் இல்லாததைக் கண்டு வருந்திய சிபி, தன் படிப்பை முடித்து சிறிதுகாலம் அமெரிக்காவில் தங்கியிருந்து ஸ்டார்ச் பைகள் குறித்து ஆராய்ச்சிசெய்தார்.

ஸ்டார்ச் பைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்தவுடன் தன் ஆய்வை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். தன் ஆய்வின் மூலம் உருவாக்கிய பைகளை மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப மையத்திற்கு {CIPET} அனுப்பினார். அதை ஆய்வு செய்தபின் முற்றிலும் பிளாஸ்டிக் கலப்படமற்ற பைகள் அவை எனச் சான்று அளித்தனர்.

பத்திலிருந்து முப்பது

மத்திய அரசின் சான்றிதழ் பெற்ற பிறகு நிறுவனம் தொடங்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். கோயம்புத்தூரில் உள்ள சின்னப்பாளையம் என்னும் ஊரில் ‘ரெஜினோ வென்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை அமைத்தார். முதலில் வெறும் பத்துப் பேரை மட்டுமே வேலைக்கு வைத்துத் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று முப்பது பேர் வேலைசெய்யும் ஒரு பெரு நிறுவனமாக மாறியுள்ளது.

இவரின் தயாரிப்பின் முக்கியத்துவத்தை அறிந்த மாநகராட்சி, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி மக்களுக்கு இவரின் தயாரிப்பை அறிமுகப்படுத்தியது. அதன்பின் சென்னை மாநகராட்சியும் காஞ்சிபுரம் மாநகராட்சியும் இவரின் பொருட்களைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தின.

plastic-1jpgசிபிச்செல்வன்

பையின் தனித்துவம்

இந்தப் பைகள் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இதன் முக்கிய மூலப்பொருளாக ஸ்டார்ச்சைப் பயன்படுத்துவதாகவும், கொதிக்கும் நீரில் கரையக் கூடியதாகவும் உருவாக்கப் பட்டுள்ளது. சாதாரண நீரிலும் மழை நீரிலும் கரைவதில்லை. இப்பை மற்ற பிளாஸ்டிக் பைகள் போன்றே நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.

நீங்களாக இதைத் தூக்கி மண்ணிலோ நெருப்பிலோ போடாதவரை இது மக்காது. அதேபோல் அறையில் வைத்துப் பல வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். இதை விலங்குகள் உண்டாலும் பிரச்சினையில்லை, இது செரிமானம் ஆகிவிடும். இந்தப் பையில் எண்ணெய்யும் சேகரித்து வைக்கலாம்.

உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம்

சிபி தன் பைகளைச் சின்னப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் உருவாக்கி வெளிநாட்டிலும் இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறார். ஆப்பிரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். இவர் எட்டு விதமான பைகளைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார். இதில் கேரி பேக், தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பைகள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தப் பைகள் பிளாஸ்டிக் பைகளைவிட ஐம்பது சதவீதம் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பிளாஸ்டிக் இல்லாத தமிழகம்

எதிர்காலத்தில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே சிபியின் நோக்கம். அதற்காக அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தன் வீட்டிலும் எந்தவொரு பிளாஸ்டிக் பொருளையும் அவர் பயன்படுத்துவதில்லை. பிளாஸ்டிக்கு மாற்றாக மரப் பொருட்களையும் இரும்புப் பொருட்களையுமே பயன்படுத்துகிறார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பிளாஸ்டிக் தடைபிளாஸ்டிக் மாற்றுசுற்றுச்சூழல் பாதுகாப்புபிளாஸ்டிக் தொழிற்சாலை உரிமையாளர்கள் சிபிச்செல்வன் ஸ்டார்ச் பைகள்பிளாஸ்டிக் மறுசுழற்சிசுற்றுச்சூழல் விழிப்புணர்வு CIPETரெஜினோ வென்சர்ஸ்Regeno venturesRegeno bags இயற்கை பை பிளாஸ்டிக் இல்லாத தமிழகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author